கரோனா பொதுமுடக்கக் காலத்துக்குப் பின், ஆண்கள் அதிக அளவில் தற்கொலைக்கு முயலுவது சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைத் தரவுகளிலிருந்து தெரிய வந்துள்ளது. கரோனா பொது முடக்கக் காலத்துக்குப் பின், மதுப் பழக்கம், வேலையின்மை, கடன்சுமை போன்றவற்றால், ஆண்கள் அதிக அளவில் தற்கொலைக்கு முயலுவதாக கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைத் தரவுகளிலிருந்து தெரிய வந்துள்ளது. சென்னையில் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை (கே.எம்.சி.) சார்பில் மருத்துவமனையில் தீக்காயம் பிரிவில் சிகிச்சை பெற்ற நோயாளிகளின் தரவுகளிருந்து இதுபற்றித் தெரிய வந்துள்ளது. கரோனா பொது முடக்கக் காலத்துக்குப் பிறகு, ஆண்கள் அதிக அளவில் தற்கொலைக்கு முயலுகிறார்கள் என்று தெரிய வந்துள்ளது. இதையும் படிக்க.. மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லையா? செய்ய வேண்டியது என்ன? குடிக்கு அடிமையாதல், வேலையின்மை மற்றும் கடன் பிரச்னை போன்றவற்றால், தீவைத்துத் தற்கொலைக்கு முயன்று, தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்கும் பிரிவில், அனுமதிக்கப்படும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. 2019 ஆம் ஆண்டு தீக்காயமுற்ற ஆண்களின் எண்ணிக்கை 50 சதவீதத்திலிருந்து 2022 ஆம் ஆண்டு 57 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதேவேளையில், ஒட்டுமொத்தமாக, தீக்காயம் பிரிவில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது. தமிழகத்தில் மிக முக்கிய மருத்துவமனைகளில் மூன்றாவது இடத்தில் இந்த மருத்துவமனையின் தீக்காய சிகிச்சைப் பிரிவு செயல்படுவது குறிப்பிடத் தக்கது. புள்ளிவிவரப்படி, 2019 ஆம் ஆண்டில், தீக்காயமுற்ற மொத்தம் 1,292 பேரில் 652 பேர் ஆண்கள். அடுத்த ஆண்டு பொதுமுடக்கக் காலத்தில் 832 பேர் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 403 பேர் ஆண்கள். 2021 ஆம் ஆண்டில் மொத்த அனுமதி 864 பேர். அவர்களில் 485 பேர் ஆண்கள். கரோனா பொது முடக்கக் காலத்துக்குப் பிறகு 2022-ல் அனுமதிக்கப்பட்ட 888 பேரில் 510 பேர் ஆண்கள். எனவே, தங்களைத் தாங்களே துன்புறுத்திக்கொள்வோரில் ஆண்கள் அதிகரித்திருப்பது தெளிவாகத் தெரிவதாகக் கூறப்படுகிறது. ஒருகாலத்தில், இந்த மருத்துவமனையின் தீக்காயச் சிகிச்சைப் பிரிவில் ஆண்களே இருக்க மாட்டார்கள். பெண்களின் பிரிவில் கூட்டம் நிரம்பி வழியும். மண்ணெண்ணெய் ஸ்டவ்கள் வெடித்ததாக ஏராளமான பெண்கள் படுகாயத்துடன் அனுமதிக்கப்படுவார்கள். 1990-களில் வரதட்சிணைக் கொடுமை காரணமாக, கணவர் அல்லது மாமியார்களால், ஏராளமான பெண்கள் ஸ்டவ் வெடித்து படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு வருவது அதிகமாக இருந்தது. அடுத்த 10 ஆண்டுகளில் இந்த நிலை மாறி, வரதட்சிணைக் கொடுமை தாங்காமல் பெண்களே மண்ணெண்ணெய் ஊற்றித் தங்களுக்குத் தாங்களே தீ வைத்துக்கொள்ளும் அவலம் அதிகரித்திருந்தது. அப்போதெல்லாம், ஆண்கள் பிரிவில்கூட சில பெண்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கும் நிலை இருந்தது. ஆனால், அந்த நிலை தற்போது தலைகீழாக மாறியிருக்கிறது. பெண்களைவிட, ஆண்களே தற்போது அதிகமாகத் தீவைத்துக் கொள்கிறார்கள். ஆனால், இவ்வாறு தற்கொலைக்கு முயலும் பெரும்பாலான ஆண்களின் கதைகள் ஒன்றாகவே இருக்கின்றன. அது குடிபோதை, கடன், வேலையின்மைதான். தமிழகம் முழுவதும் இருக்கும் 80 மருத்துவமனைகளில் உள்ள விபத்து மற்றும் அவசர கால சிகிச்சை மையங்களில் பதிவான தரவுகளின் அடிப்படையில், ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை பதிவான 2,300 தீக்காயமடைந்த நோயாளிகளில் 58 சதவீதம் பேர் ஆண்கள். இவர்களில் கிட்டத்தட்ட 18 சதவீதம் பேர் தற்கொலைக்கு முயன்றவர்கள். 48 சதவீதம் பேர் விபத்தால் பாதிக்கப்பட்டவர்கள். 20 வயது முதல் 40 வயதுக்குள்பட்ட ஆண்களில் பெரும்பாலானோர் மது அல்லது போதைக்கு அடிமையானதால், தற்கொலைக்கு முயன்றதாகத் தெரிவித்துள்ளனர். தற்கொலைக்குத் தீர்வு சொல்வது என்பது இயலாத காரியம் என்றும், தற்கொலை முடிவுக்கு பல காரணங்கள் இருப்பதாகவும் மனநல மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஒரு தற்கொலைக்குப் பின்னால், உளவியல், மரபியல், மனோவியல், குடும்ப, சமூகக் காரணிகளும் பங்காற்றுகின்றன. பெரும்பாலான தற்கொலைகளுக்கு குடும்பப் பிரச்னைதான் காரணமாக இருக்கிறதாம். ஒருமுறை தற்கொலைக்கு முயன்றவர்கள், அடுத்தும் தற்கொலை செய்துகொள்வதற்கான ஆபத்து அதிக இருப்பதாகவும் அத்தகையவர்களுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து மனநல ஆலோசனை வழங்கி, அவர்களைத் தனித்துவிடாமல் பாதுகாக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். [தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
from Dinamani - சிறப்புச் செய்திகள் - https://ift.tt/m0wUhHK
from Dinamani - சிறப்புச் செய்திகள் - https://ift.tt/m0wUhHK