https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2023/8/24/w600X390/moon_chandra.jpgநிலவின் தென்துருவத்தின் மீது தீராத காதல் ஏன்? அப்படி என்ன இருக்கிறது?

  ஆகஸ்ட் 23ஆம் தேதி விண்வெளித் துறையில் இந்தியாவுக்கான நாளாக மாறியிருந்தது. எங்குப் பார்த்தாலும் சந்திரயான் - 3 விண்கலம் நிலவில் தடம்பதித்ததன் கொண்டாட்டமாகவும் பேச்சாகவுமே இருந்தது. ஏற்கனவே அமெரிக்கா, ரஷ்யா, சீன நாடுகள் முயன்றும் நிலவின் தென் துருவத்தை அடைய முடியாமல் போன நிலையில், அதனை இந்தியா சாதித்துக் காட்டியிருக்கிறது.  இந்திய விண்வெளி ஆய்வு மையம் அனுப்பிய சந்திரயான்-3 விண்கலம் திட்டமிட்டபடி புதன்கிழமை மாலை நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன்மூலம் இந்தியா உலக சாதனை படைத்துள்ளது.   நிலவின் தென் துருவம் அத்துனை முக்கியமானதாக இருப்பது ஏன்? காரணம் ஒன்றல்ல, இரண்டல்ல எண்ணற்றவை என்கிறது தகவல்கள் தண்ணீர்.. தண்ணீர்.. நிலவின் தென் துருவத்தில் பனிக்கட்டி உறைந்து, நிரந்தரமாக படர்ந்து காணப்படுவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த பனிக்கட்டிதான் மிகவும் முக்கியமான ஆதாரமாகக் கருதப்படுகிறது. நாளை மனிதர்கள் நிலவுக்குச் செல்ல அங்கிருக்கும் நீர்வளம் முக்கியம். அதனைக் குடிக்க, சமைக்க, எரிபொருளாக்க முடியுமா என்ற அடுத்தக்கட்ட ஆராய்ச்சிகளைக் தொடங்கலாம். இதர வாயுக்கள்.. அங்கு பனிக்கட்டி இருப்பது உறுதி செய்யப்பட்டுவிட்டது. அதனுடன் இதர வாயுக்கள் என்னென்ன இருக்கின்றன என்பதை ஆராய வேண்டும். மீத்தேன், அம்மோனியா போன்றவை இருக்கிறதா என்பதும் அடுத்த ஆராய்ச்சிக்கான அவசியம். இவை இருந்தால்தான், அங்கு மனிதர்களை தரையிறக்க முடியும். புவியியல் நுண்ணறிவு ஆராய்ச்சி உலகிலேயே புவியியல் நுண்ணறிவு ஆராய்ச்சிக்கு அதிக ஆர்வத்தைத் தூண்டும் பகுதியாக இருப்பது நிலவின் தென் துருவம்தான். இந்த பகுதியில் நடக்கும் ஆராய்ச்சின் மூலம்தான், நிலவின் உருவாக்கம் மற்றும் அதில் நேரிட்ட மாற்றங்களை துல்லியமாக அறிய முடியும். வானியல் ஆராய்ச்சி வானியல் ஆராய்ச்சியை நடத்த மிகச் சிறந்த இடமாகவும் நிலவின் தென் துருவம் பார்க்கப்படுகிறது. இதுவரை சூரியனின் ஒளிக்கதிர்கள் படாத, நிழல் படிந்த பகுதியாக தென் துருவம் இருக்கிறது. இங்குதான் ரேடியோ அலைவரிசை மற்றும் இதர அலைக் கற்றைகளை ஆய்வு செய்ய முடியுமாம். ஏன் என்றால், புவியின் வளிமண்டலத்தால் அவை தடுக்கப்படுகின்றனவாம். ஒருவேளை, தண்ணீர் வளம் இருப்பது உறுதி செய்யப்பட்டுவிட்டால், மனிதர்களை அங்கே தரையிறக்குவதற்கு உலக நாடுகள் ஆயத்தமாகிவிடும். அடுத்து அங்கு சுரங்கங்களை தோண்டுவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படும். 