https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2023/12/11/w600X390/srilanka.jpgஇலங்கையில் தொடரும் இன அழிப்பு!

"1987-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின்படி, மாகாண கவுன்சில்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டால்தான் தமிழர்களின் நிலம், வழிபாட்டுத் தலங்கள் அபகரிப்பு போன்றவற்றை ஓரளவுக்கு கட்டுப்படுத்த முடியும் என்று அங்குள்ள தமிழர் தலைவர்கள் கோருகின்றனர்."

அடைமழை நின்றாலும் பல நாள்களாக வெள்ளம் வடியாததுபோல, போர் முடிவுக்கு வந்து 14 ஆண்டுகளாகியும் இலங்கைத் தமிழர்களின் பிரச்னைகள் தீராதது மட்டுமல்ல, அதிகரித்தும் வருவது வேதனைக்குரியது.
இலங்கை 1948-இல் சுதந்திரம் பெற்றதில் இருந்தே தொடர்ச்சியாக அமைந்த அரசுகள், சிறுபான்மையினரான தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் மக்கள்தொகை விகிதாசாரத்தை மாற்றும் வகையில் அவர்களது இடங்களைக் கைப்பற்றுவதற்கான திட்டங்களைத் தீட்டி செயல்பட்டு வந்திருக்கின்றன.
1980-களில் விடுதலைப் புலிகளின் எழுச்சிக்குப் பிறகு சுமார் 30 ஆண்டுகள் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் அரசின் கட்டுப்பாட்டில் இல்லாமல் போனது. 2009-இல் இறுதிப் போர் நடந்து விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர், இனியாவது அமைதியான வாழ்க்கை வாழ வாய்ப்பு கிடைக்கும் என்ற தமிழர்களின் கனவு கடந்த 14 ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்து வருகிறது.
2009-க்கு முன்னர், சூழ்நிலை காரணமாக உலகின் பல பகுதிகளுக்கும் இலங்கையின் வேறு பகுதிகளுக்கும் இடம்பெயர்ந்த தமிழர்கள் தங்களது பகுதிகளுக்குத் திரும்பியபோது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவர்களது இடங்களில் ராணுவத்தின் உதவியோடு சிங்களர்கள் குடியமர்த்தப்பட்டிருந்தனர்.
மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கிவிடக் கூடாது என்பதைக் காரணம் காட்டி, தமிழர்கள் வாழும் பகுதிகளில் பொதுமக்கள் ஐந்து பேருக்கு ஒரு வீரர் என ராணுவத்தினர் பெரும் அளவில் குவிக்கப்பட்டு ஒருவிதமான அச்ச உணர்விலேயே தமிழர்கள் வாழும் சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
இது ஒருபுறமிருக்க, மற்றொரு புறம் தமிழர்களின் கோயில்கள் அமைந்துள்ள இடங்கள் வரலாற்று ரீதியாக பெüத்தர்களுடையது என்பதை நிறுவுவதற்கான முயற்சிகள் வேகமெடுத்துள்ளது தமிழர்களிடையே கடும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள குருந்தூர்மலை கோயிலில் சிவபெருமானை ஆதி அய்யனாராகக் கருதி அங்கு அமைக்கப்பட்டிருந்த திரிசூலத்தை தமிழர்கள் வழிபட்டு வந்தனர். அந்த இடத்தில் ஒரு காலத்தில் புத்த விகாரை இருந்தது எனக் கூறி புத்தர் சிலையை நிறுவ புத்த பிட்சுக்கள் தலைமையில் சிலர் 2018-ஆம் ஆண்டு முயற்சி மேற்கொண்டபோது உள்ளூர் மக்கள் கடுமையாக எதிர்த்தனர்.
இதையடுத்து தொல்லியல் துறை அகழாய்வுக்கு கோத்தபய ராஜபட்ச அரசு உத்தரவிட்டது. தமிழர்கள் நீதிமன்றத்தை நாடினர். முல்லைத்தீவு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி அமைச்சர் விதுர விக்ரமநாயக தலைமையில் அங்கு கடந்த 2022, பிப்ரவரியில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. 
அங்கு அமைக்கப்பட்ட புத்த விகாரை 2022 ஜூனில் திறக்கப்பட்டது.
அங்கு சிங்களர்கள் வழிபாடு நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது. பல்வேறு கட்டுப்பாடுகள் மூலம் தமிழர்களுக்கு இடையூறு ஏற்படுத்தப்படுகிறது.
