உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் தொடக்க விழாவை எவ்வித முக்கியத்துவம் இல்லாமல் கைகழுவிவிட்டு, இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவமும் கொண்டாட்டமும் கடும் விமர்சனத்துக்குள்ளாகிக் கொண்டிருக்கிறது.
ஐசிசி நடத்தும் 13-வது உலகக் கோப்பை ஒருநாள் போட்டி இந்தியாவில் கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி தொடங்கியது.
உலகக் கோப்பையை பொருத்தவரை முதல் போட்டியில் எப்போதும் கடந்த சீசனில் வெற்றி பெற்ற அணியும், இரண்டாம் இடம் பிடித்த அணியுமே மோதுவது வழக்கம். அதன்படி, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள்தான் அகமதாபாத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் மோதின. ஆனால், தொடக்க விழாவோ ஆரவாரமின்றி அமைதியாக முடித்துக் கொள்ளப்பட்டது.
வழக்கமாக கிரிக்கெட் போட்டியின் தொடக்க ஆட்டத்தில்தான் எல்லாவித கோலாகலங்களும் கொண்டாட்டங்களும் நடைபெறும். இதுவே மரபாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.
ஆனால், இந்த முறை தொடக்க விழா ஆட்டத்தின்போது பெரிதாக எவ்வித விழாவும் இல்லை. ஆட்டத் திடலுக்குள் வந்து கோப்பையை முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் அறிமுகப்படுத்தியதுடன் முடிந்துவிட்டது.
இந்த தொடரின் 12-வது லீக் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் நாளை மறுநாள் (அக்.14) மோதுகின்றன. ஆனால், இந்தப் போட்டிக்கு முன்னெப்போதுமில்லாத அளவுக்கு நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், வருண் தவான் உள்ளிட்ட பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. போட்டிக்கு முன்பாக இசை நிகழ்ச்சி மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கும் பிசிசிஐ ஏற்பாடு செய்துள்ளது.
இதையும் படிக்க | நீர்நிலைகளை மறுவகைப்படுத்தும் சிஎம்டிஏ: நீதிமன்ற உத்தரவை மீறுகிறதா?
எந்த சர்வதேச போட்டிகளிலும் இதுவரை காணாத வகையில் தொடரின் மத்தியில் மிக பிரமாண்ட நிகழ்ச்சியை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
சர்ச்சைகள்
இந்தியா - பாகிஸ்தான் இடையேவுள்ள அரசியல் காரணங்களால் பல முறை இரு நாடுகளுக்கு இடையேயான கிரிக்கெட் உறவில் விரிசல் ஏற்பட்டாலும், கடந்த 2008 மும்பை தாக்குதலுக்கு பிறகு இருதரப்புக்கும் இடையே எந்த தனிப்பட்ட போட்டிகளும் பயணங்களும் நடைபெறவில்லை. உலகக் கோப்பை, ஆசியக் கோப்பை போன்ற சர்வதேச தொடர்களில் மட்டுமே இரு தரப்பினரும் ஒன்றாக விளையாடி வருகின்றனர்.
இரு நாடுகளுக்கு இடையேயான பிளவை வர்த்தகமாக்கும் கிரிக்கெட் வாரியம், சர்வதேச தொடர்களுக்கான அட்டவணையை முக்கியப் போட்டிகளில் இரு அணிகளும் மோதும் வகையிலேயே தயாரித்து வருகின்றது.
குறிப்பாக கடந்த மாதம் நடைபெற்ற ஆசியக் கோப்பை தொடரின் அட்டவணையில் எந்த லீக் போட்டிக்கும் ‘ரிசர்வ்’ நாள் அறிவிக்கப்படாத நிலையில், இந்தியா - பாகிஸ்தான் அணியின் போட்டிக்கு மட்டும் ‘ரிசர்வ்’ நாள் அறிவிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதேபோல் இந்த முறையும் உலகக் கோப்பை அட்டவணை வெளியானது முதல் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டிக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
உதாரணமாக முதலில் பாகிஸ்தான், இந்தியா அணிகளுக்கு இடையேயான போட்டி அக்டோபர் 15-ஆம் தேதிக்கு பட்டியலிடப்பட்டது. ஆனால், அகமதாபாத்தில் குறிப்பிட்ட நாளில் நவராத்திரி விழா நடைபெறுவதால் ஒருநாள் முன்னதாக போட்டி மாற்றப்பட்டு மறு அட்டவணை வெளியிடப்பட்டது. உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமான பிசிசிஐயின் முடிவை ஏற்க வேண்டிய கட்டாயத்தில் பிற நாடுகளும் தங்களின் போட்டிகளை மாற்றி அமைக்க ஒப்புக்கொண்டன.
