2007 முதல் காசா பகுதியில் ஆட்சிபுரிந்துவரும் ஹமாஸ், கடந்த வார இறுதியில் இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி, நூற்றுக்கணக்கானோரை கொன்றதுடன், எண்ணற்றோரைப் பிணைக் கைதிகளாகப் பிடித்துள்ளது.
முன்னெப்போதுமில்லாத வகையில் எல்லைப் பகுதிக்குள் ஹமாஸ் வீரர்கள் ஊடுருவி இஸ்ரேலில் தாக்குதலை நடத்தியிருப்பது இஸ்ரேலையும் அதன் நட்பு நாடுகளையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மேலும், ஹமாஸ் குழுவினரின் திறன்கள் மற்றும் உத்திகள் பற்றியும் பலவித கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஹமாஸ் என்றால் என்ன?
இஸ்ரேலின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக பரவலான போராட்டங்கள் நடைபெற்ற முதல் எழுச்சிக் காலத்தில், 1987 ஆம் ஆண்டில், காசாவில் வசித்த பாலஸ்தீன அகதியான ஷேக் அகமது யாசின் என்பவரால் ஹமாஸ் அமைப்பு உருவாக்கப்பட்டது.
ஹமாஸ் என்பது இஸ்லாமிய தற்காப்பு இயக்கம் என்பதன் அரபு மொழிச் சுருக்கம். மேலும் உலகின் முக்கியமான சன்னி முஸ்லிம் குழுக்களில் ஒன்றான, 1920களில் எகிப்தில் நிறுவப்பட்ட, முஸ்லிம் சகோதரத்துவம் என்ற அமைப்புடன் இணக்கம் கொண்டிருக்கிறது.
இஸ்ரேலிய அரசை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று உறுதியேற்றுள்ள இந்தக் குழு, பல்வேறு தற்கொலைத் தாக்குதல்களுக்கும் இஸ்ரேலிய வீரர்கள் மற்றும் மக்கள் மீதான மோசமான தாக்குதல்களுக்கும் பொறுப்பேற்றுள்ளது.
1997 ஆம் ஆண்டில், ஹமாஸை ஒரு பயங்கரவாதக் குழுவாக அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவித்தது. ஐரோப்பிய ஒன்றியமும் பிற மேற்கத்திய நாடுகளும்கூட இதை ஒரு பயங்கரவாத அமைப்பாகவே கருதுகின்றன.
2006 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற ஹமாஸ், 2007 ஆம் ஆண்டு காசா பகுதியை உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டிருந்த பாலஸ்தீன அரசிடமிருந்து வன்முறையின் மூலம் கைப்பற்றியது. ஃபதா இயக்கத்தின் பாலஸ்தீன அரசு தற்போது இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் சில தன்னாட்சி பகுதிகளை மட்டும் நிர்வகிக்கிறது.
இதையும் படிக்க | வட அமெரிக்காவில் 22 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனித காலடித் தடங்கள்!
ஹமாஸ் நடவடிக்கைக்குப் பதிலடியாக இஸ்ரேல், காசா பகுதிக்குள் மக்கள் நுழைவதையும் வெளியேறுவதையும் தடுக்கும் வகையிலும் பொருட்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையிலும் முற்றுகையை விதித்துள்ளது. ஹமாஸின் ஆயுத சேகரிப்பைக் கட்டுப்படுத்தவே இந்த முற்றுகை என்றும் இஸ்ரேல் அறிவித்துள்ளது. இதனால் காசாவின் பொருளாதாரம் பாழ்பட்டுள்ளது.. ஒட்டுமொத்தமாக அனைவரையும் இஸ்ரேல் தண்டிப்பதாக பாலஸ்தீனர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஏற்கெனவே, கத்தார், துருக்கி போன்ற அரபு நாடுகளின் ஆதரவைப் பெற்றுள்ள ஹமாஸ், அண்மைக்காலமாக ஈரான் மற்றும் அதன் நட்பு நாடுகளுடனும் நெருக்கமாகியுள்ளது.
ஹமாஸ் தலைவர்கள் யார்?
ஹமாஸின் நிறுவனர் - தலைவரான யாசின் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, சக்கர நாற்காலியில் காலத்தைக் கழித்தவர். இஸ்ரேலிய சிறைகளில் பல ஆண்டுகள் வைக்கப்பட்டிருந்த இவருடைய மேற்பார்வையில்தான் ஹமாஸின் இராணுவ அமைப்பு உருவாக்கப்பட்டது. 1993 இல் தனது முதல் தற்கொலைத் தாக்குதலை இந்த அமைப்பு நடத்தியது.
எப்போதுமே ஹமாஸ் தலைவர்களைக் குறிவைத்துச் செயல்பட்டுவரும் இஸ்ரேலிய படைகள், 2004 இல் யாசினைக் கொன்றன.
இதைத் தொடர்ந்து, ஏற்கெனவே இஸ்ரேலிய படுகொலை முயற்சியில் உயிர்தப்பி, வெளிநாட்டில் வசித்துக்கொண்டிருந்த காலித் மஷால், ஹமாஸ் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்றார்.
