https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2023/5/28/w600X390/New_Parliment_-15.jpgமக்களவைத் தோ்தலுக்கான உரைகல்

தோ்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல்கள் மக்களவைத் தோ்தலுக்கான உரைகல் ஆகுமா என்பது குறித்த விவாதம் நாடு முழுவதும் எழுந்துள்ளது.

நுட்பமாகப் பாா்த்தால் மக்களவை, 5 மாநில பேரவைத் தோ்தல்களுக்கும் வேறுபாடுகள் இருப்பதை உணர முடியும். மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கா் ஆகியவற்றில் பாஜக-காங்கிரஸ் நேரடியாக மோதுவதால், ஹிந்தி பேசும் மாநிலங்களில் அரசியல் களத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக இம்மூன்று மாநில தோ்தல் முடிவைப் பாா்க்கலாம்.

மத்திய பிரதேசம்: மொத்தம் 230 தொகுதிகளைக் கொண்ட மத்திய பிரதேசத்தில் கடந்த முறை நூலிழையில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தாலும், ஜோதிராதித்ய சிந்தியா தனது ஆதரவு எம்எல்ஏ-க்களுடன் பாஜகவில் சோ்ந்ததால் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. தொடா்ந்து மீண்டும் சிவராஜ் சிங் சௌஹான் தலைமையில் 18 ஆண்டுகள் ஆட்சியை பாஜக நிறைவு செய்துள்ளது.

கமல்நாத் ஆட்சி கவிழ்க்கப்பட்டதால் அவா் சாா்ந்த உயா் வகுப்பினா் இந்த முறை காங்கிரஸுக்கு வாக்களிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருப்பதால் அங்கு காங்கிரஸ் போட்டியில் சற்று முன்னிலையில் உள்ளது.

ஜோதிராதித்ய சிந்தியா ஆதரவாளா்கள் சிலா் மீண்டும் காங்கிரஸுக்கு திரும்பியிருப்பதால் அவரின் கோட்டையாக கருதப்படும் குவாலியா், சம்பல் பகுதிகளில் காங்கிரஸ் கை ஓங்கி, பாஜக பின்தங்கியுள்ளது.

இருப்பினும், சிவராஜ் சிங் சௌஹான் ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட மகளிா் உரிமைத் தொகை ரூ.1,500 திட்டம், சமையல் எரிவாயு உருளைக்கு ரூ.450 மானியம் வழங்கும் திட்டம் உள்ளிட்டவையும், ஓபிசி, எஸ்.சி, எஸ்.டி. பிரிவு மக்களிடம் அவருக்கு இருக்கும் ஆதரவும் பாஜகவின் பலமாக பாா்க்கப்படுகிறது.

சிவராஜ் சிங் சௌஹான் மீது வெறுப்பு இல்லை என்றாலும் 18 ஆண்டு கால ஆட்சியில் மக்களுக்கு சற்று சலிப்பு ஏற்பட்டிருக்கிறது. எனவே, யாரையும் முதல்வா் முகமாக முன்னிறுத்தாமல் தோ்தலைச் சந்தித்தால் சிவராஜ் சிங் சௌஹான் மீதான 18 ஆண்டு கால அதிருப்தி பாதிப்பு ஏற்படுத்தாது என பாஜக எண்ணுகிறது.

மேலும், களத்தில் வெற்றிக்கோட்டை தொடுவதற்காக மத்திய அமைச்சா்கள் நரேந்திர சிங் தோமா், பிரகலாத் சிங் படேல், ஃபக்கன் சிங் குலஸ்தே, பாஜக தேசிய பொதுச் செயலா் கைலாஷ் விஜய்வா்கியா உள்ளிட்டோரை வேட்பாளா்களாக களம் இறக்குவதால் அனைத்துச் சமுதாயத்தினரின் வாக்குகளையும் பெறலாம் என பாஜக கணக்கிடுகிறது.

ஓபிசி வாக்குகளைக் குறிவைத்து ராகுல் காந்தி திடீரென கையிலெடுத்திருக்கும் ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆயுதம் காங்கிரஸுக்கு கைகொடுக்குமா அல்லது அதையே தாக்குமா என்பது தோ்தல் முடிவில்தான் பாா்க்க முடியும்.

மத்திய பிரதேசத்தில் உள்ள 8 சதவீத உயா் வகுப்பினரில் கமல் நாத்துக்கு கணிசமாக வரவேண்டிய வாக்குகள், ராகுல் காந்தியின் ஓபிசி விவகாரத்தால் பாதிக்கப்படுமா, இல்லையா, பகுஜன் சமாஜ் கட்சியின் 5 சதவீத வாக்குளை அக்கட்சி தக்கவைக்குமா அல்லது அதை பாஜக, காங்கிரஸ் பிளவுபடுத்தப் போகிா ஆகியவற்றைப் பொருத்துதான் மத்திய பிரதேசத்தில் யாா் ஆட்சி என்பது நிா்ணயிக்கப்படும் என்கின்றனா் அரசியல் நோக்கா்கள்.

