அதிமுக – பாரதிய ஜனதா கட்சி இடையிலான கூட்டணி முறிவால் உண்மையிலேயே யாருக்கு லாபம்? யார் பாவம்? என்றால் எல்லாருமே மிகச் சுலபமாகப் பதிலளித்துவிடுவார்கள்...
தொங்கு சதையென பா.ஜ.க.வைத் தூக்கிச் சுமக்கும் கதை முடிவுக்கு வருவதால் அதிமுகவுக்கு லாபம். சவாரிக் குதிரை தப்பிவிட்டதால் தன் சொந்தக் காலிலேயே பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் பாரதிய ஜனதாவுக்கு நஷ்டம்.
ஆனால், தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டினாற் போல...
இந்தக் கூட்டணி முறிவால் இந்த இரண்டுக்கும் அப்பாற்பட்ட மூன்றாவது விளைவு – அதுதான் முக்கியமான விளைவும்கூட – இருக்கிறது - ஆளும் திமுகவின் ஆதரவு பலத்தில் ஏற்படக் கூடிய ஆட்டம்.
ஏனெனில், பாரதிய ஜனதா கட்சியுடன் அதிமுக கூட்டணி வைத்துக் கொண்டிருப்பதை அதிமுகவில் பெரும்பாலான தொண்டர்கள் விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது.
தலைக்கு மேலே தொங்கும் கத்திகளாக ஊழல் குற்றச்சாட்டுகளும் வழக்குகளும் இருந்ததாலும் - இருப்பதாலும் அதிமுகவின் தலைவர்கள்தான் பாரதிய ஜனதாவுடனான கூட்டணியில் ஆர்வம் கொண்டிருந்தனர்.
படிக்க | கூட்டணி இல்லை.. கூட்டணி இல்லை.. கூட்டணி இல்லை: எடப்பாடி பழனிசாமி
தவிர, யாரும் கேள்வி கேட்க முடியாதவராக, நிரந்தரமான தலைவராக இருந்த முதல்வர் ஜெயலலிதா, தன்னுடைய கடைசி காலத்தில் மிகத் தெளிவாக பாரதிய ஜனதா எதிர்ப்பு நிலையையே எடுத்திருந்தார் என்பதும் தொண்டர்கள் அறிந்ததே.
ஜெயலலிதாவின் திடீர் மறைவைத் தொடர்ந்துதான், தலைமை இல்லாமல் தத்தளித்துக் கொண்டிருந்த, பலவீனமான அதிமுக தலைவர்களையும் கட்சியையும் மாநில அரசையும் தங்கள் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த நிலையில் எல்லாவற்றையும் சாதித்துக் கொண்டது பாரதிய ஜனதா கட்சி.
அந்தக் கால காங்கிரஸ் கட்சி போல அனைத்து முடிவுகளும் தில்லியில் பாரதிய ஜனதா கட்சியால் எடுக்கப்பட, மாநிலத்தில் நிறைவேற்றும் வேலையை மட்டும் கிளைக் கழகத்தைப் போல அதிமுக செய்துகொண்டிருப்பதாகத் தொண்டர்கள் குமுறினர்.
தன் உணர்வு உள்ளவரை ஜெயலலிதா எதிர்த்துக் கொண்டிருந்த, உணவுப் பாதுகாப்பு சட்டம் உள்பட பல்வேறு விஷயங்களில் பாரதிய ஜனதா சொன்னதையெல்லாம் ஒப்புக்கொண்டு செய்தது அதிமுக. இவற்றில் பெரும்பாலானவற்றில் அதிமுக தொண்டர்களுக்கோ, பெரும்பான்மையான அந்தக் கட்சியின் ஆதரவாளர்களுக்கோ உடன்பாடில்லை என்றபோதிலும்.
பாரதிய ஜனதா எதிர்ப்பு நிலை என்ற காரணத்தால் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் திமுக கூட்டணியில் அணி சேர்ந்தன. தொகுதிப் பகிர்வில்கூட இணக்கமாக - இருந்தே தீர வேண்டிய கட்டாயத்தில் இணைந்திருந்தன.
படிக்க | அதிமுக - பாஜக கூட்டணி முறிந்தது ஏன்?
பா.ஜ.க. எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய கட்டாயத்தில், கட்சி சாராத ஆனால் அதிமுகவை ஆதரித்து வந்தவர்களும்கூட திமுகவுக்கும் திமுக கூட்டணிக்கும் ஆதரவாக மாறினர்.
ஒருபோதும் திமுகவை ஆதரித்திராத, குறிப்பாக, 2009 இலங்கைத் தமிழர் படுகொலைக்குப் பின் தீவிர திமுக எதிர்ப்பாளர்களாக மாறிவிட்டிருந்த தமிழ் உணர்வாளர்களும்கூட, பாஜக எதிர்ப்பு என்ற நிலையில் ஒட்டுமொத்தமாக திமுகவை – காங்கிரஸையும் சேர்த்து ஆதரித்தனர்.
