9 ஆண்டுகளில் தவிர்க்கவே இயலாத நிலையில் அபூர்வமாக நடந்த ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் பிரதமர் நரேந்திர மோடியிடம் கேட்கப்பட்ட ஒரே ஒரு அரசியல் கேள்வியும் அதற்கு அவர் அளித்த பதிலும் இப்போது வைரல்! பிரதமர் நரேந்திர மோடி வெள்ளை மாளிகையில் 'டெலிபிராம்ப்டர்' உதவியுடன் செய்தியாளர்களைச் சந்தித்ததும் சிறுபான்மையினர் குறித்த கேள்விக்கு பதில் அளித்ததும் சமூக ஊடகங்களில் விவாதிக்கப்பட்டு வருகின்றன. நம் நாட்டில் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் பிரதமர்கள் செய்தியாளர்களைச் சந்திப்பார்கள். எண்ணற்ற செய்தியாளர்கள் திரண்டிருக்கும் இந்தக் கூட்டங்களில் எதைப் பற்றி வேண்டுமானாலும் செய்தியாளர்கள் கேள்விகளை எழுப்ப, பிரதமர்களாக இருப்பவர்கள் பதிலளிப்பார்கள். இதுபோன்ற பிரதமரின் செய்தியாளர்கள் சந்திப்பு எப்போதும் மிக முக்கியமான ஒன்றாக இருக்கும். ஆனால், பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற பிறகு சொல்லிக்கொள்ளும்படியான இதுபோன்ற செய்தியாளர் சந்திப்புகள் எதுவும் நடைபெறவில்லை. வெள்ளை மாளிகையில் நடந்ததுதான் பிரதமர் மோடியின் முதல் செய்தியாளர் சந்திப்பா? என்ன நடந்தது? பிரதமர் நரேந்திர மோடி 3 நாள்கள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றார். அமெரிக்க வெள்ளை மாளிகையில் அவருக்கு சிறப்பான வரவேற்புடன் விருந்தும் அளிக்கப்பட்டது. வாஷிங்டனில் பல்வேறு துறை சார்ந்த நிபுணர்களை சந்தித்துப் பேசிய பிரதமர் மோடி, இந்தியர்கள் மத்தியிலும் உரையாற்றினார். இந்திய நேரப்படி வியாழக்கிழமை இரவு (ஜூன் 22) வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபா் ஜோ பைடனுடன் இருதரப்பு பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அதன் பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தினர். பைடனையடுத்து பேசிய பிரதமர் மோடி, இந்த பேச்சுவார்த்தையின் மூலமாக இந்திய- அமெரிக்க உறவில் புதிய அத்தியாயம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். இதையும் படிக்க | இந்திய-அமெரிக்க உறவில் புதிய அத்தியாயம்: பிரதமா் மோடி செய்தியாளர் சந்திப்பு அப்போது இரு தலைவர்கள் கூட்டாக செய்தியாளர் சந்திப்பு நிகழ்த்தினர். வெள்ளை மாளிகையில் செய்தியாளர் சந்திப்பு என்பது மிகவும் கட்டுப்பாடானது. இதற்காக முன்கூட்டியே செய்தியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, கேள்விகளும் முன்கூட்டியே தேர்வு செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி, இரு தலைவர்களிடமும் அமெரிக்க செய்தியாளர் ஒரு கேள்வியும் இந்திய செய்தியாளர் ஒரு கேள்வியும் கேட்பார்கள் என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி முன்னதாகவே கூறியிருந்தார். பெரும்பாலும் இதுபோன்ற இரு நாட்டுத் தலைவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் இரு நாட்டின் நட்புறவு, அன்றைய பேச்சுவார்த்தை குறித்த கேள்விகளே இடம்பெறும். ஆனால், பிரதமர் மோடியிடம் அமெரிக்கத் தரப்பிலிருந்து கேள்வியெழுப்பியவர் வால் ஸ்ட்ரீட் பத்திரிகையாளர் சப்ரினா சித்திகி (Sabrina Siddiqui). இவர் எழுப்பிய கேள்வி குறித்துதான் தற்போது சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. முன்னதாக, பிரதமர் மோடியும் பைடனும் கூட்டாக செய்தியாளர் சந்திப்பை நடத்த வேண்டும் என்ற வெள்ளை மாளிகையின் யோசனையை இந்திய அதிகாரிகள் ஆரம்பத்தில் ஏற்க மறுத்தனர் என அமெரிக்க அரசு அலுவலர்கள் தெரிவித்ததாக செய்தி நிறுவனமான சி.