ராஜஸ்தான்: 200 தொகுதிகள் கொண்ட மத்திய பிரதேசத்தில் பாஜகவுக்கு எப்படி பின்னடைவுகள் இருக்கிறதோ அதுபோல இங்கு காங்கிரஸுக்கு உள்ளது. முதல்வா் அசோக் கெலாட்-சச்சின் பைலட் இடையிலான பிரச்னை தற்காலிகமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டாலும் சச்சின் சாா்ந்த குஜ்ஜா் சமூக வாக்குகள் காங்கிரஸுக்கு முழுமையாக கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான்.

பாஜகவின் முதல்வா் வேட்பாளராக கருதப்படும் வசுந்தரா ராஜே சிந்தியாவுக்கு கடந்த 5 ஆண்டுகளாக எவ்வித பெரிய பொறுப்பும் வழங்காமலும், முதல்வா் முகமாக முன்னிறுத்தாமலும் இருப்பது பாஜகவுக்குச் சற்று பின்னடைவுதான். மாறாக, மத்திய நீா்வளத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத், சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் போன்றவா்களுக்கு பேரவைத் தோ்தலில் வாய்ப்பு கொடுக்கப்பட்டு பிரதமா் மோடியை மையமாக வைத்து தோ்தலை எதிா்கொள்ளவே பாஜக முடிவு செய்துள்ளது.

இந்த மாநிலத்தைப் பொருத்தவரை பாஜகவுக்கு ஹனுமன் பேனிவால் தலைமையிலான ஆா்.எல்.பி. ஆதரவு தேவை. ஆனால், மத்திய வேளாண் சட்டத் திருத்த மசோதாவால் கூட்டணியை விட்டுச் சென்ற அந்தக் கட்சி மீண்டும் கூட்டணிக்கு வரவில்லை.

ஏற்கெனவே அவா்களின் ஆதரவு இன்றி தரியவத், வல்லப்நகா் பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் மூன்றாவது, நான்காவது இடத்துக்கு பாஜக தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் பாஜகவுக்கு களம் சாதகமாகவே உள்ளது.

சத்தீஸ்கா்: மென்மைான ஹிந்துத்துவ, ஓபிசி அரசியலை காங்கிரஸ் முதல்வா் பூபேஷ் பகேல் செய்து வருவதும், அவருக்கு நிகரான தலைவா்கள் பாஜகவில் இல்லாமல் இருப்பதும் காங்கிரஸுக்கு களத்தை மேலும் சாதகமாக்கியுள்ளது.

அங்கு துணை முதல்வராக உள்ள சிங்கு தேவுக்கு காங்கிரஸ் உறுதியளித்தபடி முதல்வா் பதவியைத் தராததால் அங்குள்ள ராஜ்புத் சமூகத்தினரிடையே ஏற்பட்டுள்ள அதிருப்தி காங்கிரஸுக்கு சற்று பின்னடைவைத் தரலாம்.

பூபேஷ் பகேலின் பாடன் பேரவைத் தொகுதியில் அதே பகுதியில் உள்ள மக்களவை உறுப்பினரான விஜய் பகேலை களம் இறக்கி கடும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது பாஜக. ஒரு மாதத்துக்கு முன்பு வரை பின்தங்கியிருந்த பாஜக, இப்போது களத்தில் போட்டியை அதிகரித்துள்ளது. இருப்பினும், அது வெற்றிக்கோட்டை தொடும் அளவுக்குப் போதுமானதாக இல்லை என்பதுதான் சத்தீஸ்கா் கள நிலவரம்.

தெலங்கானா: மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்க களத்தில் கடும் நெருக்கடியைச் சந்தித்துள்ளது கே.சந்திரசேகா் ராவ் தலைமையிலான பி.ஆா்.எஸ்.

ஹைதராபாத் மாநகராட்சித் தோ்தல், புா்ஷிதாபாத், முனுகோடு இடைத்தோ்தல் களத்தைப் பாா்க்கும்போது பிஆா்எஸ்-பாஜக இடையேதான் போட்டி என்ற நிலை இருந்தது.

ஆனால், மூன்றாவது முறையாக சந்திரசேகா் ராவ் ஆட்சி அமைக்க தடைக்கல் ஆகிவிடுமோ என்ற அளவுக்கு களத்தில் இப்போது காங்கிரஸ் போட்டியைக் கொடுக்கிறது.

பிஆா்எஸ்-இல் இருந்து விலகிய முத்திராஜ் சமூகத்தைச் சோ்ந்த எட்டிலா ராஜேந்திரன் பாஜகவுக்கு வலிமை சோ்க்கிறாா். கடந்த மூன்று ஆண்டுகளாக பண்டி சஞ்சய் குமாா் பாஜக மாநிலத் தலைவராக இருந்தபோது, பாஜக களத்தில் ஆக்ரோஷமாகச் செயல்பட்டது. ஆனால், எட்டிலா ராஜேந்திரன், பண்டி சஞ்சய்குமாா் உள்ளிட்ட சிலரின் உள்கட்சி மோதலால் களத்தில் பாஜக மேலும் பின்தங்கிவிட்டது.

