பிகாரில் பக்ஸர் மாவட்டத்தில் புதன்கிழமை பின்னிரவில் நேரிட்ட ரயில் விபத்திற்குக் காரணம் தண்டவாளத்தில் ஏற்பட்டிருந்த விரிசல்தான் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வேயில் கடைசியாக நடந்த விபத்தில் அசாம் சென்றுகொண்டிருந்த வடகிழக்கு அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயிலின் 23 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்; 60-க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.
ஒடிசாவில் நேரிட்ட ரயில் விபத்தில் 300 பேர் இறந்தபோது நடந்ததைப் போலவே, இப்போதும், விசாரணைகள் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இழப்பீடுகளும் அறிவிக்கப்பட்டுவிட்டன. விபத்து நேர்ந்த சில மணி நேரங்களிலேயே ரயில்வே துறைக்கும் பொறுப்பான அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததுடன், விபத்துக்கான காரணத்தைக் கண்டறிவோம் என்று எக்ஸ் வலைத்தளத்தில் தெரிவித்துவிட்டார்.
தொடக்க நிலை விசாரணையில் இந்த விபத்துக்கு ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்டிருந்த விரிசல்தான் காரணமாக இருக்க வேண்டும் என்று கண்டறியப்பட்டுள்ளது. எனினும், இதுவரை அதிகாரப்பூர்வமாக யாரும் இதை உறுதிப்படுத்தத் தயாராக இல்லை. இப்போதைக்குள் யாரும் உறுதிப்படுத்த மாட்டார்கள் என்றும் நம்பலாம்.
இதையும் படிக்க | மோனா லிசாவின் மற்றொரு ரகசியம்!
விபத்து நடந்த இடத்தில் தண்டவாளத்தில் ஏதோ கோளாறு என்றும் கடும் அதிர்வும் குலுங்கலும் இருந்ததாகவும் திடீரென என்ஜினின் பிரேக் அமைப்பில் அழுத்தம் குறைந்ததாகவும் என்ன ஏது என்று புரிந்துகொள்வதற்குள்ளேயே விபத்து நேரிட்டுவிட்டதாகவும் என்ஜின் டிரைவர் விபின் குமார் சின்ஹ கூறியிருப்பதாகத் தெரிகிறது.
ரயிலின் பத்து பெட்டிகள் கடந்த நிலையில் பெரிய சப்தமும் தீப்பொறி கிளம்பியதையும் பார்த்ததாக விபத்து பகுதியிலுள்ள ரயில்வே கிராசிங் கேட் கீப்பர் தெரிவித்திருக்கிறார்.
இந்த விபத்து பற்றி பிகார் மாநில முதல்வர் நிதீஷ் குமார் குறிப்பிடும்போது, தாம் ரயில்வே துறை அமைச்சராக இருந்தபோது, பிரதமர் வாஜபேயி அரசில் பயணிகள் பாதுகாப்புக்காக ஏராளமான முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மத்தியில் இப்போதுள்ள அரசும் பயணிகள் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில்கள் விடப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்து, நாட்டின் குறுக்கும் நெடுக்குமாக வந்தேபாரத்கள் (பறக்கத்) தொடங்கிவிட்டிருக்கும் நிலையில் நிதீஷ் குமாருக்கு ஏற்பட்டுள்ள அச்சமும் முன்னெச்சரிக்கை உணர்வும் நாட்டு மக்கள் அனைவருக்குமே இருக்கிறது.
இதையும் படிக்க | அயோத்தியில் புதிய பாபர் மசூதிக்கு நபிகள் நாயகம் பெயர்!
இவ்வாறு தொடர்ந்து விபத்துகள் நடந்துகொண்டிருக்கின்றவே, உள்ளபடியே யார்தான் பொறுப்பு? கட்டமைப்புப் பணிகளிலும் ரயில்கள் இயக்கத்திலும் என்னதான் குறைபாடு? எப்படித்தான் தீர்க்கப் போகிறார்கள்? உயிரைக் கொடுத்து, இழப்பீட்டைப் பெறுவதுடன் மக்கள் திருப்தியடைந்துகொள்ள வேண்டுமா?
