https://images.dinamani.com/uploads/user/ckeditor_images/article/2024/1/24/PTI01_22_2024_000272B.jpgஸ்ரீபால ராமர் அணிந்திருக்கும் 5 கிலோ தங்க, வைர நகைகள்


அயோத்தி: ராமஜென்ம பூமியான அயோத்தியில் அமைந்திருக்கும் ராமர் கோயிலில் ஸ்ரீபால ராமர் பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டு, கண்கொள்ளா காட்சியாக அருள்பாலிக்கிறார்.

இத்தனை காலமும் கற்பனையில் இருந்து வந்த அயோத்தி ஸ்ரீ பால ராமர், திருவுருவம் கொண்டு, கோயில் கருவறையில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கத் தொடங்கியிருக்கிறார். அவரைக் காண்பதே பலரது வாழ்நாள் லட்சியமாக இருந்த நிலையில், அவர் தற்போது இந்தியாவின் அடையாளமுமாக மாறியுள்ளார்.

பிராண பிரதிஷ்டை செய்யப்பட்ட அன்று, மஞ்சள் மற்றும் சிவப்பு அங்கவஸ்திரத்தில் ஸ்ரீபால ராமர் ஜொலித்தார். சுத்தமான தங்க சரிகையில் பட்டு நூலால் இந்த ஆடை வைஷ்ணவ சம்பிரதாயப்படி சக்கரம், சங்கு, உள்ளிட்ட வடிவங்கள் இடம்பெற்று நெய்யப்பட்டதாக ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த சேத்திர அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் ஸ்ரீ மணீஷ் திரிபாதி, தலைமையிலான குழுவினர் இப்பணியை மேற்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இந்த பட்டு அங்கவஸ்திரத்துடன், அவர் அணிந்திருந்த தங்க, வைர நகைகளும் ஸ்ரீபால ராமரின் அழகுக்கு அழகூட்டின. மிக தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட ஸ்ரீ பால ராமருக்கு 22 காரட் தங்கத்தால் செய்யப்பட்ட தங்க மற்றும் வைர ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அவரது திருவுருவத்தின் தலைக்கு மகுடம், காதணிகள், கழுத்துக்கு மூன்று விதமான ஆரங்கள், இடுப்புக்கு ஒட்டியாணம், கைகளுக்குக் காப்பு, வளையல்கள் என 14 விதமான நகைகள் அலங்கரித்திருந்தன.

மரகதம் மற்றும் மாணிக்க வளையல்கள், பல்வேறு வடிவங்களில் உருவாக்கப்பட்ட மூன்று வெவ்வேறு அளவிலான ஆரங்கள், இடுப்புக்கு ஒட்டியாணம் மற்றும் கைகளுக்கு வங்க்கிகள், வளையல்கள், கால் கொலுசு மற்றும் தண்டை, தங்கத்தாலான அம்பு மற்றும் வில் என பல கோடி மதிப்பிலான தங்க, வைர ஆபரணங்களை ஸ்ரீ பால ராமர் அணிந்துள்ளார்.

இதனை, லக்னௌவைச் சேர்ந்த எச்எஸ்ஜே என்ற தனியார் நகை தயாரிப்பு நிறுவனம் உருவாக்கிக் கொடுத்துள்ளது. இறைவனுக்கு அணிவிக்கப்பட்ட மொத்த தங்க நகைகளையும் உருவாக்க தங்களுக்கு 12 நாள்கள் ஆனதாகக் கூறுகிறார் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அங்குர் ஆனந்த்.

இந்த தங்க நகை வடிவமைக்கப்பட்டது பற்றி ஆனந்த் தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார். இந்த நகைகளில் 18,567 வட்ட வடிவிலான வைரக் கற்கள், 439 வெட்டுப்படாத வைரக்கற்கள், 615 மரகதம் மற்றம் 2984 மாணிக்கக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

டிசம்பர் 30ஆம் தேதிதான், பிரதமர் நரேந்திர மோடியால், ஸ்ரீபால ராமர் சிலை தேர்வு செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டது. ஜனவரி 1ஆம் தேதி ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த சேத்திர அறக்கட்டளை சார்பில் எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, ஸ்ரீ பால ராமருக்கு தங்க நகைகள் தயாரிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டதாகக் கூறுகிறார் ஆனந்த்.

ஜனவரி 2ஆம் தேதியே, நான் அயோத்தி சென்று, தெய்வத் திருவுருவத்துக்கான நகைகளுக்கு அளவுகளை எடுத்து வந்தேன். இது எங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய பணியாகக் கருதுகிறோம். இதுவரை நாங்கள் பெரிய பெரிய தெய்வச் சிலைகளுக்கு நகைகளை வடிவமைத்துக் கொடுத்துள்ளோம். ஆனால், இதுதான் முதல் முறை, ஸ்ரீபால ராமர் சிலைக்கு நகைகளை வடிவமைத்துள்ளோம். இவர் 5 வயது இளவரசர் என்பதால், அவரது வயதுக்கும் சிலையின் அழகுக்கும் ஏற்ப நகைகளை வடிவமைக்கும் பொறுப்பு இருந்தது.

இந்த நகை வடிவமைக்கும் பணி தங்களுக்குக் கிடைத்திருப்பதே பெரும் பாக்கியமாகக் கருதுவதாகக் கூறிய ஆனந்த், பல்வேறு ஆய்வுகளை நடத்தியே நகைகளை வடிவமைத்ததாகவும், ஆத்யாத்மா ராமாயணம், வால்மீகி ராமாயணம், ராமச்சந்திரமானஸ், ஆளவந்தார் ஸ்தோத்திரம் உள்ளிட்டவற்றில் வரும் கருத்தாக்கங்களை ஆய்வு செய்தும், கலை விமர்சகரும் எழுத்தாளருமான யதீந்திர மிஷ்ராவின் ஆலோசனைகளைப் பெற்றும் ஒவ்வொரு நகைகளையும் தனித்துவமான வடிவில் வடிவமைத்ததாகக் கூறுகிறார்.

