உலகின் புகழ்பெற்ற வணிகப் பயணியான மார்க்கோ போலோவின் 7-வது நினைவு நூற்றாண்டைக் கொண்டாடுகிறது அவர் பிறந்த இத்தாலி நாட்டின் மிதக்கும் மாநகரான வெனிஸ்!
பாண்டியர்கள் பற்றியும் தென் இந்தியா, இலங்கை நாடுகள் பற்றியும் மிக முக்கியமான (பயண) வரலாற்றுத் தகவல்களைத் தம் நூலில் பதிவு செய்திருப்பவர் மார்க்கோ போலோ.
மண்ணின் மகனாகப் பெருமை பெற்ற மார்க்கோ போலோவைப் பெருமைப்படுத்தும் வகையில் அவருடைய நினைவு ஏழாம் நூற்றாண்டை இந்த ஆண்டு முழுவதும் கொண்டாடத் திட்டமிட்டிருக்கிறார்கள் வெனிஸ் மாநகர மக்கள்.
ஓராண்டு விழாவின் தொடக்கமாக ஜனவரி மாத இறுதியில் சுமார் 600-க்கும் மேற்பட்டோர், மார்க்கோ போலோ காலத்தைப் போலவே உடையணிந்து, புனித மார்க் சதுக்கத்திலிருந்து ரியால்டோ பாலம் வரையில் நகரின் பிரதான கால்வாயில் படகுகளைச் செலுத்தினர் (நீரால் சூழப்பட்ட வெனிஸ் நகரில் வீதிகள் என்பவையே கால்வாய்கள்தான்!).
இந்த ஆண்டில் திட்டமிடப்பட்டுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளுடன், 13-வது நூற்றாண்டில் ஆசிய நாடுகளில் மார்க்கோ போலோ மேற்கொண்ட பயணம் தொடர்பான பிரம்மாண்டமான கண்காட்சியொன்றும் ஏற்பாடு செய்யப்படுகிறது.
புகழ்பெற்ற மார்க்கோ போலோவின் பயணங்கள் என்ற தனது நூலில் அவர் தாம் சுற்றுப்பயணம் செய்த ஆசிய நாடுகள் பற்றி, அவற்றின் பண்பாடு, புவியியல், மக்கள் என, ஏராளமான தகவல்களை எழுதியுள்ளார் மார்க்கோ போலோ.
தேடியறியும் ஆவலுடன் பயணங்களை மேற்கொண்டு, பிற பண்பாட்டு மக்களுடன் உரையாடல்கள் நிகழ்த்திய மார்க்கோ போலோ இன்றைய சூழலுக்கு மிகவும் பொருத்தமானவர் என்று புகழ்ந்த வெனிஸ் மாநகர மேயர் லூகி ப்ரக்நாரோ, காலங்காலமாகக் கடல் குடியரசாகவும் வணிக மையமாகவும் கிழக்கிற்கும் மேற்கிற்கும் இணைப்புப் பாலமாகவும் இருந்த வெனிஸைப் போன்ற நகரைப் பொருத்தவரை இது மிகவும் உண்மை என்றும் குறிப்பிட்டார்.
தொடக்க விழாவின்போது, பார்வையாளர்களில் ஒருவர், மார்க்கோ போலோவைப் போன்றே வேஷமிட்டு, விழாக் கால பாத்திரம் போல முகமூடியணிந்துகொண்டு வந்ததுடன், மார்க்கோ போலோவின் பயணங்கள் நூலையும் ஏந்தியிருந்தார்.
வெனிஸ் நகரில் ஒரு வணிகக் குடும்பத்தில் 1254 ஆம் ஆண்டில் பிறந்து, கால் நூற்றாண்டு காலம் வரை வணிகப் பயணம் மேற்கொண்டு, 1324 ஆம் ஆண்டில் மறைந்த மார்க்கோ போலோ, பட்டுத் தடத்தைக் கண்டுபிடித்தவர்.
வெனிஸ் மாநகர அரண்மனைகளில் ஒன்றின் சுவரில், இவையெல்லாம் தொலைதூர ஆசிய நாடுகளில் பயணம் செய்து, அவற்றைப் பற்றிய பதிவுகளைக் குறித்துள்ள மார்க்கோ போலோவின் இல்லங்கள் என்றெழுதப்பட்ட சலவைக் கல் பதிக்கப்பட்டிருக்கிறது.
வெனிஸ் வணிகரான மார்க்கோ போலோ, பட்டு வணிகத் தடத்தின் வழி 1271 ஆம் ஆண்டு முதல் 1295 ஆம் ஆண்டு வரை ஆசிய நாடுகள் பலவற்றில் சுற்றுப் பயணம் செய்தவர்.
இவர் எழுதிய நூலின் வழியே சீனா, பெர்சியா, இந்தியா, இலங்கை, ஜப்பான் மற்றும் பல ஆசிய நாடுகளைப் பற்றி, நகரங்களைப் பற்றி விரிவான தகவல்களை முதன்முதலாக ஐரோப்பியர்கள் அறிந்துகொண்டனர்; மங்கோலியப் பேரரசு, யுவான் காலம் போன்றவற்றின் பிரம்மாண்டம், செல்வம் பற்றியெல்லாமும் தெரிந்துகொண்டனர்.
சீனாவிலிருந்து சொந்த நாடு திரும்பும் வழியில் இரு ஆண்டுகள் பயணம் செய்து, கி.பி. 1292-ல் கோரமண்டலக் கடற்கரையில் வந்திறங்கிய மார்க்கோ போலோ, பாண்டிய நாட்டிலும் இன்றைய கேரளத்திலும் பல பகுதிகளில் பயணம் செய்தார். பாண்டியர்கள் குதிரை இறக்குமதி செய்ததைப் பற்றியெல்லாமும் குறித்திருக்கிறார். பாண்டியர் காலத்தைப் பற்றிய எண்ணற்ற பதிவுகள் இவருடைய பயண நூலின்வழி கிடைக்கப் பெறுகின்றன. இத்தாலியில் பிறந்தவர் என்றாலும் இந்தியாவை உலகினர் அறிய வைத்ததில் பெரும் பங்களிப்பு செய்தவர் மார்க்கோ போலோ!
from Dinamani - சிறப்புச் செய்திகள் - https://ift.tt/ViHz1yn