அதிஅதிவேக வந்தேபாரத் ரயில்களும் தேஜஸ்களும் ஓடத் தொடங்கிவிட்டன. ஆனால், இவற்றுக்கெல்லாம் ஏற்றபடி நம்முடைய ரயில்வே கட்டமைப்புகளும் சிக்னல் அமைப்புகளும் இருக்கின்றனவா? வழிநெடுக இருபுறமும் திறந்த வெளியாகக் கிடக்க ரயில் பாதையில் யார் வேண்டுமானாலும், ஆடு மாடுகள் உள்பட, அலைந்து திரியலாம், புக நேரிடலாம் என்கிற நிலையில் இத்தனை வேகத்தில் செல்லும் ரயில்களை நிறுத்த முடியுமா? நிறுத்தினால் ரயில்களும் பயணிகளும் தப்பிப்பார்களா? ரயில் பாதையின் இருபுறமும் தடுப்புச் சுவர்கள் அமைப்பது என்றால் எவ்வளவு தொலைவுக்கு அமைப்பார்கள்? எவ்வளவு காலத்துக்குள் அமைத்து முடிப்பார்கள்?
சாதாரண வேகத்தில் செல்லும் ரயில்களே இவ்வாறு தொடர்ந்து விபத்துக்குள்ளாகின்றனவே? அடுத்தடுத்து வரப்போகும் வந்தேபாரத் ரயில்களின் நிலைமை பற்றி நினைத்தும் பார்க்க முடியாது.
சில மாதங்களுக்கு முன்னர்தான் ஒடிசாவிலுள்ள பாலசோர் அருகே நேரிட்ட ரயில் விபத்தில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இறந்தவர்களின் எண்ணிக்கையையே உறுதிப்படுத்த முடியாத நிலையில் காயமுற்றவர்கள் பற்றி என்ன கணக்கு இருக்கப் போகிறது? ஆயிரத்து இருநூறுக்கும் அதிகமானோர் காயமுற்றனர்.
இதையும் படிக்க | தமிழகத்தில் வீணாகும் 83 எம்பிபிஎஸ் சேர்க்கை இடங்கள்
பாலசோர் விபத்தில் கடைசி வரை அடையாளம் காண முடியாமலே போய்விட்ட 28 பேரின் உடல்கள், ஏறத்தாழ 4 மாதங்களுக்குப் பின், சில நாள்கள் முன்னர்தான் எரியூட்டப்பட்டிருக்கின்றன. இறந்துவிட்ட இவர்களைத் தேடக்கூட யாருமில்லையா? இவர்கள் அத்தனை பேருக்குமே என்று குடும்பங்கள் இல்லாமலா இருக்கும்? அல்லது இவர்களில் பலர் இன்னமும் உயிருடன் இருப்பதாக நம்பிக்கொண்டு எங்கோ அவர்களுடைய உறவினர்கள் இருக்கிறார்களா? இவர்களுக்கு என்று எந்த அடையாளமோ முகவரியோ இல்லையா? எந்தளவு துயரமான நிலையில் நாடும் மக்களும்?
இப்போதெல்லாம் ரயில் விபத்துகள் சாதாரண விஷயங்களாகிவிட்டன. என்பதுடன் இவற்றைப் பற்றியெல்லாம் யாரும் பெரிதாகக் கண்டுகொள்வதுகூட இல்லை.
பாவம், ஜவாஹர்லால் நேரு பிரதமராக இருந்த காலத்தில் எங்கோ நடந்த அரியலூர் ரயில் விபத்துக்குத் தார்மிகப் பொறுப்பேற்று ராஜிநாமா செய்திருக்கிறார் ரயில்வே அமைச்சராக இருந்த லால் பகதூர் சாஸ்திரி. இப்போதுதான் ரயில்வேக்காகத் தனி அமைச்சர்கூட இல்லையே!
from Dinamani - சிறப்புச் செய்திகள் - https://ift.tt/4OqhT2M