குலசேகரம் தனியார் மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவ மாணவி தற்கொலை செய்துகொண்டதில் இதுவரை ஒருவரும் கைது செய்யப்படாத நிலையில், இந்த வழக்கில் காவல்துறை மிகவும் மெத்தனமாகச் செயல்படுவதாக குடும்பத்தினரும் உறவினர்களும் குற்றம்சாட்டுகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் தூத்துக்குடி மாவட்டம் வி.டி.சி. நகரைச் சேர்ந்த வணிகரான சிவகுமார் - இந்திரா தேவி தம்பதியினரின் மகள் சுகிர்தா (27) முதுநிலை மருத்துவம் (எம்.டி.) அனஸ்தீசியா படித்து வந்தார். இவர் சென்னையில் தனியார் மருத்துவக் கல்லூரியில் இளநிலை மருத்துவம் பயின்றுவிட்டு தூத்துக்குடியிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 2 ஆண்டுகள் மருத்துவராகப் பணிபுரிந்தவர்.
கல்லூரி வளாகத்திலுள்ள விடுதியில் தங்கிப் பயின்று வந்த சுகிர்தா, கடந்த அக். 6 ஆம் தேதி வகுப்புக்குச் செல்லவில்லை. இதையடுத்து உடன் பயிலும் மாணவியர்கள் இருவர், மாணவி சுகிர்தாவைத் தேடி அவரது விடுதி அறைக்குச் சென்றுள்ளனர். அப்போது விடுதி அறை உள்பக்கமாகப் பூட்டிக் கிடந்துள்ளது.
இதுகுறித்து அந்த மாணவியர் கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்த நிலையில், கல்லூரி நிர்வாகத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மாணவி சுகிர்தா அறைக்குள் இறந்து கிடந்துள்ளார். உடல் தசைகளைத் தளர்வடையச் செய்யும் ஊசி மருந்தைத் தனக்குத்தானே செலுத்தி அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனக் கருதப்பட்டது.
இதையடுத்து குலசேகரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல் ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் திருவட்டாறு காவல் நிலைய ஆய்வாளர் ஜானகி ஆகியோர் மருத்துக் கல்லூரிக்குச் சென்று மாணவியின் சடலத்தைக் கைப்பற்றினர். அப்போது மாணவி எழுதிவைத்திருந்த ஒரு கடிதத்தையும் கைப்பற்றினர்.
இதையும் படிக்க | 'குழந்தைத் திருமணங்கள் முடிவுக்கு வர இன்னும் 300 ஆண்டுகள் ஆகும்'
அந்தக் கடிதத்தில் இறப்புக்கான காரணம் எனத் தலைப்பிட்டு அந்த மாணவி 3 பேரின் பெயர்களைக் குறிப்பிட்டிருந்தார். இதில் பரமசிவன் என்ற பேராசிரியர் பாலியல் துன்புறுத்தல் (உடல், மனம் ரீதியாக) செய்ததாகவும், டாக்டர் ஹரீஷ் என்ற சீனியர் மாணவர், டாக்டர் பிரீத்தி என்ற சீனியர் மாணவி ஆகியோர் மனதளவில் துன்புறுத்தியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து தூத்துக்குடியிலிருந்து வந்த மாணவி சுகிர்தாவின் தந்தை, மகளின் இறப்பு குறித்து குலசேகரம் காவல் நிலையத்தில் (அக். 6 ஆம் தேதி இரவு) புகார் கொடுத்தார். அந்தப் புகாரில் தனது மகளின் இறப்பில் சந்தேகம் உள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து போலீஸார், டாக்டர் பரமசிவன், மாணவர் ஹரீஷ் மற்றும் மாணவி பிரீத்தி ஆகியோர் மீது இந்திய குற்றவியல் சட்டம் 306-ன்படி தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில் அக். 7 ஆம் தேதி மாணவி சுகிர்தாவின் உடற்கூறாய்வு பரிசோதனை நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முடிந்த பின்னர், அவரின் பெற்றோர்கள் சடலத்தை பெற்றுக் கொண்டனர்.
