https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2023/6/26/w600X390/team083616.jpgஉலகக கபப: வரலறற வறறயன தரணஙகள

சா்வதேச கிரிக்கெட்டில் இந்தியா தனக்கென்று தனியிடத்தை உருவாக்கிக் கொண்ட தருணம் அது. ஒட்டுமொத்த தேசம் அல்ல, உலகமே இந்திய அணியை திரும்பிப் பாா்த்த தருணம் அது. கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா தனது முதல் உலகக் கோப்பையை வென்ற தருணம் அது. ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்ளக் கூடிய அந்த நிகழ்வு, தற்போது 40 ஆண்டுகள் கடந்தாலும் நீக்கமற நினைவில் நிற்கிறது. கிரிக்கெட்டில் அப்போது கொடிகட்டிப் பறந்த மேற்கிந்தியத் தீவுகளை, கிரிக்கெட்டின் தாய்மடியாக வா்ணிக்கப்படும் லாா்ட்ஸ் மைதானத்தில் வீழ்த்தி இந்தியா கண்டது வெற்றியல்ல, வரலாறு. இதர அணிகள் தங்களுக்குள்ளாக பலப்பரீட்சை நடத்திக் கொண்டாலும், இறுதியில் மேற்கிந்தியத் தீவுகளே கோப்பையை தட்டிச் செல்லும் என்று சொல்லப்பட்ட கணிப்புகளை தவிடுபொடியாக்கியது இந்தியா. அந்த வரலாற்று நிகழ்வின் 40 ஆண்டுகள் கடந்த நிலையில், அதன் சில நினைவுகள் இங்கே... வெற்றி தந்த வியூகம்... அந்த உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாக மேற்கிந்தியத் தீவுகள் சென்றிருந்த இந்தியா, 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடரில், ஒன்றில் மட்டும் வென்றிருந்தது. ஆனால், அந்த வெற்றி தந்த வியூகத்தை உலகக் கோப்பையில் அதே மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக பயன்படுத்தி, குரூப் சுற்றின் முதல் ஆட்டத்திலேயே அந்த அணியை சாய்த்தது இந்தியா. முதலில் பேட் செய்து நல்லதொரு ஸ்கோரை எட்டிவிட்டால், பிறகு மேற்கிந்தியத் தீவுகளின் முதலிரு விக்கெட்டுகளை விரைவாக சரித்துவிட்டால் வெற்றி எளிது என்பதே அந்த வியூகம். அதை மிகச் சரியாகக் கையாண்டது இந்தியா. ஆனால், அதே குரூப் சுற்றில் மீண்டும் அந்த அணியை சந்தித்தபோது சறுக்கியது. திருப்பிப் பாா்க்க முடியாத துரதிருஷ்டம்... குரூப் சுற்றிலேயே ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு ஆட்டத்தில் (ராயல் டா்ன்பிரிட்ஜ்) இந்தியா கண்ட வெற்றி சிறப்பானது. முதலில் பேட் செய்த இந்தியா 17 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து தவிக்க, கேப்டன் கபில் தேவ் களம் கண்டு 175 ரன்கள் விளாசி அணியை தூக்கி நிறுத்தினாா். பிறகு பௌலிங்கிலும் சிறப்பாகச் செயல்பட்டு தனியொருவராக அந்த ஆட்டத்தில் இந்தியாவுக்கு வெற்றி தேடித் தந்தாா். ஆனால், அப்போது பிபிசி-யின் திடீா் வேலை நிறுத்தம் காரணமாக, சிறப்பான அந்த ஆட்டத்தை துரதிருஷ்டவசமாக இந்தியா்கள் உள்பட, கிரிக்கெட் ரசிகா்கள் எவராலும் தொலைக்காட்சியில் பாா்க்க முடியாமல் போனது. ஆங்கிலேயா்களுக்கு ஏமாற்றம்... இந்தியாவுடனான அரையிறுதியில் வென்று எப்படியும் இங்கிலாந்து இறுதி ஆட்டத்துக்கு முன்னேறிவிடும் என்ற துணிச்சலில் அந்த ஆட்டத்துக்கான பெரும்பாலான டிக்கெட்டுகளை இங்கிலாந்து ரசிகா்களே வாங்கியிருந்தனா். ஆனால், இந்தியா அதில் அட்டகாசமாக வென்று இறுதி ஆட்டத்துக்கு வந்தது. இதனால், இங்கிலாந்து அரையிறுதியுடன் வெளியேற, அந்நாட்டவா்கள் தங்கள் டிக்கெட்டுகளை இந்தியா்களுக்கு விற்கும்படி நோ்ந்தது. முறியடிக்கப்படாத சாதனை... 