இவை எல்லாவற்றுடனும் அதிமுகவின் செயல்பாடுகளில் மக்கள் கொண்டிருந்த அதிருப்திகளும் சேர்ந்து அதிமுக - பாரதிய ஜனதா கட்சிக் கூட்டணியைத் தோல்வியுறச் செய்தன. மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது.
தவிர்க்க முடியாத காரணங்களால் - சூழ்நிலையால் வேண்டாத வீட்டுக்காரி போல பாரதிய ஜனதா கட்சியுடனான உறவை அதிமுக தொடர்ந்துகொண்டிருந்தது. அதிமுக தலைவர் ஜெயலலிதா பற்றி எரிச்சலூட்டும் கருத்துகளை பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவரான அண்ணாமலை தெரிவித்தபோதிலும்கூட, சிலரைத் தவிர பெரும்பாலான அதிமுக தலைவர்கள் அடக்கிதான் வாசித்தனர்.
முழுமையாக பாரதிய ஜனதா கட்சியின் கைப்பாவையாக மாறிக் கொஞ்சம் கொஞ்சமாக அதிமுக அழிந்துகொண்டிருக்கிறது என்ற கருத்து மக்கள் மத்தியில் பரவலாகிவந்த நிலையில், வரும் தேர்தலில் இந்தப் போக்கு மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்று கருதிய நிலையில், பாஜகவுடனான உறவை முறிக்கத் தக்க தருணத்தை அதிமுக தலைவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
படிக்க | இபிஎஸ் தலைமையில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி: கே.பி. முனுசாமி
இந்த நிலையில் திமுகவின் நிறுவனர் – தலைவரும் எம்.ஜி.ஆரால் அண்ணா திமுகவின் பெயரிலும் கொடியிலும் அடையாளமாகப் பொறிக்கப்பட்டவருமான அண்ணாவைப் பற்றி அண்மையில் பாஜகவின் தமிழகத் தலைவர் அண்ணாமலை தெரிவித்த கருத்து திமுக, அதிமுகவினரிடையே பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.
இவற்றுக்கெல்லாம் நடுவே உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்துப் பேசினார் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி.
இந்த விஷயங்களில் தொடர்ச்சியாக ஒருபுறம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் எதிர்ப்புகளைத் தொண்டர் குரலெனத் தெரிவித்துக் கொண்டேயிருந்தார்.
வெறும் கண்டனத்துடன் முடியலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த நிலையில், சென்னையில் திங்கள்கிழமை நடந்த மாவட்டச் செயலர்கள் கூட்டத்துக்குப் பின், சற்றும் எதிர்பாராத வகையில் பாரதிய ஜனதா கட்சியுடன் உறவை முறித்துக்கொள்வதாக அறிவித்துவிட்டிருக்கிறது அதிமுக தலைமை.
இப்போது பாரதிய ஜனதாவுக்கு எதிராக அதிமுக.
திமுக உறுதியாகவும் கவனமாகவும் இல்லாவிட்டால், இதுநாள் வரை திமுகவையும் திமுக அணியையுமே ஆதரித்துக் கொண்டிருந்த, ஆதரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த பாரதிய ஜனதா எதிர்ப்பும் எதிர்ப்பாளர்களும் எளிதில் பிரியக் கூடிய ஆபத்து நேரிட்டிருக்கிறது.
திமுகவுடன் தோளோடு தோள் நின்ற அரசியல் கட்சிகளும்கூட அணி மாறக் கூடிய சூழல் ஏற்படலாம்.
இப்போது திமுகவுடன் அணியில் காங்கிரஸ், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போன்ற கட்சிகள் இருக்கின்றன.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சியுடன் பா.ம.க., தமாகா, புதிய தமிழகம், ஐ.ஜே.கே. போன்ற கட்சிகள் இருக்கின்றன. அணியில் அதிமுக இல்லாவிட்டால் இவற்றில் எவையெல்லாம் தொடர்ந்து இருக்கும் என்று உறுதியாகக் கூற இயலாது.
அதிமுகவுடன் நாம் தமிழர் கட்சி சேருவதற்கான அனைத்து வாய்ப்புகளும் இருக்கின்றன. திமுகவுடன் இணக்கமாகத் தொகுதிகளைப் பகிர்ந்துகொள்ள முடியாத கட்சிகளும்கூட அதிமுக அணியுடன் சேரலாம்.
எப்படியென்றாலும் பாரதிய ஜனதா எதிர்ப்பு வாக்குகள் பிளவுபடும்.
ஆக, அதிமுக – பா.ஜ.க.வின் உறவு முறிவு, திமுக அணியில் பெரும் எதிர்விளைவை ஏற்படுத்தலாம் என்று கருதப்படுகிறது.
from Dinamani - சிறப்புச் செய்திகள் - https://ift.tt/3zB59Kf