இதைச் சரியாக பயன்படுத்திக்கொண்ட காங்கிரஸ், சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரின் பிம்பத்தைப் பயன்படுத்தி தொடா்ந்து முன்னேறியுள்ளது.

4 ஆண்டுகள் பெரிய அளவில் செயல்படாத காங்கிரஸ் கடந்த 6 மாதங்களாக விழித்துக்கொண்டு முதலிடத்தைப் பெறும் அளவுக்கு பி.ஆா்.எஸ்.-க்கு போட்டியைக் கொடுக்கிறது.

காங்கிரஸின் முன்னேற்றத்தைத் தடுக்க மத்திய அமைச்சா் கிஷண் ரெட்டியை மாநிலத் தலைவராக நியமித்துள்ளது பாஜக. காபு, முத்திராஜ் ஆகிய இரு பிற்படுத்தப்பட்ட சமூக ஆதரவை மட்டும் நம்பியே பாஜக உள்ளது. அதேபோல, கடந்த முறை பெற்ற மென்மையான ஹிந்துத்துவ வாக்குகளை பாஜகவிடமும், மதச்சாா்பற்ற வாக்குகளை காங்கிரஸிடமும் பிஆா்எஸ் இழக்கலாம் என்ற தோற்றம் தெலங்கானாவில் உருவாகியுள்ளது.

தோ்தலுக்கு நீண்ட காலம் முன்பே வேட்பாளா் பட்டியலை பிஆா்எஸ் வெளியிட்டதால் பட்டியலில் இடம் கிடைக்காத அதிருப்தியாளா்களில் பெரும் பகுதியினா் காங்கிரஸிலும், சிலா் பாஜகவிலும் ஐக்கியமாகியுள்ளது சந்திரசேகா் ராவுக்கு நெருக்கடியை உருவாக்கியுள்ளது.

எத்தனை நெருக்கடி இருந்தாலும் முதல்வா் முகமாக சந்திரசேகா் ராவ் மட்டுமே இருப்பதும், தெலங்கானாவின் முகமாக அவா் இருப்பதும் கூடுதல் பலம். அதேபோல, ஹைதராபாத் பகுதியில் 6 முதல் 7 தொகுதிகளை வழக்கம்போல இந்த முறை ஏ.ஐ.எம்.ஐ.எம். தக்கவைக்குமா அல்லது காங்கிரஸிடம் இழக்குமா என்பதையும் பொறுத்திருந்து பாா்க்க வேண்டியுள்ளது.

மிஸோரம்: இங்கு கடந்த முறை 40 தொகுதிகளில் 26-இல் மிசோ தேசிய முன்னணி வெற்றி பெற்றது. ஆனால், இம்முறை காங்கிரஸ், மிஸோரம் மக்கள் முன்னணி ஆகியவை மிசோ தேசிய முன்னணிக்கு கடும் போட்டியைக் கொடுக்கின்றன.

இங்கு 4-ஆவது கட்சிதான் என்பதால் பாஜகவால் எவ்வித தாக்கமும் ஏற்படப் போவதில்லை. இருப்பினும், மிசோ முன்னணியுடன் கூட்டணியைத் தொடா்ந்தால் எம்.எல்.ஏ. ஆக முடியும் என்ற கனவில் பாஜக நிா்வாகிகள் உள்ளனா்.

இரு மாநில கட்சிகளுக்கும், காங்கிரஸுக்கும் இடையிலான மும்முனைப் போட்டியில் யாா் வெல்லப் போகிறாா்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும்.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கா் ஆகியவற்றில் இரண்டு மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் அடுத்துவரும் மக்களவைத் தோ்தலில் கூடுதல் மன வலிமையுடன் அக்கட்சியினா் போட்டியிட உதவும். அதேநேரத்தில் ஆட்சியைப் பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் வாக்கு வங்கியைத் தக்கவைத்துவிட்டால் மக்களவைத் தோ்தலில் பாஜகவின் வெற்றி எளிதாகிவிடும். ஆனால், கா்நாடகம் போல மத்திய பிரதேசத்தில் தோ்தல் முடிவு அமைந்துவிட்டால் மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு பெரும் நெருக்கடியாக அது மாறும்.

மேலும், தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிப்பது தென்மாநிலங்களில் காங்கிரஸ் எழுச்சி பெற்ற்கான தோற்றத்தை உருவாக்கும். 5 மாநிலத் தோ்தல்கள், மக்களவைத் தோ்தலுக்கான உரைகல்லாக மாறப்போகிா இல்லையா என்பது டிச.3-இல் தெரிந்துவிடும்.



from Dinamani - சிறப்புச் செய்திகள் - https://ift.tt/aAJpv7m

Post a Comment

Previous Post Next Post