"செத்தும் கொடுத்தார் வள்ளல் சீதக்காதி" என்று கேள்விப்பட்டுள்ளோம். அமெரிக்காவில் ஒரு பெண்மணி உயிரிழந்த பிறகும் ஏழை எளிய மக்களின் பெருந்துயரான மருத்துவக் கடன்களைத் தீர்க்க உதவியிருக்கிறார்.
அமெரிக்காவில் புற்றுநோய் காரணமாக உயிரிழந்த இந்தப் பெண், தன் இறப்புக்குப் பின் வெளியிடச் செய்த ஒரு வேண்டுகோள் மூலம் இன்னமும் திரண்டுகொண்டிருக்கும் நிதியிலிருந்து சாதாரண மக்களின் பல லட்சம் டாலர்கள் மருத்துவக் கடன்கள் தீர்க்கப்படவிருக்கின்றன.
நியூ யார்க் நகரைச் சேர்ந்தவர் கேஸி மேக்கின்டயர் என்ற பெண்மணி. கருப்பைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி ஒரு வாரத்துக்கு முன் நவ. 12-ல் உயிரிழந்தார்.
இவருடைய மறைவைத் தொடர்ந்து, தன்னுடைய வாழ்வைக் கொண்டாடும் வகையில் மற்றவர்களின் மருத்துவக் கடன்களை வாங்குமாறு தாம் ஏற்பாடு செய்திருப்பதாகத் தெரிவிக்கும் கேஸியின் செய்தியை அவருடைய கணவர் ஆண்ட்ரூ ரோஸ் கிரிகோரி பதிவேற்றியுள்ளார்.
எக்ஸ் தளத்தில் வெளியிட்ட இந்தச் செய்தியில், 38 வயதில் மரணத்தைத் தழுவ நேரிட்ட, கேஸி மேக்கின்டயர் குறிப்பிடுகிறார்:
“இதை நீங்கள் படிக்கும்போது நான் இறந்துவிட்டிருப்பேன்”.
“உங்களில் ஒவ்வொருவரிடமும் முழு மனதாக நான் அன்பு செலுத்தினேன். என்னை எல்லாரும் எந்த அளவு ஆழமாக விரும்பினார்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.”
இந்தப் பதிவுடன் பலன்கருதா தன்னார்வத் தொண்டு அமைப்பான RIP Medical Debt - ஆர்ஐபி மெடிகல் டெட் மூலம் நிதி திரட்டுவதன் தொடக்கமாக இணைப்பும் தரப்பட்டிருந்தது.
மேக்கின்டயரின் கணவர் கிரிகோரி, இந்தச் செய்தியை நவ. 14-ல் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். மிக விரைவிலேயே அதன் நன்கொடை இலக்கான 20 ஆயிரம் டாலரை எட்டிவிட்டது.
ஆனால், சற்றும் எதிர்பாராத வகையில் இந்த நன்கொடை தொடர்ந்து பெருமளவில் குவியத் தொடங்கியது.
ஞாயிற்றுக்கிழமை காலையில் இந்த நன்கொடை நிதியின் அளவு 2.20 லட்சம் டாலர்களாக (ரூ. 1.83 கோடி) உயர்ந்துள்ளது. ஒரு இதன் மூலம் 2 கோடி டாலருக்கும் அதிகமான (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 180 கோடி) கடனைத் தீர்க்க முடியும் என்று ஆர்ஐபி மெடிகல் டெட் அமைப்பின் துணைத் தலைவர் டேனியல் லெம்பர்ட் தெரிவித்துள்ளார்.
மரணத்துக்குப் பிறகு இவ்வாறு ஒருவரால் நிதி திரட்டப்படுவது இதுவே முதல் முறை என்றும் லெம்பர்ட் குறிப்பிட்டுள்ளார்.
