https://images.dinamani.com/uploads/user/ckeditor_images/article/2024/1/9/20240109_123142.jpgவிஜயகாந்த் நினைவிடத்திலும் வயிறார உணவு!

மறைந்த தே.மு.தி.க. தலைவரும் நடிகருமான விஜயகாந்த் தம் வாழ்நாளில்  நடிகராகவும் அரசியல் கட்சித் தலைவராகவும் எவ்வளவோ உதவிகள், யார் யாருக்கோ செய்திருக்கிறார்.

விஜயகாந்த் மறைவின்போது அவருடைய உதவிகள் பற்றியெல்லாம் பலரும் நினைவுகூர்ந்து கண்ணீர் விட்டனர். ஆனாலும், அவருடைய உதவிகளிலேயே பேருதவியாக, பெரிய விஷயமாகப் பேசப்பட்டது அவருடைய உணவு உபசரிப்புதான்.

மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆருக்கு அடுத்தபடியாக உணவு விஷயத்தில் சிறப்பிடத்தைப் பெற்றவர் விஜயகாந்த் என்பதை அவருடைய மறைவுக் கால நினைவுகள் உறுதிப்படுத்தின.

விஜயகாந்த் மறைவுக்குப் பிறகும் உணவும் உபசரிப்பும் தொடருகிறது.

எங்கோ மதுரையில் பிறந்தவர் திரையுலகில் வளர்ச்சி அடையத் தொடங்கிய காலத்திலேயே மக்களுக்கு நல உதவிகள், உணவு வழங்குதல், கல்வி உதவிகள் என்று உதவிக்கரம் நீட்டினார். 2004-இல் அவர் தேமுதிகவைத் தொடங்கி, ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தாலும் எதிர்க்கட்சித் தலைவர் வரை உயர்ந்தார்.

உடல்நலம் குன்றியிருந்த விஜயகாந்த் மறைவின்போது ஜாதி, மத, அரசியல் பாகுபாடின்றி அனைவரும் நேரிலும் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் தங்களின் வேதனைகளை வெளிப்படுத்தினர். இறுதி ஊர்வலத்திலும் அஞ்சலி நிகழ்வுகளிலும் மறைந்த தலைவர்கள் பலருக்கு இணையாக மக்கள் திரண்டனர்.

விஜயகாந்த் உடல் அவருடைய இல்லம், தேமுதிக அலுவலகம், தீவுத்திடல் என மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற இறுதி ஊர்வலத்துக்குப் பிறகு, விஜயகாந்த்தின் திருமண  மண்டபமாக இருந்த தேமுதிக அலுவலக வளாகத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது.

இதையும் படிக்க: கையைக் காலைக் குறைச்சுக்கவா முடியும்? ரஜினியால் விஜயகாந்த் பட்ட சங்கடம்!

இப்போது நாள்தோறும் விஜயகாந்த் நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்துவதற்காகத் தொடர்ந்து எண்ணற்ற மக்கள் வந்துகொண்டேயிருக்கின்றனர். மக்கள் வந்து செல்லும் வகையில் தனி வழிகள் அமைக்கப்பட்டுள்ளன. நாள்தோறும் விஜயகாந்த் சமாதியில் மலர் அலங்காரம் செய்யப்படுகிறது. 

நினைவிடம் அருகே தேமுதிக நிர்வாகிகள் நின்றுகொண்டு, மூட்டையில் வைக்கப்பட்ட ரோஜாக்களிலிருந்து மக்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்துவதற்காகப் பூக்களை அளிக்கின்றனர்.

சில ரசிகர்கள் உணர்ச்சிவசப்பட்டு நினைவிடம் முன் விழுந்து வணங்க முற்பட்டால்,  வேண்டாம்,  விழக் கூடாது என்று அன்பாகத் தடுத்துவிடுகின்றனர்.

வளாகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும் செய்யப்பட்டுள்ளது. நினைவிடத்தில் விஜயகாந்த் என்றதுமே நினைவுக்கு வருகிற உணவும் உபசரிப்பும் தொடருகிறது.

வருவோருக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான மதிய உணவு சுடச்சுடத் தடையின்றி வழங்கப்படுகிறது. குடிநீர் பாட்டில்களும் வழங்கப்படுகின்றன. மக்களும் வரிசையில் நின்று உணவு பெறுகின்றனர். வீணாக்க வேண்டாம், சாப்பிட்டுவிட்டு எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளுங்கள் என்று அங்கிருக்கும் தேமுதிக நிர்வாகிகள் கேட்டுக்கொள்கின்றனர்.


தீவிர ரசிகர்கள் சிலர் முடி காணிக்கை செலுத்தி, தங்களின் அபரிமிதமான பற்றை வெளிப்படுத்திக் கொள்கின்றனர். இதற்காகத் தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மக்கள் வரிசையாக நின்று சென்று நினைவிடத்தைப் பார்வையிடுவதை ஒழுங்குபடுத்த ஊழியர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

இருந்தாலும் இறந்தாலும் 'கேப்டன்' பெயர் சொல்லும் இடத்தில் தொடருகிறது உணவும் உபசரிப்பும்!



from Dinamani - சிறப்புச் செய்திகள் - https://ift.tt/KFL3UEJ

Post a Comment

Previous Post Next Post