https://images.dinamani.com/uploads/user/ckeditor_images/article/2023/12/5/padia.jpgஓய்ந்த மழை: ஓயாத அவதி!

மிக்ஜம் புயலால் 2 நாள்களாக கொட்டித் தீர்த்த அதி கனமழை ஓய்ந்த நிலையில், சென்னையின் பலப்பகுதிகளில் வெள்ள நீர் வடியாமல் சென்னை மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள்.

மிக்ஜம் புயல் கனமழை முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக சென்னையில் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. சென்னையில் தற்போது மழை இல்லாததால்  மின் விநியோகம் வழங்கப்படும் என்று மின்சார வாரியம் தெரிவித்திருந்த நிலையில், இன்னும் பல இடங்களில் மின் விநியோகம் வழங்கப்படப்படாமல் உள்ளது.

வெள்ள நீர் சூழ்ந்துள்ள பாடி மேம்பாலப் பகுதி.

முக்கிய சாலைகளில் வெள்ள நீர் வடியாமல் உள்ளது. இதனால் பொது போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் தொலை தொடர்பு சேவை பாதிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

4 மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை விடப்பட்டிருந்ததாலும், அதிகளவில் பேருந்துகள் இயங்காததால் தனியார் வேலைக்கு செல்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை முதல் மாநகரப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் குறைவான பேருந்து சேவைகள் மட்டுமே வழங்கப்பட்டன. குறிப்பாக பிரதான சாலைகளில் வெகு சில பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன.

கேளம்பாக்கத்தில் உள்ள குடியிருப்பு பகுதி.

சென்னையில் பால் விநியோகம் முடங்கியுள்ளதாக மாநில முகவர்கள் சங்கத் தலைவர் பொன்னுசாமி தெரிவித்து இருந்தார். இதனால் இன்று காலை சில மணி நேரம் பால் விநியோகம் பாதிக்கப்பட்டது. பின்னர் மழை நீர் வடிந்த இடங்களில் ஆவின் பால் விநியோகம் தொடங்கியது. நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் பால் வாங்கிச் சென்றனர்.

இரண்டாவது நாளாக கணேசபுரம் சுரங்கப்பாதை, கெங்குரெட்டி சுரங்கப்பாதை, செம்பியம் சுரங்கப்பாதை, வில்லிவாக்கம் சுரங்கப்பாதை, துரைசாமி சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை, ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை, மவுண்ட் - தில்லை நகர் சுரங்கப்பாதை, சைதாப்பேட்டை - அரங்கநாதன் சுரங்கப்பாதை, பழவந்தாங்கல் சுரங்கப்பாதை, சி.பி.சாலை சுரங்கப்பாதை, வியாசர்பாடி சுரங்கப்பாதை, திருவொற்றியூர், மாணிக்கம் நகர் சுரங்கப்பாதை, சுரங்கப்பாதை, கோயம்பேடு புதுபாலம் சுரங்கப்பாதை, சேத்துப்பட்டு, ஹாரிங்டன் ரோடு சுரங்கப்பாதை, சூளைமேடு, லயோலா சுரங்கப்பாதை ஆகிய சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன.

ஆவடியில் மழைநீா் புகுந்து வீடுகளில் சிக்கி தவித்த மக்களை மீட்ட நாசா் எம்எல்ஏ. உடன் மேயா் கு.உதயகுமாா் மற்றும் பேரிடா் மீட்பு குழுவினா்.

சென்னையில் புயல், கனமழை பாதிப்பு காரணமாக விரைவு ரயில்கள், புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆவடியில் வரலாறு காணாத வகையில் 280 மி.மீ. மழை கொட்டித் தீா்த்தது. இதனால், குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கிவிட்டது. இதன் காரணமாக ஆவடி வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு, வசந்தம் நகா், கன்னிகாபுரம், திருமலைராஜபுரம், அண்ணனூா் 60 அடி சாலை, மூன்று நகா், திருமுல்லைவாயல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தெருக்களில் மழைநீா் சூழ்ந்தது. அங்குள்ள பல வீடுகளில் தண்ணீா் புகுந்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டது.

அம்பத்தூா் தொழிற்பேட்டை பகுதி.

பக்தவச்சலபுரத்திலிருந்து சிடிஎச் சாலை வழியாக கன்னிகாபுரம் கால்வாயில் அதிக அளவு வெள்ளம் வந்ததால், ஆவடி காவல் நிலையத்தில் மழைநீா் புகுந்தது. இப்பகுதிகளில் தண்ணீரை அகற்றும் பணிகளில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

புயல் தொடா் மழையால் கேளம்பாக்கம் அருகே உள்ள பகுதி குடியிருப்பு மழைநீரால் சூழ்ந்து, மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அம்பத்தூா் வழியாக கொரட்டூா் ஏரிக்குச் செல்லும் உபரி நீா் கால்வாயில் வெள்ளம் பெருக்கெடுத்த நிலையில், கால்வாயில் உபரிநீா் நிரம்பி செல்ல முடியாமல் அம்பத்தூா் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள பால் பண்ணை சாலை, சிடிஎச் சாலை, அம்பத்தூா் 3-ஆவது பிரதான சாலை, 2-ஆவது பிரதாரா சாலை, பட்டரைவாக்கம், அம்பத்தூா் தொழிற்பேட்டை சாலை உள்ளிட்ட சாலைகளில் வெள்ள நீர் வடியவில்லை.

நேற்றிரவே மழை பெய்வது குறைந்த நிலையில் அதன் பாதிப்பில் இருந்து மக்கள் வெளியே வரமுடியாமல் தவித்து வருகின்றனர். மின்சாரம், பொது போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாகவுள்ளது.



from Dinamani - சிறப்புச் செய்திகள் - https://ift.tt/lxVQkva

Post a Comment

Previous Post Next Post