இதைத் தொடர்ந்து காவல் ஆய்வாளர் ஜானகி, தக்கலை டிஎஸ்பி உதய சூரியன், நாகர்கோவில் ஏடிஎஸ்பி மதியழகன் ஆகியோர் குற்றம் சாட்டப்பட்ட டாக்டர் பரமசிவன், ஹரீஷ், பிரீத்தி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். மேலும் கல்லூரியில் மாணவி சுகிர்தாவுடன் பயிலும் இதர மாணவ, மாணவிகளிடமும் விசாரணை நடத்தினர்.
சுகிர்தா குறித்து அவரது உறவினர்கள் கூறும்போது, 'மகளை மருத்துவம் படிக்க வைக்க வேண்டும் என்பது சிவகுமாரின் ஆசை. அதன்படியே மருத்துவத்திலும் சேர்த்தார். சுகிர்தா மிகவும் பொறுப்பானவர். கலகலப்பானவர். தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு அவர் கோழை இல்லை. இறந்த பின்னர் அவரது இடது கையில் ஊசி குத்திய காயம் இருந்தது. அவரது மரணத்தில் எங்களுக்கு சந்தேகமாக உள்ளது. உயிரிழந்ததற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தெரிவித்தனர்.
கைது செய்யப்படவில்லை: இந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட 3 பேர் மீதும் தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட பின்னரும் அவர்கள் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
அரசியல் கட்சிகள் கோரிக்கை: இந்த நிலையில் மாணவி சுகிர்தாவின் தற்கொலைக்குக் காரணமானவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சமத்துவ மக்கள் கட்சி நிறுவனர் சரத்குமார் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் - லெலினிஸ்ட்), நாடார் மகாஜன சங்கம் உள்ளிட்டவை கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிக்க | இந்தியா - பாகிஸ்தான் போட்டி: காசாக்கப்படும் வெறுப்பு அரசியல்?
மாணவி தற்கொலை வழக்கில் காவல்துறையினர் மீது பொதுமக்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளனர். மாணவி சுகிர்தாவிடம் கைப்பற்றப்பட்ட கடிதம் குறித்து அவர் இறந்த அன்று போலீஸார் எதுவும் தெரிவிக்கவில்லை. மேலும் முதலில் சந்தேகத்துக்கிடமான தற்கொலை என்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடிதம் குறித்து சமூக ஊடகங்களில் தகவல் வந்த பின்னரே மறுநாள் முதல் தகவல் அறிக்கையில் மருத்துவர் பரமசிவன் உள்ளிட்ட 3 பேரின் பெயர்களைச் சேர்த்துள்ளனர்.
அதேபோல் சம்பவம் நடந்த குலசேகரம் காவல் நிலையத்தினர் விசாரணை நடத்தாமல் திருவட்டாறு காவல் ஆய்வாளர் ஜானகி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு விசாரித்து வருகிறார். இந்த வழக்கில் மாணவி கடிதத்தில் குறிப்பிட்டிருந்த 3 பேரிடமும் சாதாரணமாக விசாரித்துவிட்டுக் கைது போன்ற நடவடிக்கையைக்கூட காவல்துறை மேற்கொள்ளாதது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.
எனவே, இந்த வழக்கில் சிபிசிஐடி போலீஸார் விசாரிக்க வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சியினரும் பல்வேறு அமைப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளன.
இதனிடையே மாணவியின் தற்கொலை குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு தேசிய மருத்துவ ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.
குற்றவாளிகளுக்கு எதிராக விரைவில் நடவடிக்கை எடுத்துக் கைது செய்ய வேண்டும். மேலும், விரைவு நீதிமன்றங்கள் போன்ற அமைப்புகளின் மூலம் விசாரணை நடத்தி, இத்தகைய குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் என்றும் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதையும் படிக்க | நீர்நிலைகளை மறுவகைப்படுத்தும் சிஎம்டிஏ: நீதிமன்ற உத்தரவை மீறுகிறதா?
from Dinamani - சிறப்புச் செய்திகள் - https://ift.tt/pYeSF6K