பிருந்தாவனம், பரேய்லி, அலிகார் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள பழைமையான கோயில்களில் இருக்கும் நகைகளின் மாதிரிகளையும் சேகரித்து, சுமார் 132 பொற்கொல்லர்கள் இரவு பகலாக பணியாற்றி மிகக் குறுகிய காலத்தில் அனைத்து தங்க நகைகளை உருவாக்கியுள்ளனர்.  தலை மகுடம் மட்டும் 1.7 கிலோ எடையில் உருவாக்கப்பட்டுள்ளது. 75 காரட் வைரக் கற்கள், 135 காரட்டில் மரகதம், 262 காரட் மாணிக்கக் கற்கள் இடம்பெற்றுள்ளன.  மகுடத்தின் பின்புறத்தில் 500 கிராமில் ஒளிவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

ராமநதி திலகம்
சுத்தமான மஞ்சள் தங்கத்தில் 16 கிராம் எடையுடன் உருவாக்கப்பட்ட திலகத்தில் 3 காரட் இயற்கை வைரக்கல் ஒன்று பதிக்கப்பட்டு, அதனைச் சுற்றிலும் வைரக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.

கழுத்து நெக்லஸ், ஆரங்கள்
நெக்லஸ்: சிறிய மற்றும் அகலமானதாக இருக்கும், ஸ்ரீபால ராமரின் கழுத்தை ஒட்டியிருக்கும் வட்டவடிவிலான நெக்லஸ் 500 கிராம் தங்கத்தில் மரகதம், ரூபி, வைர கற்கள் பதித்து நேர்த்தியாகத் தயாரிக்கப்பட்டது. இதன் மத்தியில் சூரியவம்ச முத்திரை இடம்பெற்றிருக்கும்.

ஐந்து இழை ஆரம்

நெக்லஸுக்குக் கீழே ஐந்து இழை ஆரம் இடம்பெற்றிருக்கும். வைரக்கற்கள் மற்றும் மரகதக் கற்களைக் கொண்டு மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த ஆரம்.



விஜய மாலை

இதுதான் இருப்பதிலேயே எடை அதிகம் கொண்ட நகை. கால் வரை இந்த மாலை நீளும். 2 கிலோ எடை கொண்டது. வைரஷ்வ வழக்கப்படி, சுதர்சன சக்கரம், தாமரை, சம்பங்கி, பாரிஜாதம், துளசி, சங்கு, மங்கள கலசம் போன்ற வடிவங்களைக் கொண்டதாக இருக்கும் இந்த மாலை விஜய மாலை அல்லது வெற்றி மாலை என்று அழைக்கப்படுகிறது.

குண்டலம் (காதணிகள்)

மகுடத்தில் இடம்பெற்றிருக்கும் வடிவமைப்பை ஒட்டி இந்த காதணிகள் உருவாக்கப்பட்டன. அதில் அழகிய மயில் வடிவம் இடம்பெற்றிருக்கும். அதுபோல, வைரம், மாணிக்கம், மரகதக் கற்களைக் கொண்டு காதணிகள் தயாரிக்கப்பட்டன.

ஒட்டியாணம்

ஸ்ரீபால ராமரின் இடுப்பில் அணிந்திருக்கும் ஒட்டியாணம் தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டிருக்கும். தங்கத்தில், முத்து, வைரம், மரகதம், மாணிக்கக் கற்கள் பதித்து தயாரிக்கப்பட்டது. அதன் கீழே சிறிய மணிகள் இடம்பெற்றிருக்கும். அவை தூய்மை மற்றும் மன்னரின் உன்னதத்தை எடுத்துரைப்பதாக அமைந்திருக்கும்.

கைகளில் வங்க்கி

இரண்டு கைகளிலும் வங்கிகள் அணிவிக்கப்பட்டிருக்கும். இவையும் தங்கத்தால் செய்யப்பட்டவை.
கங்கணம்: கைகளில் அணிவிக்கப்பட்டிருக்கும் கங்கணம் எனப்படும் வளையல்கள் 850 கிராம் எடையில் உருவாக்கப்பட்டவை. 100 காராட் வைரக் கற்களுடன், 320 காராட் மாணிக்கம் மற்றும் மரகதத்தால் அழகூட்டப்பட்டவை.

கொலுசு மற்றும் தண்டை

சுத்தமான தங்கத்தால் தண்டைகள் வடிவமைக்கப்பட்டன். 560 கிராம் தங்கத்தால் கொலுசு உருவாக்கப்பட்டுள்ளது.

வில் மற்றும் அம்பு

ஒரு கிலோ எடைகொண்ட தங்கத்தாலானவை அவை. 24 காரட் சுத்தத் தங்கத்தால் செய்யப்பட்டு, ஸ்ரீபால ராமர் தனது கைகளில் ஏந்தியிருக்கிறார்.

பொம்மைகள்

ஸ்ரீபால ராமருக்கு அருகில் வைக்கப்பட்டிருக்கும் குதிரை, யானை, ஒட்டகம் போன்ற பொம்மைகள் அனைத்தும் வெள்ளியால் செய்யப்பட்டவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 



from Dinamani - சிறப்புச் செய்திகள் - https://ift.tt/UlVrKJT

Post a Comment

Previous Post Next Post