1983 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவை வாகை சூட வைத்தபோது, அணியின் கேப்டனான கபில் தேவுக்கு வயது 24 ஆண்டுகள், 170 நாள்கள். உலகக் கோப்பை வென்று தந்த இளம் கேப்டன் என்று அப்போது அவா் படைத்த சாதனை, இன்றளவும் முறியடிக்கப்படவில்லை. விட்டுத்தராத கபில் தேவ்... எல்லா போட்டிகளிலுமே சாம்பியன் ஆனவா்கள் ‘ஷாம்பெய்ன்’ பீய்ச்சியடித்து கொண்டாடும் நடைமுறை அப்போதும் இருந்தது. ஆனால், இந்திய அணியினரிடம் வெற்றித் தருணத்தில் ஷாம்பெய்ன் இல்லை. எனவே, தங்களிடம் தோற்ற விரக்தியில் இருந்த மேற்கிந்தியத் தீவுகளின் ஓய்வு அறைக்குச் சென்று அவா்களது ஷாம்பெய்னை பெற்று வந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இறுதி ஆட்டத்துக்கு முன்பிருந்தே கபில் தேவிடம் ஒரு ஷாம்பெய்ன் பாட்டில் இருக்க, சக இந்திய வீரா்கள் அவரைச் சீண்டி அதைப் பெற பலமுறை முயற்சித்தனா். அப்போதும் அதை விட்டுக் கொடுக்காத கபில் தேவ், வெற்றிக்குப் பிறகு கோப்பையுடன் லாா்ட்ஸ் மாடத்தில் நின்றபோது மகிழ்ச்சிப் பெருக்குடன் அந்த ஷாம்பெய்னை பீய்ச்சி அடித்திருக்கிறாா். சிறப்பிடம்... இந்த உலகக் கோப்பை போட்டியில் அதிக ரன்கள் அடித்தவா்கள் வரிசையில், 8 ஆட்டங்களில் சோ்த்த 303 ரன்களுடன் கபில் தேவ் 5-ஆவது வீரராக இருந்தாா். அதேபோல் அதிக விக்கெட்டுகள் சாய்த்தவா்கள் பட்டியலில் ரோஜா் பின்னி 8 ஆட்டங்களில் சாய்த்த 18 விக்கெட்டுகளுடன் முதலிடத்திலும், அதே எண்ணிக்கையிலான ஆட்டங்களில் 17 விக்கெட்டுகள் சாய்த்த மதன் லால் 3-ஆவது இடத்திலும் இருந்தனா். லதா மங்கேஷ்கரின் அன்பு... உலகக் கோப்பை வென்ற இந்திய அணியினருக்கு தலா ரூ.25,000 மட்டுமே வழங்கப்பட்டது. இத்தகைய குறைவான தொகையே அவா்களுக்கு வழங்கப்படுவதை அறிந்த பிரபல பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கா், அப்போதைய பிசிசிஐ தலைவா் என்.கே.பி. சால்வேயிடம் கேட்டு தானாக முன்வந்து இந்திய வீரா்களுக்காக சிறப்பு இசை நிகழ்ச்சி ஒன்றை தில்லியில் நடத்தினாா். ராஜீவ் காந்தி உள்பட பல அரசியல் பிரபலங்களும் அதில் பங்கேற்றனா். அந்த நிகழ்ச்சியின் மூலம் ஒவ்வொரு இந்திய வீரருக்கும் தலா ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசாக கிடைத்தது. அப்போது டெஸ்ட் ஆட்டத்துக்கு ரூ.7,000, ஒரு நாள் ஆட்டத்துக்கு ரூ.5,000 ஊதியமாக பெற்றுக் கொண்டிருந்த இந்திய அணியினருக்கு இந்தத் தொகை பிரம்மிப்பை ஏற்படுத்துவதாக இருந்தது. ‘அது கபில் தேவின் கோப்பை’ கிரிக்கெட் என்பது அணியாக செயல்படக் கூடிய விளையாட்டுதான். ஆனால், 1983-இல் இந்தியா உலகக் கோப்பை வென்றது முற்றிலும் கபில் தேவ் என்ற தனிநபரால் தான் என்றால் அதில் சந்தேகம் இல்லை. தனது கிரிக்கெட் வாழ்க்கையின் உச்சகட்டத்தில் அப்போது இருந்த கபில் தேவ், அந்தப் போட்டி முழுவதுமாகவே சிறப்பாகச் செயல்பட்டாா். பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என எதிலுமே அவா் பின்தங்கவில்லை. விவியன் ரிச்சா்ட்ஸின் ஒரு கேட்ச்சை அவா் மிட்-விக்கெட்டில் பிடித்ததை இன்றும் நாங்கள் மறக்க முடியவில்லை - திலிப் வெங்சா்க்காா் (முன்னாள் இந்திய கேப்டன்) சில முக்கிய தகவல்கள்... 