புது தில்லி: மத்திய அரசுக்கும், இரண்டு தன்னார்வ அமைப்புகளுக்கும் இடையே வெகுகாலமாக நடைபெற்று வரும் பட்டினிப் பட்டியல் குறித்த சண்டை இந்த ஆண்டு முற்றியிருக்கிறது.
உலக நாடுகளில் பட்டினிப் பட்டியலில் இந்தியா 111வது இடத்தில் இருப்பதாக தன்னார்வ அமைப்புகள் அறிக்கை வெளியிட்டுள்ளன. ஆனால், தவறான அளவுகோலுடன் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டிருப்பதாக இந்தியா கண்டனம் தெரிவித்திருக்கிறது.
பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும் அண்டை நாடுகளான பாகிஸ்தான் (102வது இடம்), வங்கதேசம் (81வது இடம்), நேபாளம் (69வது இடம்), இலங்கை (60வது இடம்) ஆகியவற்றுக்கெல்லாம் கீழே இந்தியா 111வது இடத்தில் இருப்பதாக உலக பட்டினிக் குறியீட்டில் குறிப்பிடப்பட்டிருப்பதற்கு இந்தியா தனது பகிரங்கக் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. அதிலும் கடந்த 2022ஆம் ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு 4 இடங்களுக்கு இந்தியா சரிந்துள்ளதாக இந்த பட்டியல் தெரிவிக்கிறது.
பட்டினிக் குறியீட்டு அறிக்கைக்கு கடும் கண்டனத்தைப் பதிவு செய்திருக்கும் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், உலக பட்டினிப் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் 125 நாடுகளில், வெறும் 28.7 புள்ளிகளுடன் இந்தியா 111வது இடத்தில் இருக்கிறது என்ற தகவலை திட்டவட்டமாக மறுத்துவிட்டது.
மத்திய அரசு அளித்திருக்கும் பதிலில், மிகக் கடுமையான விதிமுறைகளால், பிழையான மதிப்பெண் உள்ளீடுகளாலும், எப்போதும் இந்தியா மோசமான பட்டினிப் பட்டியலில் இடம்பெறுவது ஏதோ தவறான நோக்கத்துடன் செயல்படுகிறது என்பதையே காட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளது.
தவறான மதிப்பீடுகள் காரணமாக, இதுவரை பட்டினிப் பட்டியலில் இந்தியா சரியான இடத்தில் இடம்பெறவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பட்டினிப் பட்டியில் ஆய்வில் இடம்பெற்ற 3 மற்றும் நான்காவது குறியீடுகள், குழந்தைகளின் ஆரோக்கியத்தை அளவிடுவதாக அமைந்துள்ளது. அது நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையை பிரதிபலிப்பதாக இருக்காது.
மேலும், நான்காவது குறியீடு, ஊட்டச்சத்துக் குறைந்த மக்கள் தொகை என்பதற்கு வெறும் 3,000 பேரின் மாதிரிகளை வைத்து மட்டும் அளவிட்டிருப்பது சரியாக இருக்காது என்றும் தெரிவித்திருக்கிறது.
கடந்த ஆண்டும் உலக நாடுகளின் பட்டினிப் பட்டியலில் இடம்பெற்ற 121 நாடுகளில் 29.1 புள்ளிகளுடன் இந்தியா 107வது இடத்தில் இருந்தது. கடந்த பல ஆண்டுகளைப் போலவே, அயர்லாந்து மற்றும் ஜெர்மனியிலிருந்து செயல்படும் இரண்டு தன்னார்வ அமைப்புகளும், பட்டினிப் பட்டியலை வெளியிட்டிருக்கிறது.
அதில்..
உலகளவில் பட்டினிக் குறியீடு-2023 இல் 28.7 புள்ளிகள் பெற்றிருப்பது, இந்தியாவில் பசியோடு வாழும் மக்களின் எண்ணிக்கை கடுமையாக உள்ளது என்பதன் தீவிர நிலையை உணர்த்துவதாக உள்ளதாக அறிக்கை கூறுகிறது.
இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு விகிதம் 16.6 சதவீதமாகவும் ஐந்து வயதுக்குள்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 3.1 சதவீதமாகவும் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இந்தக் குறியீட்டின் படி, 15 முதல் 24 வயதுக்குள்பட்ட பெண்களில் 58.1 சதவீதம் பேர் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு விகிதத்திலும் இந்தியா முன்னணியில் இருப்பதாகவும் இது 18.7 சதவீதமாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. குழந்தைகளிடம் ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தை வளர்ச்சி குன்றிய நிலை, குழந்தை உடல் எடை குறைதல், குழந்தை இறப்பு ஆகியவற்றைக் கொண்டு இந்த விகிதம் கணக்கிடப்படுகிறது என்று கூறப்படுகிறது. மேலும், குழந்தைகள் உயரத்துக்கு ஏற்ற எடையுடன் இருப்பதை கணக்கிட்டு புள்ளிகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில், இந்தியாவில் ஊட்டச்சத்து குறைவான குழந்தைகளின் விகிதம் 16.6 சதவிகிதமாகவும், 5 வயதுகுள்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 3.1 சதவிகிதமாகவும் உள்ளது.
from Dinamani - சிறப்புச் செய்திகள் - https://ift.tt/4OqhT2M