காசாவில் வசிக்கும் யெஹ்யா சின்வார் மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் இஸ்மாயில் ஹனியெஹ் ஆகியோர்தான் ஹமாஸின் தற்போதைய தலைவர்கள். இவர்கள், லெபனானின் ஹிஸ்புல்லா உள்பட ஈரான் மற்றும் அதன் நட்பு நாடுகளுடன் உறவைப் பேணுகின்றனர். இதைத் தொடர்ந்து, இந்தக் குழுவின் தலைவர்களில் பலர் பேய்ரூத்துக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
ஹமாஸ் என்ன விரும்புகிறது?
ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகளை விடுவிப்பதற்கான வழிமுறையாக எப்போதும் ஆயுதப் போராட்டத்தையே ஹமாஸ் ஆதரித்து வந்துள்ளதுடன், இஸ்ரேலை அழித்தொழிக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளது.
ஹமாஸ் பல தற்கொலைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. கடந்த காலங்களில் காசாவில் இருந்து இஸ்ரேலுக்குள் பல்லாயிரக்கணக்கான அதிக சக்திவாய்ந்த ஏவுகணைகளைச் செலுத்தியுள்ளது. மேலும் ஆயுதக் கடத்தலுக்காக எகிப்துக்கும் காசாவுக்கும் இடையே சுரங்கப் பாதைகளையும் அமைத்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக, இஸ்ரேலைத் தாக்குவதைவிட காசாவை நிர்வகிப்பதில் ஹமாஸ் கூடுதல் கவனம் செலுத்தியதாகத் தோன்றியது.
இப்போது தாக்குதல் ஏன்?
அண்மைக் காலமாக, பாலஸ்தீனர்கள் தொடர்பாக எந்த விட்டுக்கொடுப்புமில்லாமல் அரபு நாடுகளுடன் இஸ்ரேல் அமைதி ஒப்பந்தங்களைச் செய்து வருகிறது. ஹமாஸின் ஆதரவாளர்களான ஈரானுடைய மோசமான எதிரியான சௌதி அரேபியாவுடன் இஸ்ரேல் ஒப்பந்தம் செய்துகொள்வதற்கான முன்முயற்சிகளை அண்மைக்காலமாக அமெரிக்கா மேற்கொண்டுவருகிறது.
இதனிடையே, பாலஸ்தீன எதிர்ப்புக்கு மத்தியிலும் மேற்குக் கரையில் இஸ்ரேலிய குடியிருப்புகளை உருவாக்கும் நோக்கில் இஸ்ரேலிய அரசு செயல்பட்டு வருகிறது.
இதையும் படிக்க | அரசியல் வியாபாரம்! குஜராத் பாஜக எம்.பி.யின் சர்ச்சைப் பேச்சு!
மேற்குக் கரையில் தீவிரவாதிகளை ஒடுக்குவது, தொடர்ச்சியாக இஸ்ரேலிய சிறைகளிலுள்ள ஆயிரக்கணக்கான கைதிகளைக் கொண்டு குடியேற்றங்களை உருவாக்குவது, காசா முற்றுகை போன்றவையெல்லாமும் ஹமாஸின் தாக்குதலுக்கு முக்கியமான காரணங்களாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
ஹமாஸ் தலைவர்கள், மேற்குக் கரையில் தீவிரவாதிகளை ஒடுக்குவது, குடியேற்றங்களின் தொடர்ச்சியான கட்டுமானம் - சர்வதேச சமூகம் சட்டவிரோதமானது என்று கருதுகிறது - இஸ்ரேலிய சிறைகளில் ஆயிரக்கணக்கான கைதிகள் மற்றும் காசாவின் தொடர்ச்சியான முற்றுகை ஆகியவை தாக்குதல் நடத்த தள்ளியது என்று கூறுகின்றனர்.
தங்களுடைய 40 ஆயிரம் போராளிகளில் நூற்றுக்கணக்கானோர் இந்தத் தாக்குதலில் பங்கேற்றனர் என்று ஹமாஸ் தலைவர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால், இந்தக் குழுவில் சுமார் 30 ஆயிரம் பேர் மட்டுமே உள்ளனர் மற்றும் ஏவுகணைகளின் ஆயுதங்கள் உள்ளன, சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவு வரை தாக்கக்கூடிய சில ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா டிரோன்கள் இருக்கின்றன என்று இஸ்ரேல் கூறுகிறது.
ஏற்கெனவே, ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் ஓராண்டுக்கும் மேலாகத் தொடரும் போரால் பல ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் ஆட்டம் கண்டுகொண்டிருக்கிறது.
தற்போது ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே திடீரென வெடித்துள்ள இந்தப் போரால் மேலும் என்னென்ன மோசமான விளைவுகள் நேரிடுமோ என்ற அச்சத்தில் இருக்கின்றன உலக நாடுகள்.
from Dinamani - சிறப்புச் செய்திகள் - https://ift.tt/U1N456k