https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/2/w600X390/honey_trap.jpgஹனி-டிராப் மோசடிகளில் சிக்கிக் கொண்டால் என்ன செய்வது?

சென்னை: அண்மைக்காலமாக சென்னையில் ஹனி-டிராப் மோசடிகள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் நிலையில், சைபர் பிரிவு காவல்துறையினர் மக்களுக்கு சில அறிவுறுத்தல்களை வெளியிட்டிருக்கிறது. ஹனி-டிராப் மோசடிகளில் சிக்கிக் கொண்டால் பணத்தைக் கொடுத்து தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைக்காமல், உடனடியாக சைபர் பிரிவு காவல்துறையினரை நாடலாம் என்றும், சைபர் பிரிவு இணையதள முகவரி மூலம் தொடர்புகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், பெரும்பாலும் குற்றவாளிகள் வெளிநாடுகள் அல்லது வெளி மாநிலங்களில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் சென்னையில் கிட்டத்தட்ட 40 பேர் சைபர் பிரிவு காவல்துறையிடம் புகார் கொடுத்திருக்கிறார்கள். பொதுவாகவே, இதுபோன்ற ஹனி-டிராப் மோசடிகளில் சிக்கிக் கொண்டவர்கள், தங்களைப் பற்றி தவறாக வெளியே தெரிந்துவிடுமோ என்ற அச்சத்தில்தான் பணம் கொடுக்க நினைக்கிறார்கள். ஆனால், யாரும் இதுபோன்று பணம் கொடுத்து ஏமாற வேண்டாம், உடனடியாக சைபர் கிரைம் காவல்துறையின் www.cybercrime.gov.in என்ற இணையதளத்தை நாடலாம் என்றும், இலவச அழைப்பு எண் 1930-ஐ தொடர்பு கொண்டு தங்களது புகார்களை பதிவு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக, அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து  வாட்ஸ்ஆப் அல்லது முகநூல் மெசெஞ்ஜர் மூலமாக விடியோ கால் வந்தால் அதனை எடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. காரணம், சில நபர்கள், இந்த விடியோ கால் மூலம் அழைப்பு விடுப்பார்கள். மோசடியாளர்கள், ஒரு பெண்ணின் ஆடையில்லாத் புகைப்படத்துடன் அழைப்பு விடுத்து அதனை ரெக்கார்டிங் செய்து கொண்டு, போனை எடுத்தவருக்கு மிரட்டல் விடுப்பார்கள். அவர்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்த விடியோவை அனுப்பிவிடுவோம் என்று மிரட்டுவார்கள். இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக பணம் கேட்டு மிரட்டுவார்களே தவிர, அவர்கள் பணம் கொடுத்ததும் உங்களை விட்டுவிடுவார்கள் என்று நினைக்க வேண்டாம் என்கிறார்கள் காவல்துறையினர். இதுபோல விதவிதமாக கைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் மிரட்டல் விடுப்பார்கள். ஒரு சிலர் முதலில் கேட்ட தொகையை கொடுத்துவிட்டு பிறகும் மிரட்டல் வரும்போதுதான் சைபர் காவல்துறையை நாடுகிறார்கள். எனவே, இதுபோன்ற மோசடிகளில் சிக்கினால் பயப்பட வேண்டாம், உடனடியாக புகார் கொடுங்கள் என்று கூறப்பட்டுள்ளது.  

from Dinamani - சிறப்புச் செய்திகள் - https://ift.tt/Wl0mrBG

Post a Comment

Previous Post Next Post