"தன்னுடைய மனைவிக்குக் காப்பீடு இருந்தது. புற்றுநோய் மருத்துவமனையில் நல்ல சிகிச்சை பெறவும் முடிந்தது. என்றாலும், அவருடைய சிகிச்சைக்கான ஆவணங்களின் மூலம் சிகிச்சைகளுக்கான “பயங்கரமான கட்டணங்களை”த் தெரிந்துகொள்ள முடிந்தது" என்று குறிப்பிட்டுள்ளார் கிரிகோரி.
"புற்றுநோய்க்கு நல்ல சிகிச்சை இருக்கிறது. ஆனால், இந்த மக்களால்தான் அதைப் பெற இயலாது என்று எனக்கும் கேஸிக்கும் தோன்றியது. புற்றுநோய்க்கான சிகிச்சை பற்றிக் கனவு காண்பதற்குப் பதிலாக மருத்துவக் கடன்களால் நசுக்கப்படும் மக்களுக்கு உதவினால் என்ன? என்று நாங்கள் நினைத்தோம்" என்று தெரிவிக்கிறார் கிரிகோரி.
இதையும் படிக்க | பின்சுழலும் சக்கரம்! ரஷியாவில் கருக்கலைப்புக்கு நெருக்கடி!
[Medical Debt மெட் டெட் - மருத்துவக் கடன் என்றால் என்ன?
இந்தச் செய்தியைப் புரிந்துகொள்ள அமெரிக்காவில் மருத்துவம் – சிகிச்சை தொடர்பான அடிப்படையான சில விஷயங்களை அறிந்துகொள்ள வேண்டும்.
அமெரிக்காவைப் பொருத்தவரை காப்பீடு இருந்தால்தான் மருத்துவம், இல்லாவிட்டால் அவ்வளவுதான்.
எந்த நோய்க்காக என்றாலும், உடல் நலக் குறைவு என்றாலும் மருத்துவமனைக்குச் சென்றால் காப்பீடு இருந்தால் மட்டுமே சிகிச்சை பெற முடியும். அல்லது பெரிய அளவில் கட்டணங்கள் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால், அமெரிக்காவில் கணிசமான அளவுக்கு - ஏழை, நடுத்தர, குறிப்பாகக் கருப்பின மக்கள் – காப்பீடு வைத்திருப்பதில்லை. வைத்திருக்கக் கூடிய அளவில் அவர்களுடைய வருமானமும் இருப்பதில்லை.
எனவே, இந்த நிலைமையில் இருப்பவர்களில் பெரும்பாலானோர் எந்த சூழ்நிலையிலும் உடல்நலக் குறைவுகளுக்காக மருத்துவமனைகளுக்குச் சிகிச்சைக்குச் செல்ல மாட்டார்கள். இதனால் நிறைய பேர் நோய் முற்றும் வரை விட்டுவிடும் நிலையில்தான் இருப்பார்கள்.
நம் நாட்டைப் போல – தமிழ்நாட்டைப் போல - கட்டணமில்லா அரசு மருத்துவமனைகளும் கிடையா, இலவச மருந்துகளும் கிடையா, அல்லாமல் மருத்துவரையே சந்திக்காமல், பரிந்துரைக்காமல், வீதிகளில் எங்கே வேண்டுமானாலும் மருந்துக் கடைகளில் பிரச்சினையைச் சொல்லி வலி நிவாரணிகள் உள்பட எதை வேண்டுமானாலும் வாங்க முடிகிறதே, அப்படியெல்லாமும் வாங்கவும் முடியாது, தலைவலிக்காக என்று ஒரு பாரசிடமால் மாத்திரை வாங்குவது என்பதே மிக மிகக் கடினம்.
இந்த முறைமைக்கு இடையே காப்பீடு இல்லாவிட்டாலும் மருத்துவமனை சென்று சிகிச்சை பெற ஒரு சின்ன குறுக்குவழி இருக்கிறது. அவசர நிலையில் வரும் நோயாளிகளுக்கு மருத்துவமனைகள் சிகிச்சை அளித்துதான் தீர வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியிருக்கிறது. எனவே, காப்பீடு இல்லாவிட்டாலும் சிகிச்சை அளித்துவிட்டு, அவர்கள் பெயரில் மருத்துவக் கடன் என்று குறிப்பிட்டுக் கடனாளியாக்கிவிடுவார்கள். தொடர்ந்து, மருத்துவமனை சார்பில் கடனைக் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.
