புது தில்லி: ஆன்டிபயாடிக் எனப்படும் நோயெதிர்ப்பு மருந்துகளின் தவறான பயன்பாடு மற்றும் தேவையற்ற பயன்பாட்டைத் தடுக்கும் வகையில் மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொது சுகாதார சேவைகள் இயக்குநரகம் ஒரு முக்கிய அறிவுறுத்தலை வெளியிட்டிருக்கிறது.
அதன்படி, ஆன்டிபயாடிக்குகளை பரிந்துரைப்பதற்கான காரணத்தை நோயாளிகளுக்கு எழுத்துப்பூர்வமாக விளக்குவதை கட்டாயமாக நடைமுறைப்படுத்துமாறு மருத்துவர்களை கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
"ஆன்டிபயாடிக்குகளை பரிந்துரைக்கும் போது நோய் அறிகுறி, மருந்தை பரிந்துரைக்கக் காரணம், கொடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் ஆகியவற்றை நோயாளிகளுக்கு எழுதிக்கொடுப்பதை அனைத்து மருத்துவர்களும் உடனடியாக கட்டாயமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பொது சுகாதார சேவைகள் இயக்குநரக பேராசிரியர் அதுல் கோயல் ஜனவரி 1ஆம் தேதியிட்டு எழுதியிருக்கும் கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, மருத்துவர்கள், ஒரு நோயாளிக்கு ஆன்டிபயாடிக் எழுதிக் கொடுப்பதற்கான குறிப்பிட்டக் காரணம் அல்லது மருத்துவ நிலையை பரிசீலித்த பிறகே, மருந்துகளில் ஆன்டிபயாடிக்கை சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், ஒரு தகுதி வாய்ந்த மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மட்டுமே ஆன்டிபயாடிக் மருந்துகள் விற்கப்படுவதை உறுதிசெய்யுமாறும் மருந்தாளுநர் சங்கங்களை பொது சுகாதார சேவைகள் இயக்குநரகம் கேட்டுக் கொண்டுள்ளது.
"ஆன்டிபயாடிக்குகளின் தவறான மற்றும் அதிகப்படியான பயன்பாடு மருந்துகளின் சக்தியை எதிர்க்கும் ஆற்றல் பெற்ற நோய்க்கிருமிகள் தோன்றுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும் எனவும், சில புதிய ஆன்டிபயாடிக்குகள் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வரிசையில், புதிய நோயெதிர்ப்பு மருந்துகளின் பயன்பாடு, உடலில் நோயெதிர்ப்பாற்றலை தாமதப்படுத்த மட்டுமே உதவுகிறது என்பதைக் காட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இதன் மூலம், மருத்துவர்கள் சிறிய காய்ச்சல் உள்ளிட்ட நோய்களுக்கும் நோயெதிர்ப்பாற்றல் மருந்து எனப்படும் ஆன்டிபயாடிக்குகளை குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை எழுதிக் கொடுப்பது குறையலாம் அல்லது குறைந்தபட்சம் நோயாளிகளுக்கு தான் ஏன் ஆன்டிபயாடிக் மருந்துகளை உட்கொள்கிறோம் என்பதற்கான காரணம் அறிவதற்கான வாய்ப்புக் கிட்டலாம் என்றும் கூறப்படுகிறது.
from Dinamani - சிறப்புச் செய்திகள் - https://ift.tt/7JvZTsH