https://ifttt.com/images/no_image_card.png1-3-ஆம் வகுப்புகளுக்கு அறிதிறன்பேசி செயலியில் தேர்வு: மறுபரிசீலனை செய்ய பெற்றோர்கள் வலியுறுத்தல்

அறிதிறன்பேசி செயலி மூலம் 1 முதல் 3-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் முதல் பருவத் தேர்வு மூலம் மாணவர்களின்  வாசிப்பு, எழுத்துத் திறன் பாதிக்கப்படுவதால், இதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்ற  எதிர்பார்ப்பு பெற்றோரிகளிடையே எழுந்திருக்கிறது.

எண்மத் தொழில்நுட்பம் கல்வி கற்றலுக்கு  உதவுகிறது என்பதற்கான வலுவான ஆதாரங்கள் இல்லை என பல்வேறு ஆய்வுகள் மூலம் ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ உறுதி செய்திருக்கிறது. 

மேலும், பள்ளிகளில் அறிதிறன்பேசி (ஸ்மார்ட் போன்) பயன்படுத்தத் தடை விதிக்கவும் பரிந்துரைத்தது. ஆனால், தமிழகத்தில் மொத்தமுள்ள 36ஆயிரம் பள்ளிகளில் 1 முதல் 3-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கைப்பேசி (அறிதிறன்பேசி) செயலி மூலமாக முதல் பருவத் தேர்வுகள் தொடங்கி இருப்பது பெற்றோர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. 

தமிழகம் முழுவதும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான முதல் பருவத் தேர்வு புதன்கிழமை தொடங்கியது.  அரும்பு, மொட்டு, மலர் என 1 முதல் 3  வகுப்பு வரையிலான மாணவர்கள் குறிப்பிடப்படுகின்றனர்.  

தொகுத்தறி மதிப்பீட்டுக்கு 60 மதிப்பெண், வளரறி மதிப்பீட்டில் செயல்முறைக்கு 20 மதிப்பெண், எழுத்துத் தேர்வுக்கு 20 மதிப்பெண் என மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு இந்த தேர்வு நடத்தப்படுகிறது. ஆனாலும், கைப்பேசி செயலி மூலமான இந்தத் தேர்வு முறையால் மாணவர்களின் தனித் திறன்கள் பாதிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

6 நாள்களில் 3 தேர்வுகள்: தமிழ், ஆங்கிலம், கணிதம் என 3 தேர்வுகள் நடத்துவதற்கு செப்.20 முதல் 27-ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது. அதாவது, 6 வேலை நாள்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளில் கைப்பேசி மூலம் நடத்தப்படும் இந்தத் தேர்வு எளிதாக இருந்தாலும்கூட, ஊரகப் பகுதிகளைப் பொருத்தவரை இணையத் தொடர்பு கிடைக்காமல் அவதிக்குள்ளாகின்றனர். 

மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ள பள்ளிகளில், ஒரு பாடத்துக்கான தேர்வு 2 அல்லது 3 நாள்கள் வரை நடைபெறுகிறது. முதல் வகுப்பு மாணவர்களுக்கு (அரும்பு) 5 வினாக்கள், 2-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு (அரும்பு, மொட்டு) 10 வினாக்கள், 3-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு (அரும்பு, மொட்டு, மலர்) 15 வினாக்கள் கேட்கப்படுகின்றன. 

இந்த வகையில் ஒவ்வொரு மாணவரும்  விடையளிக்க, சராசரியாக 10 முதல் 15 நிமிடங்கள் வரை அவகாசம் அளிக்கப்படுகிறது.  இந்தச் செயலி ஒரே நேரத்தில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் பயன்படுத்தப்படுவதால், இணையத் தொடர்பு சரியாக கிடைக்கும் இடங்களில்கூட உள்ளீடு செய்ய முடிவதில்லை என்ற புகார் உள்ளது. புதன்கிழமை மாலை வரை சில பள்ளிகளில் தேர்வுக்கான செயலியில் உள்ளீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு வகுப்பில் நாளொன்றுக்கு சராசரியாக 10 மாணவர்களுக்கு மட்டுமே செயலி மூலம் தேர்வு நடத்த முடியும் என்றும் ஆசிரியர்கள் கூறுகின்றனர். 

மாணவர்களுக்கு வாசிக்க நேரமில்லை:  தொகுத்தறி மதிப்பீட்டுத் தேர்வுக்கு 60 மதிப்பெண்கள் அளிக்கப்பட்டிருந்தாலும், அறிதிறன் பேசிகளில் வினாக்களை மாணவர்கள் வாசிப்பதற்கான வாய்ப்பு மறுக்கப்படுகிறது. ஒவ்வொரு மாணவருக்கும் தனித் தனியாக இந்தத் தேர்வு நடத்தப்படுவதால், பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்களே வினாக்களை வாசித்து, மாணவர்களிடம் விடையை மட்டும் கேட்டறிந்து பதிவேற்றம் செய்கின்றனர். இதன் மூலம், மாணவர்களின் வாசிப்புத் திறன் மட்டுமன்றி, எழுத்துத் திறனும் பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் கூறுகின்றனர்.

8-ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்ற நடைமுறை தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வரும் நிலையில், ஏற்கெனவே மாணவர்களின் கற்றல் திறனில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 

இதுபோன்ற நிலையில், அறிதிறன்பேசி செயலி மூலம் ஆசிரியர்களே வினாக்களை வாசித்து, விடைகளைப் பதிவு செய்வதால் மாணவர்களின் கல்வித் திறன் மேலும் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. 

மேலும், கூடுதல் பணிச் சுமை ஏற்பட்டிருப்பதாக ஆசிரியர்களும் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

இந்த விவகாரம் குறித்து ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: வினாக்களைப் புரிந்து கொள்ள முடியாத பருவத்திலுள்ள குழந்தைகளிடம், அறிதிறன்பேசி வழியாக பதில்களை விரைவாகப் பெற முடியாது. விடைத் தாள்களில் பதில் அளிக்கும் நடைமுறையில், மாணவர்களுக்கு சிந்திப்பதற்கான வாய்ப்பும், எழுத்துப் பயிற்சியும் கிடைக்கும். அறிதிறன்பேசி வாயிலான தேர்வுகளை குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு வரை தவிர்க்க வேண்டும். அறிதிறன்பேசி தேர்வு நடைமுறையை மறுபரிசீலனை செய்ய  தமிழக அரசு முன் வர வேண்டும் என்றனர்.



from Dinamani - சிறப்புச் செய்திகள் - https://ift.tt/3zB59Kf

Post a Comment

Previous Post Next Post