உண்மையிலேயே பாதுகாப்பு காரணமாக இருந்தால், வேறு மைதானத்துக்கு போட்டியை மாற்றி இருக்கலாம். ஆனால், 1.32 லட்சம் பேர் அமரும் மோடி மைதானத்தைவிட்டு போட்டி மாற்றப்பட்டால் எதிர்பார்த்த லாபம் கிடைக்காது என்ற காரணத்தால் மொத்த அட்டவணையும் மாற்றப்பட்டது.
இதையும் படிக்க | சென்னையில் அடிப்படை வசதியற்ற குடிசைப்பகுதிகள் அதிகரிப்பு
அதுமட்டுமின்றி, இணையதளத்தில் போட்டியை காண டிக்கெட் பெற்ற ஆயிரக்கணக்கான பாகிஸ்தான் ரசிகர்களுக்கு இந்திய தூதரகம் நுழைவு இசைவு (விசா) வழங்காதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் ஜம்மு - காஷ்மீரில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர், “தீவிரவாதிகள் எல்லை மீறும் பிரச்னை முடியும்வரை இந்தியா - பாகிஸ்தான் இடையே இருதரப்பு கிரிக்கெட் போட்டி நடைபெறாது” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உலகக் கோப்பை போட்டியை விளம்பரம் செய்து வர்த்தகமாக மாற்றுவதாக பிசிசிஐ செயலாளரும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவை இணையத்தில் பல்வேறு தரப்பினர் சாடி வருகின்றனர்.
கடந்த 2019 உலகக் கோப்பையின்போது இந்தியா - பாகிஸ்தான் விளையாடிய போட்டியின் தொலைக்காட்சி ஒளிபரப்பை மட்டும் 27.3 கோடி பார்வையாளர்கள் கண்டுள்ளனர்.
இரு நாடுகள் விளையாடும் போட்டிகளை வைத்துப் பல நூறு கோடி ரூபாய் லாபத்தை ஈட்ட கிரிக்கெட் வாரியமும், பன்னாட்டு நிறுவனங்களும் காத்திருக்கின்றன.
மறுபுறம் டிக்கெட் விற்பனைக்கான அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ரூ. 2,500-க்கு வாங்கப்பட்டு கருப்பு சந்தையில் பல லட்சம் ரூபாய் வரை பேரம் பேசப்பட்டு டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை இரு அணிகளுக்கு இடையேயான போட்டியாக அல்லாமல், எதிரெதிர் நாடுகள் மோதும் போட்டியாக மாற்றும்போக்கு தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
இதனால், இரு நாட்டு கிரிக்கெட் ரசிகர்களும் ஒருவருக்கு ஒருவர் எதிரிகளாகவே பார்க்கும் நிலை தொடர்கிறது.
இரு பலம் வாய்ந்த அணிகள் மோதும் இறுதிப் போட்டிகளைக் காட்டிலும், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகளுக்கு அதிகப் பரபரப்பு ஏற்படுத்துவது ஏன்? இது வரவேற்கத்தக்கது அல்ல. எங்கேனும் ஓரிடத்தில் நிறுத்தப்பட வேண்டும் என்றால்... அதனை ஊக்குவிக்கும் முயற்சிகளையே ஒவ்வொரு போட்டி அமைப்பாளர்களும் செய்துவருகிறார்கள். விளையாட்டுப் போட்டியை விளையாட்டாகவே விட்டுவிட்டால்... இருநாட்டு ரசிகர்களும் தப்பிப்பார்கள்.
வெறுப்பு அரசியலைக் காசாக்குவதில் விளையாட்டைக்கூட மிச்சம் வைக்க மாட்டார்கள் போல!
from Dinamani - சிறப்புச் செய்திகள் - https://ift.tt/pYeSF6K