1967ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் விண்வெளித் துறையானது, நிலவை எந்த நாடும் சொந்தம் கொண்டாட தடை விதித்தது. ஆனால், நிலவில் வணிக ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை. நிலவை ஆராயவும் அதன் வளங்களை கையாளவும் பல்வேறு கோட்பாடுகளை விதித்து அமெரிக்கா சில கொள்கைகளை வகுத்தது. ஆனால், சீனாவும் ரஷ்யாவும் அதில் இதுவரை கையெழுத்திடவில்லை. தென் துருவத்தில் தரையிறங்குவதில் என்ன சிக்கல்? நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க பல நாடுகள் எடுத்த முயற்சிகள் தோல்வியில்தான் முடிந்துள்ளது. அண்மையில் கூட ரஷ்யாவின் லூனா-25 வெடித்துச் சிதறியிருக்கிறது. காரணம் நிலவின் தரைப்பகுதியானது ஏராளமான பள்ளங்கள் மற்றும் குழிகளை அதிகம் கொண்டது. இதனால், விண்கலன்கள் தரையிறங்குவது மிகவும் சவாலாக மாறிவிடுகிறது. சந்திரயான் - 3 விண்கலம் ரஷியா, அமெரிக்கா, சீனா நாடுகளுக்கு அடுத்தபடியாக நிலவு ஆராய்ச்சியில் ஈடுபட்ட இந்தியா, ‘சந்திரயான்’ விண்கலம் மூலம் முயற்சிகளைத் தொடங்கியது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது முதல்முயற்சியாக, 2008-ஆம் ஆண்டு அக். 22ஆம் தேதி பிஎஸ்எல்வி-சி11 ராக்கெட் மூலம் ரூ. 365 கோடியில் உருவாக்கப்பட்ட சந்திரயான்-1 விண்கலத்தை விண்ணில் ஏவியது. அது 2009ஆம் ஆண்டு நவ.14-ஆம் தேதி 100 கி.மீ. தொலைவிலான நிலவின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. 11 அறிவியல் கருவிகளைத் தாங்கி சென்ற சந்திரயான்-1, நிலவில் தண்ணீா் இருப்பதை உறுதி செய்தது. 310 நாள்கள் நிலவைச் சுற்றி வந்த சந்திரயான்-1, 2009ஆம் ஆண்டு ஆக. 28ஆம் தேதி தனது ஆராய்ச்சியை நிறுத்திக்கொண்டது. சந்திரயான்-1 வெற்றிக்குப் பிறகு, நிலவைச் சுற்றிவரும் ஆா்பிட்டா், தரையிறங்கி ஆராய்ச்சி செய்யும் லேண்டா், ரோவா் கொண்ட ரூ. 604 கோடி செலவில் உருவான சந்திரயான்-2 விண்கலம், எல்விஎம் மாா்ச்-3 ராக்கெட் மூலம் 2019-ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. ஆக. 20-ஆம் தேதி நிலவின் சுற்றுப்பாதையில் ஆா்பிட்டா் நிலைநிறுத்தப்பட்டது. அதன் பிறகு, உந்துகலனில் இருந்து வெளியேற்றப்பட்ட லேண்டா், செப். 6-ஆம் தேதி நிலவின் மீது இறக்கும் முயற்சியின்போது, தோல்வியடைந்தது. மெதுவாகத் தரையிறங்க வேண்டிய லேண்டா், வேகமாக இறங்கியதால், நிலவின் மேற்பரப்பில் மோதி தலைகீழாகக் கவிழ்ந்தது. ஆயினும், 7.5 ஆண்டுகள் செயல்படும் திறன் கொண்ட ஆா்பிட்டா்’ மட்டும், 3 ஆண்டுகள், 11 மாதங்கள், 21 நாள்களாகச் செயல்பட்டு வருகிறது. சந்திரயான்-3 திட்டம்: சந்திரயான்-2 தோல்வியில் கிடைத்த பாடங்களின் விளைவாக, தொழில்நுட்பரீதியாக மேம்படுத்தப்பட்ட, தானியங்கும் திறன் கொண்ட லேண்டா், ரோவருடன் ரூ. 