என்.என். தகவல் வெளியிட்டுள்ளது. பிரதமரிடம் கேட்கப்பட்ட கேள்வியும் பதிலும் 'இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக பாகுபாடு காட்டப்படுவதாகவும், அரசை விமா்சிப்பவா்களை வாய் திறக்காமல் செய்வதாகவும் மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன. உங்கள் நாட்டில் உள்ள முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மையினரின் உரிமைகளை மேம்படுத்தவும், பேச்சுரிமையை நிலைநாட்டவும் நீங்களும் உங்கள் அரசாங்கமும் என்ன நடவடிக்கையை எடுக்க விரும்புகிறீா்கள்?' என்று பிரதமா் மோடியிடம் பத்திரிகையாளர் சப்ரினா சித்திக் கேள்வி எழுப்பினார். பிரதமா் அளித்த பதில்: அதிபா் பைடன் கூறியதுபோல், இந்தியா மற்றும் அமெரிக்காவின் மரபணுவில் ஜனநாயகம் உள்ளது. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஜனநாயகம் உள்ளது. இந்தியாவின் முன்னோா்கள் அரசமைப்புச் சட்டம் குறித்து எங்களுக்குக் கற்பித்துள்ளனா். அரசமைப்புச் சட்டத்தில் எழுதப்பட்டுள்ள ஜனநாயக கொள்கைகளை இந்திய அரசு பின்பற்றுகிறது. இதையும் படிக்க | இந்தியாவில் முதலீடு: பிரதமா் மோடி அழைப்பு ஜனநாயகத்தில் ஜாதி, மதம், பாலின அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதில்லை. மனித விழுமியங்கள், மனிதாபிமானம் மற்றும் மனித உரிமைகள் இல்லாத எந்தவொரு நாட்டையும் ஜனநாயக நாடு என்று கூற முடியாது. இந்தியாவை ஜனநாயக நாடு என்று அழைக்கும்போது, அங்கு பாகுபாடு என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்தியாவில் அரசு வழங்கும் பலன்கள் அனைத்து மக்களுக்கும் கிடைக்கக் கூடியதாக உள்ளன. ஜாதி, மத அடிப்படையில் இந்தியாவின் ஜனநாயக கொள்கைகளில் எந்தப் பாகுபாடும் காட்டப்படுவதில்லை' என்று தெரிவித்தார். இதில் இந்தியாவில் சாதி, மத பாகுபாடுகள் இல்லை என்று பத்திரிகையாளரின் முதல் கேள்விக்கு மட்டுமே பிரதமர் பதில் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் செய்தியாளர் சந்திப்புக்கும் பிரதமர் மோடி 'டெலிப்ராம்ப்டர்' பயன்படுத்தியது குறித்து பலரும் விமரிசித்து வருகின்றனர். யார் இந்த சப்ரினா சித்திகி? வாஷிங்டனைச் சேர்ந்த சப்ரினா சித்திகி, வால் ஸ்ட்ரீட் பத்திரிகையின் நிருபர். இவர் வெள்ளை மாளிகை சார்ந்த நிகழ்வுகளை குறிப்பாக பைடன் ஆட்சியின் சிறப்புகளை சேகரித்து வருகிறார். முன்னதாக, கார்டியன் பத்திரிகையில் 2019 வரை பணியாற்றியுள்ளார். அப்போதும் வெள்ளை மாளிகை, 2016 அதிபர் தேர்தல் செய்திகளை சேகரித்துள்ளார். தி ஹஃபிங்டன் போஸ்ட் பத்திரிகையிலும் பணியாற்றியுள்ளார். சப்ரினா சித்திகி இவர் அமெரிக்க முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர். நார்த்ஈஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் படித்தவர். தற்போது கணவருடன் வாஷிங்டனில் வசித்து வருகிறார். சப்ரினா சித்திகியின் தந்தை இந்தியாவில் பிறந்து பாகிஸ்தானில் வளர்ந்தவர். அவருடைய தாயாரும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர். ஒபாமா கருத்து அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது, 'சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் சர்வாதிகார... தாராளமற்ற ஜனநாயகவாதியாகக் கருதப்படும் பிரதமர் மோடி போன்ற தலைவர்களுடன் பைடன் எவ்வாறு தன்னை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?' என்று கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பதில் அளித்த