வவுனியா வடக்கு மாவட்டம், ஒலுமடு என்ற இடத்தில் வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் விக்ரஹங்கள் கடந்த ஏப்ரல் மாதம் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டன. வவுனியா நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகு மே மாத தொடக்கத்தில் அந்த இடத்தில் விக்ரஹங்கள் மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
திருகோணமலையில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள கன்னியா வெந்நீரூற்று பகுதியை தமிழர்கள் புனிதமாகக் கருதுகின்றனர். அங்கிருந்த விநாயகர் கோயில் இடிக்கப்பட்டு அருகில் புத்த விகாரை நிறுவப்பட்டுள்ளது. இந்த இடத்தில் ராவணன் தனது தாயாருக்கு இறுதிச் சடங்குகள் செய்ததாகத் தமிழர்களால் நம்பப்படுகிறது.
கச்சத்தீவில்கூட - அங்கு பாதுகாப்புப் பணியில் இருக்கும் இலங்கைக் கடற்படையினர் வழிபட என்று கூறி - கடந்த மார்ச்சில் இரண்டு சிறிய புத்தர் சிலைகள் நிறுவப்பட்டன.
கோத்தபய ராஜபட்ச அதிபராக இருந்தபோது தொல்லியல் பாரம்பரிய மேலாண்மைக்கு என சிறப்புக் குழுவை கடந்த 2020-ஆம் ஆண்டு அமைத்தார். தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் கிழக்கு மாகாணத்தில் தொல்லியல் பாதுகாப்பு வாய்ந்த இடங்களை மீட்கவும், பாதுகாக்கவும் அமைக்கப்பட்ட இந்தக் குழுவில் முழுக்க புத்த பிட்சுக்கள், ராணுவ உயர் அதிகாரிகள் என சிங்களர்களே இடம்பெற்றிருந்தனர்.
அம்பாறை மாவட்டத்தில் 246, திருகோணமலை மாவட்டத்தில் 74, மட்டக்களப்பு மாவட்டத்தில் 55 இடங்கள் மற்றும் இந்த இடங்களைச் சுற்றி உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களைப் பாரம்பரிய பகுதிகளாக இந்தக் குழு அடையாளம் கண்டுள்ளது. தமிழர்களின் வளமிக்க இந்த நிலங்களில் விவசாயம் மேற்கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது.
இந்தக் குழு அமைக்கப்பட்ட பின்னர், திருகோணமலை மாவட்டத்தில் ஒரு சதவீதத்துக்கும் குறைவாக சிங்களர்கள் வசிக்கும் பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட பெüத்த வழிபாட்டுத் தலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சிங்களர்களைக் குடியமர்த்துதல், ராணுவத்தினர் குவிப்பு, வழிபாட்டுத் தலங்களைக் குறிவைத்தல் என திட்டமிட்ட ரீதியில் தமிழர்களுக்கு சொல்லொணா துயரை புத்த பிட்சுக்களின் ஆதரவுடன் இலங்கை அரசு அளித்து வருகிறது. இது தொடர்ந்தால் சில ஆண்டுகளில் மீண்டும் அந்த நாட்டில் போராட்டங்கள் பெரிய அளவில் ஏற்பட்டு வன்முறையாக மாறக்கூடிய அபாயம் உள்ளது.
1987-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின்படி, மாகாண கவுன்சில்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டால்தான் தமிழர்களின் நிலம், வழிபாட்டுத் தலங்கள் அபகரிப்பு போன்றவற்றை ஓரளவுக்கு கட்டுப்படுத்த முடியும் என்று அங்குள்ள தமிழர் தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.
கரோனா காலகட்டத்தில் உணவு, எரிபொருள் தட்டுப்பாடு போன்றவற்றால் திவால் நிலைக்கு தள்ளப்பட்டபோது இந்தியா உதவிக் கரம் நீட்டியதால்தான் இலங்கையால் மீண்டு வர முடிந்தது. இப்போதும்கூட அங்கு தமிழர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கும் பணிக்கு இந்திய அரசு உதவி வருகிறது.
இந்தப் பின்னணியில், இந்திய அரசு தலையிட்டு இலங்கையில் தமிழர்களின் அமைதியான வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்க உரிய தீர்வு காண வேண்டியது வரலாற்றுத் தேவையாகும்.



from Dinamani - சிறப்புச் செய்திகள் - https://ift.tt/ofHhBsd

Post a Comment

Previous Post Next Post