தெலங்கானாவில் 9 ஆண்டு கால சந்திரசேகர் ராவின் பாரத ராஷ்டிர சமிதி ஆட்சியை வீழ்த்தி காங்கிரஸ் முதல்முறையாக ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை (டிச. 3) தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில், தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆரம்பம் முதலே முன்னிலை வகித்து வருகிறது. பிற்பகல் 4 மணி நிலவரப்படி காங்கிரஸ் -65, பிஆர்எஸ் - 37, பாஜக - 10, பிற - 7 இடங்களில் முன்னிலையில் உள்ளன.
தெலங்கானாவில் சந்திரசேகர் ராவின் பாரத ராஷ்டிர சமிதி ஆட்சியில் இருந்து வரும் நிலையில் தற்போது காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றும் நிலையில் உள்ளது. பெரும்பான்மைக்குத் தேவையான 60 இடங்களுக்கும் மேல் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது.
இதன் மூலமாக தெலங்கானாவில் முதல்முறையாக காங்கிரஸ் கால்பதிக்கிறது.
தெலங்கானா தேர்தல்கள்
கடந்த 2014 ஆம் ஆண்டு ஆந்திர பிரதேச மாநிலத்தில் இருந்து தெலங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டது.
2014 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்துடன் சேர்த்து நடத்தப்பட்ட தெலங்கானா மாநிலத்தின் முதல் சட்டப்பேரவைத் தேர்தலில் தெலங்கானா ராஷ்டிர சமிதி(தற்போது பாரத ராஷ்டிர சமிதி) தலைவர் சந்திரசேகர் ராவ் வெற்றி பெற்று முதல்வரானார். மொத்தமுள்ள 119 தொகுதிகளில் டிஆர்எஸ் 63 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 21 இடங்களிலும் தெலுங்கு தேசம் 15 இடங்களிலும் வெற்றி பெற்றது.
இதையும் படிக்க | தெலங்கானா: ரேவந்த் ரெட்டி இரு தொகுதிகளிலும் முன்னிலை!
2018 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநிலத்தின் இரண்டாவது சட்டப்பேரவைத் தேர்தலிலும் டிஆர்எஸ் ஆட்சியைத் தொடர்ந்து இரண்டாவது முறையாகக் கைப்பற்றியது. டிஆர்எஸ் 88 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 19 இடங்களிலும் வெற்றி பெற்றது. சந்திரசேகர் ராவ் தொடர்ந்து இரண்டாவது முறையாக முதல்வரானார்.
தற்போது கடந்த நவ. 30 ஆம் தேதி நடைபெற்ற மூன்றாவது சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலமாக தெலங்கானாவில் காங்கிரஸ் முதல்முறையாக ஆட்சியைக் கைப்பற்றுகிறது.
யார் இந்த ரேவந்த் ரெட்டி?
54 வயதாகும் ரேவந்த் ரெட்டி 2008 முதல் 2017 வரை சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்தார். தெலுங்கு தேசம் கட்சி சார்பில் ஆந்திர சட்டப்பேரவையில் கோடங்கல் தொகுதி எம்எல்ஏவாக 2009-14, 2014-18 ஆண்டுகளில் என இரண்டு முறை இருந்துள்ளார்.
2017 அக்டோபர் மாதம் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார். 2021 ஆம் ஆண்டு தெலங்கானா காங்கிரஸ் கமிட்டித் தலைவராக நியமிக்கப்பட்டார்.
2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் மல்காஜ்கிரி மக்களவைத் தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. யான ரேவந்த் ரெட்டி, தெலங்கானாவில் காமாரெட்டி, கோடங்கல் என இரு தொகுதிகளில் போட்டியிட்டார். இரு தொகுதியிலும் தற்போது முன்னிலையில் இருந்து வருகிறார்.
இதில், காமாரெட்டி தொகுதியில் பாஜக வேட்பாளர் வெங்கட ரமண ரெட்டி, முதல்வர் சந்திரசேகர் ராவ் என இருவரையும் வீழ்த்தி முன்னிலையில் இருந்து வருகிறார்.
இதையும் படிக்க | தெலங்கானாவில் கடும் பின்னடைவில் முதல்வர், அமைச்சர்கள்!
அவர் தெலங்கானாவில் தீவிர பிரசாரம் மேற்கொண்டதே தெலங்கானாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. 2021 ஆம் ஆண்டு மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவராக நியமிக்கப்பட்டது முதலே சந்திரசேகர் ராவுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துள்ளார்.
சந்திரசேகர் ராவ் ஆட்சியில் உள்ள பிரச்னைகளை மக்களிடம் பல்வேறு வழிகளில் நேரடியாக கொண்டு சேர்த்து, பல்வேறு பேரணி, பொதுக்கூட்டங்களின் மூலமாகவும் பிரசாரம் செய்தார். மாநிலத்தில் கட்சிக்குள் அவருக்கு சில எதிர்ப்புகள் இருந்தபோதும் காங்கிரஸ் தலைமை அவருக்கு முக்கியத்துவம் அளித்ததாகவே தெரிகிறது.
தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி 80 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்று கூறிய ரேவந்த் ரெட்டி, தனது தீவிர பிரச்சாரத்தின் மூலம் அதை இப்போது செய்தும் காட்டியுள்ளார்.
from Dinamani - சிறப்புச் செய்திகள் - https://ift.tt/NGdv4PM