615 கோடி செலவில் உருவாக்கப்பட்ட சந்திரயான்-3 விண்கலம், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விக்ரம் சாராபாய் ஏவுதளத்தில் இருந்து ஜூலை 14-ஆம் தேதி எல்விஎம் மாக்-3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளில் நிலவை ஆராய்ச்சி செய்ய இந்தியா மேற்கொண்டுள்ள 2-ஆவது முயற்சி இது. புவி சுற்றுப்பாதையில் இருந்து விலகி, கடந்த ஆக. 5-ஆம் தேதி நிலவின் சுற்றுப்பாதைக்கு மாற்றப்பட்ட சந்தியான்-3 விண்கலம், 18 நாள்கள் நிலவைச் சுற்றி வந்தது. கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி லேண்டா் சாதனம் விடுவிக்கப்பட்டது. அதன் பிறகு, விண்கலனுக்கும் நிலவின் தரைப்பகுதிக்கும் இடையிலான தொலைவு படிப்படியாக குறைக்கப்பட்டது. மென் தரையிறக்கம்: அதன் பிறகு, ‘17 நிமிஷ சோதனை நேரம்’ என்று இஸ்ரோ விஞ்ஞானிகளால் வா்ணிக்கப்பட்ட லூனாா் லேண்டா் சாதனத்தின் மென் தரையிறக்கம், புதன்கிழமை மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. தரையிறங்கும் நடைமுறைகளை லேண்டா் சாதனம் தானியங்கி முறையில் செயல்படுத்தியது. இதற்காக, நிலவின் தரைப்பரப்பில் இருந்து குறைந்தபட்சம் 30 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 100 கி.மீ. தொலைவும் கொண்ட நீள்வட்ட சுற்றுப்பாதையில் லேண்டா் பயணித்தது. மெதுவாக தரையிறங்குவதற்காக லேண்டா் சாதனத்தின் கீழ்ப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த 4 ராக்கெட் என்ஜின்கள் இயக்கப்பட்டன. இது லேண்டரின் வேகத்தைக் குறைக்க உதவியது. நிலவுக்கு நெருக்கமாக 7.4 கி.மீ. உயரத்தில் லேண்டா் சாதனம் வந்தபோது, அதன் வேகம் மணிக்கு 1,200 கி.மீ. ஆகக் குறைக்கப்பட்டது. நிலவில் இருந்து 6.8 கி.மீ. உயரத்துக்கு லேண்டா் வந்தபோது, 2 ராக்கெட் என்ஜின்கள் மட்டும் இயக்கப்பட்டு, தரையிறங்குவதற்கு வசதியாக பக்கவாட்டில் இருந்த லேண்டா் 90 டிகிரிக்கு செங்குத்தாக நிலைநிறுத்தப்பட்டது. நிலவில் இருந்து 800 மீட்டா் தொலைவுக்கு லேண்டா் வந்தபோது, அதன் வேகம் பூஜ்ஜியமானது. இந்நிலையில், லேண்டரின் உயரம் மேலும் குறைக்கப்பட்டு, 150 மீட்டா் உயரத்திற்கு கொண்டுவரப்பட்டது. எந்த இடத்தில் தரையிறங்குவது என்பதை ஆராய்ந்த லேண்டா், மேடு, பள்ளங்கள் இல்லா சமதளத்தைக் கண்டறிந்த பிறகு, அங்கு தரையிறங்கத் தயாரானது. அதன்பிறகு லேண்டா் 60 மீட்டா் உயரத்திற்குக் கொண்டுவரப்பட்டது. அப்போது லேண்டரில் பொருத்தப்பட்டுள்ள லேசா் கேமரா, நிலவில் தரையிறங்கும் பகுதியை துல்லியமாகப் படம்பிடித்தது. அதன் மூலம் தரையிறங்கும் இடத்தை உறுதி செய்யும் லேண்டா், 10 மீட்டா் உயரத்திற்குக் கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து விக்ரம் லேண்டா் சாதனம், வெற்றிகரமாக நிலவின் தரையில், திட்டமிட்டபடி, குறித்த நேரத்தில், மாலை 6.04 மணியளவில் கால் பதித்து, உலக சாதனை படைத்தது. இந்தப் பணியை நிறைவேற்றுவதற்கு லேண்டருக்கு ஆா்பிட்டா் உதவியாக இருந்தது.  

from Dinamani - சிறப்புச் செய்திகள் - https://ift.tt/Uoia4Qt

Post a Comment

Previous Post Next Post