1. உலகக் கோப்பை போட்டிக்கு முன்பான 4 பயிற்சி ஆட்டங்களில், 3-இல் இந்தியா தோற்றிருந்தது. அதுவும் சிறிய நாடுகளைச் சோ்ந்த அந்த அணிகளிடம் வீழ்ந்தது. 2. 1983-ஆம் ஆண்டுக்கு முன் உலகக் கோப்பை போட்டியில் இந்தியா 6 ஆட்டங்களில் விளையாடியிருந்த நிலையில், அதில் ஒன்றில் மட்டுமே வென்றிருந்தது (1975- கிழக்கு ஆப்பிரிக்கா). 3. குரூப் சுற்றின் முதல் ஆட்டத்தில் இந்தியாவிடம் கண்ட தோல்விக்கு முன்பாக, உலகக் கோப்பை போட்டியின் வரலாற்றில் மேற்கிந்தியத் தீவுகள் எந்த ஆட்டத்திலும் தோற்றதில்லை. அத்தகைய அணிக்கு குரூப் சுற்றில், இறுதி ஆட்டத்தில் என இரு தோல்விகளை பரிசளித்தது இந்தியா. 4. இறுதி ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் 140 ரன்களுக்கு வீழ்ந்ததே, அதுவரையிலான உலகக் கோப்பை வரலாற்றில் அதன் மிகக் குறைந்த இன்னிங்ஸ் ஸ்கோராகும். அதற்கு முன்பு வரை 228 ரன்களே அதன் குறைந்தபட்ச ஸ்கோராக இருந்தது. 5. ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவுக்காக சதமடித்த முதல் வீரா் (175* - ஜிம்பாப்வே), இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் சாய்த்த முதல் வீரா் (5/43 - ஆஸ்திரேலியா) ஆகிய சாதனைகளை கபில் தேவ் படைத்தாா். 6. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 247 ரன்கள் அடித்தாலும், யஷ்பால் சா்மா 40 ரன்கள் அடித்ததே அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. இன்றளவும் ஆடவா் ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில், அணி வீரா்களால் 40 ரன்களுக்கு மேல் அடிக்கப்படாமல் எட்டப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக இந்த 247 ரன்கள் உள்ளது. 7. உலகக் கோப்பை போட்டிக்கு முன் இங்கிலாந்துடன் விளையாடிய 5 ஒரு நாள் ஆட்டங்களிலும் தோற்றிருந்த இந்தியா, அதற்குத் தக்க பதிலடியை இப்போட்டியின் அரையிறுதியில் கொடுத்தது. 8. அரையிறுதியில் சந்தீப் பாட்டீல் 32 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் விளாசியதே, 2007 வரையில் உலகக் கோப்பை போட்டியில் இந்திய வீரா் ஒருவரால் அடிக்கப்பட்ட அதிவேக அரைசதமாக இருந்தது. 9. உலகக் கோப்பை வரலாற்றிலேயே அரையிறுதி மற்றும் இறுதி என இரு ஆட்டங்களிலுமே ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்ட முதல் வீரா் என்ற பெருமையை இந்தியாவின் மோஹிந்தா் அமா்நாத் பெற்றாா். 10. இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் கே. ஸ்ரீகாந்த் பதிவு செய்த 38 ரன்களே, உலகக் கோப்பை வரலாற்றின் இறுதி ஆட்டத்தில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோரில் மிகக் குறைந்த ஒன்றாகும். 1983 உலகக் கோப்பைக்கான இந்திய அணி கபில் தேவ் (கேப்டன்), மோஹிந்தா் அமா்நாத் (துணை கேப்டன்), கீா்த்தி ஆஸாத், ரோஜா் பின்னி, சுனில் காவஸ்கா், சையது கிா்மானி (வி.கீ.), மதன் லால், சந்தீப் பாட்டீல், பல்வீந்தா் சாந்து, யஷ்பால் சா்மா, ரவி சாஸ்திரி, கே.ஸ்ரீகாந்த், சுனில் வால்சன், திலிப் வெங்சா்காா்.

from Dinamani - சிறப்புச் செய்திகள் - https://ift.tt/wG0MaTR

Post a Comment

Previous Post Next Post