காப்பீடு செய்ய முடியாத நிலையில் இருப்பவர்கள் எங்கிருந்து கடனை அடைக்கப் போகிறார்கள்? இவர்களிடம் கடனை வசூலிப்பதற்காக நம்மூரில் தனியார் வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள் செய்யும் வேலையை அந்த மருத்துவமனைகளும் செய்கின்றன, கொஞ்சம் மாறுதல்களுடன்.
இங்கே கடனை வசூலிப்பவர்கள், வசூலித்து வங்கிகளில் செலுத்தச் செய்வார்கள். அமெரிக்காவிலோ 100 டாலர் கடன் என்றால், எனக்கு இத்தனை டாலர் ( ஒரு சதவிகிதத்திலிருந்து 10 சதவிகிதம் வரை, இது கூடுதலாகவோ, குறைவாகவோ இருக்கலாம். இவற்றைப் பெறுவதிலும் தொழில்முறைப் போட்டிகள் எல்லாம் உண்டு) - கொடுத்துவிடுங்கள், பலித்ததை நீங்கள் வசூலித்துக்கொள்ளுங்கள் என இதற்கென இருக்கும் வசூல் நிறுவனங்களிடம் - வந்தவரை லாபம் என்ற கணக்கில் பணத்தைப் பெற்றுக்கொண்டு - மருத்துவமனைகள் கடனைக் கைமாற்றி விட்டுவிடும்.
இதையும் படிக்க | அதிக விமானங்களை வாங்குகிறது இந்தியா! ஏன்?
கடனாளிகளைப் பொருத்தவரை வழக்கமான வசூல் கெடுபிடிகள் தொடரும். கடனாளி என்று முத்திரை குத்தப்பட்டிருப்பதால் சம்பந்தப்பட்ட நபருக்கு, வேறு கடன்கள் எதுவும் வாங்க முடியாது என்பது உள்பட, அன்றாட வாழ்வில் வேறு பல பிரச்சினைகள் தொடர்ந்துகொண்டிருக்கும்.
இத்தகைய சூழலில்தான், பாதிக்கப்பட்டு வேறு வழியின்றித் திணறிக்கொண்டிருக்கும் இத்தகைய கடனாளிகளுக்கு உதவுவதற்கென தன்னார்வ நிறுவனங்கள் தோன்றின. வசூல் நிறுவனங்களுக்குப் பதிலாக அதே விகிதத்தில் (அல்லது அதற்கும் குறைவாக) இந்தத் தன்னார்வ நிறுவனங்களே முன்வந்து கடன்களை ஏற்றுக்கொண்டு, நன்கொடைகள் உள்பட பல்வேறு வழிகளிலும் நிதிகளைத் திரட்டி, மருத்துவமனைகளுக்கான கடன்களை அடைத்து, கட்டணம் செலுத்த முடியாமல் சிகிச்சை பெற்றவர்களைக் கடனிலிருந்து விடுவித்து விடும்.
இத்தகையதொரு தன்னார்வ அமைப்புதான் எக்ஸ் தளத்தில் நிதி திரட்டுவதற்காக கேஸி மேக்கின்டயர் குறிப்பிட்டிருக்கும் ஆர்ஐபி மெடிகல் டெட்.]
அமெரிக்காவிலுள்ள மருத்துவ சிகிச்சை அமைப்பு முறையில், காப்பீடு இல்லாதவர்கள் மட்டும் அல்ல; காப்பீடு வைத்திருப்பவர்கள்கூட மிக எளிதில் இந்த மருத்துவக் கடன்களில் சிக்கிக் கொண்டுவிடுகிறார்கள். குறிப்பாக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுத் திரும்பியவர்கள், தீர்க்க முடியாத, தொடரும் உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்படுவோர் இந்தக் கடன்களில் மூழ்கித் தவிப்பார்கள்.