ஒபாமா, அதிபர் பைடனின் இடத்தில் நான் இருந்திருந்தால், பிரதமர் மோடியுடன் பேச வாய்ப்பு நேர்ந்தால், "இந்தியாவில் உள்ள சிறுபான்மையின மக்களின் உரிமைகளை நீங்கள் பாதுகாக்கத் தவறினால் ஒரு கட்டத்தில் இந்தியா பிளவுபடத் தொடங்கிவிடும்" என்று கூறுவதே என் உரையாடலின் முக்கிய பகுதியாக இருக்கும் என்றார். மேலும், 'உள்நாட்டு மோதல்கள் நடக்கத் தொடங்கினால் என்ன நடக்கும் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். உள்நாட்டு மோதல் என்பது முஸ்லீம்களுக்கு மட்டுமல்ல, பெரும்பான்மையான இந்துக்களின் நலனுக்கும் எதிரானது. இந்த விஷயங்களைப் பற்றி நேர்மையாகப் பேசுவது முக்கியம் என்று நான் நினைக்கிறேன்' என்று கூறியுள்ளார். முதல் செய்தியாளர் சந்திப்பா? பிரதமர் நரேந்திர மோடி 2014ல் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு இதுவே முதல் செய்தியாளர் சந்திப்பாக இருக்கும் என்று நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. இதுவும் சமூக ஊடங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, முன்னதாக 2015 ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, குடியரசு தின விழா சிறப்பு விருந்தினராக இந்தியா வந்தபோது தில்லியில் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இரு தலைவர்களும் செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்த்தினர். அதிலும் இருவரிடமும் இரு நாட்டு நட்புறவு, உலக நாடுகளின் பிரச்னைகள் குறித்து தலா இரு கேள்விகள் மட்டுமே கேட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுபோல பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அந்தந்த நாட்டுத் தலைவர்களுடன் உரையாற்றியதுடன் இரு நாடுகள் உறவு, உலக பிரச்னைகள் குறித்த கேள்விகளுக்கு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியிருக்கிறார். ஆனால், உள்நாட்டு அரசியல் குறித்து அவர் பேசியதில்லை. 2019 தேர்தலின்போது அப்போதைய பாஜக தலைவர் அமித் ஷாவுடன் ஒரு செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. ஆனால் இதில் பிரதமர் மோடி கேள்விகளைத் தவிர்த்துவிட்டார். அமித் ஷாதான் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதுவும் தில்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சி சார்ந்தே அந்த செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அதுபோல, பல்வேறு செய்தி நிறுவனங்களுக்கு தனியாக பேட்டியளித்திருக்கிறாரே தவிர, செய்தியாளர்கள் சந்திப்பு என்று எதுவும் நடத்தியதில்லை. ஒரு நாட்டின் பிரதமர் செய்தியாளர்களை சந்திக்கப் பயப்படுகிறார் என இதனை எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. இந்த சூழ்நிலையில்தான் வெள்ளை மாளிகையில் அரசியல் குறித்த ஒரே ஒரு கேள்விக்கு பிரதமர் பதில் அளித்திருக்கிறார். அதுவும் தற்போது மணிப்பூரில் இரு சமூகத்தினரிடையே வன்முறை நீடித்து வரும் நிலையில் சிறுபான்மையினர் குறித்துப் பேசியுள்ளார். அந்தவகையில் பல்வேறு அரசு சார்ந்த நிகழ்ச்சிகளில், வெளிநாடுகளில் உரையாற்றியுள்ள பிரதமர் மோடி, முதல்முறையாக வெளிநாட்டில் செய்தியாளர்கள் சந்திப்பில், உள்நாட்டு அரசியல் குறித்த ஒரே ஒரு கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அந்த வகையில் இதுவே பிரதமர் மோடியின் முதல் செய்தியாளர் சந்திப்பாகப் பார்க்கப்படுகிறது.
from Dinamani - சிறப்புச் செய்திகள் - https://ift.tt/GPMxEnB
from Dinamani - சிறப்புச் செய்திகள் - https://ift.tt/GPMxEnB