2022 ஆம் ஆண்டு அரசு தரவுகளிலிருந்து ஒரு தனியார் தொண்டு நிறுவனம் திரட்டிய ஆய்வின்படி, 10 அமெரிக்கர்களில் ஒருவர் குறைந்தபட்சம் 250 டாலர்கள் மருத்துவக் கடன் வைத்திருக்கிறார். இவ்வாறு கடன் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 2.30 கோடி. இவர்களில் 1.10 கோடி பேர் 2 ஆயிரம் டாலர்களுக்கும் மேல் கடன்கள் வைத்திருக்கின்றனர்.
இத்தகைய மருத்துவக் கடன்களை, மருத்துவமனைகளிலிருந்தும் பிற கடன் வசூல் நிறுவனங்களிடமிருந்து வாங்கி, பணத்தைச் செலுத்தி, இயலாத, எளிய மக்களின் கடன்களைத் தீர்த்துவைக்கிறது ஆர்ஐபி மெடிகல் டெட்.
கேஸி மேக்கின்டயர் ஒரு புத்தகப் பதிப்பாளர். 2019-ல் கருப்பைப் புற்றுநோய்க்காக சிகிச்சை பெறத் தொடங்கினார். கடந்த ஆண்டில் 3 மாதங்கள் அவர் மருத்துவமனையிலேயே சிகிச்சைக்காகத் தங்கியிருக்க நேரிட்டது என்கிறார் கணவர் கிரிகோரி.
கடந்த மே மாதத்தில் கிட்டத்தட்ட மரணத்தைச் சந்தித்த வேளையில்தான் கேஸி மேக்கின்டயரின் நினைவாக கடன் தீர்க்கும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று தம்பதியர் திட்டமிடத் தொடங்கினர். வடக்கு கரோலினாவில் தேவாலயத்தைச் சேர்ந்தோர் சுமார் 30 லட்சம் டாலர் மருத்துவக் கடன்களைத் தீர்க்கும் விடியோவொன்றைப் பார்த்ததன் மூலம் இருவரும் இந்த முயற்சியை மேற்கொள்ளத் தூண்டப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க | மாடுகளுடன் வாழ்வது எப்படி? (குடும்பக் கதை அல்ல!)
கடந்த ஐந்து மாதங்களாக வீட்டிலிருந்தவாறே மருத்துவப் பராமரிப்பில் இருந்தார் கேஸி மேக்கின்டயர். இதை போனஸாகக் கிடைத்த கோடைக் காலம் என்கிறார் கிரிகோரி. இந்தக் காலத்தில் கடற்கரைகளுக்குச் சென்றார், ஒன்றரை வயதேயான கிரேஸ் என்ற தன் மகள் உள்பட குடும்பத்துடன் பெரும்பகுதி நேரத்தைக் கழித்தார் கேஸி.
"அவருடைய வாழ்வின் கடைசி நேரத்தில் கேஸியின் உடல்நலம், மிக மிக மோசமானதாக இருந்தது. அவர் செய்து முடிக்க வேண்டும் என்று நினைத்த எல்லாவற்றையும் அவரால் முடிக்க முடியவில்லை"
என்ற கிரிகோரி மேலும் சொல்கிறார்:
"ஆனால், இதைச் செய்ய வேண்டும் என்று அவர் விரும்பினார் என்று எனக்கு நன்றாகத் தெரியும். எனவே, அவர் விரும்பியவாறே அதைச் செயற்படுத்தியிருக்கிறேன்."
கேஸியின் முயற்சி அமெரிக்காவில் பேசப்படும் ஒன்றாக மாறியதைத் தொடர்ந்து, இன்னமும் குறையாமல் நன்கொடை திரண்டுகொண்டிருக்கிறது.
கேஸி மேக்கின்டயர் என்ற பெண்மணியால் பல்லாயிரக்கணக்கானோர் மருத்துவக் கடனிலிருந்து விடுபட்டு நிம்மதியைப் பெறவிருக்கின்றனர்.
from Dinamani - சிறப்புச் செய்திகள் - https://ift.tt/oXpIcj1