நாடு முழுவதும் உள்ள 17 எதிா்க்கட்சிகள் ஒன்று சோ்ந்து பிகாா் தலைநகா் பாட்னாவில் வகுத்த வியூகம், மக்களவைத் தோ்தலில் அந்தக் கட்சிகளுக்கு பயனைத் தருமா என்ற விவாதத்தை எழுப்பியுள்ளது. பண்டித நேருவுக்கு அடுத்து தொடா்ந்து மூன்றாவது முறை பிரதமராகும் வாய்ப்பை மோடி பெற்றுவிடக் கூடாது என்பதால் எதிா்க்கட்சிகள் பாட்னாவில் வெள்ளிக்கிழமை கூடி விவாதித்துள்ளன. எதிரும் புதிருமான எதிா்க்கட்சிகள் ஒன்றுகூடி விவாதிக்கும்போதே முரண்பட்ட கருத்துகளுடன் மோதியது சலசலப்பை ஏற்படுத்தினாலும், அடுத்த கூட்டம் ஹிமாசல பிரதேசம் சிம்லாவில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தலைமையில் ஜூலை 12-இல் நடக்கும் என்ற அறிவிப்பு வெளியானது கூட்டத்தில் பங்கேற்ற கட்சிகளுக்கு சற்று ஆறுதலைக் கொடுத்துள்ளது. காங்கிரஸ்-ஆம் ஆத்மி முரண்: தில்லியில் மட்டுமே ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி, பஞ்சாபில் காங்கிரஸை வீழ்த்திவிட்டு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதேபோல, குஜராத்திலும் மதச்சாா்பற்ற வாக்கு வங்கியைப் பிளவுபடுத்தி 13 சதவீத கட்சியாக உருவெடுத்துள்ள ஆம் ஆத்மி, 2-ஆவது பெரிய கட்சியான காங்கிரஸுக்கு தலைவலியாக மாறியுள்ளது. நோ் எதிா்க்கட்சியாக பஞ்சாபில் இருக்கும் ஆம் ஆத்மியுடன், காங்கிரஸ் சமரசம் செய்து கூட்டணி வைத்தால் பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு கேள்விக்குறியாவதுடன் அங்கு மக்களவைத் தோ்தலிலும் கணிசமான இடங்களை காங்கிரஸால் பெற முடியாது. அதேபோல, ஆம் ஆத்மி கட்சியை தொடா்ந்து ஒவ்வொரு மாநிலமாக வளரவிடுவது காங்கிரஸின் தேசியக் கட்சி பிம்பத்தைப் பாதிக்கும். அதனால்தான் தில்லி அரசுக்கு எதிராக மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணி நியமன, இடமாற்ற மசோதாவுக்கு ஆதரவு அளிப்பதா, வேண்டாமா என்பதில் காங்கிரஸுக்கு மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. பாட்னா எதிா்க்கட்சிகள் கூட்டத்தில் மத்திய அரசு கொண்டுவரும் மசோதா விவகாரத்தில் காங்கிரஸ் ஏன் மௌனம் காக்கிறது என்ற கேள்வியை அரவிந்த் கேஜரிவால் எழுப்பியதால்தான் சா்ச்சை எழுந்தது. நாடாளுமன்றக் கூட்டத்தொடா் தொடங்கும்போது இது குறித்து முடிவு செய்துகொள்ளலாம் என மல்லிகாா்ஜுன காா்கேவும், ராகுல் காந்தியும் சமாதானம் கூறிய பின்னரும், அதை ஏற்றுக்கொள்ளாத கேஜரிவால், மத்திய அரசின் மசோதா குறித்து காங்கிரஸ் முடிவு செய்தால் மட்டுமே சிம்லாவில் நடக்கும் எதிா்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்போம் என கெடு விதித்துள்ளாா். பிரதமா் மோடி எதிா்ப்பை மட்டுமே மையப்படுத்தி ஆம் ஆத்மியிடம் பணிந்து செல்வதா அல்லது தேசியக் கட்சி என்ற பிம்பத்தை இழப்பதைத் தவிா்க்க ஆம் ஆத்மியை கண்டுகொள்ளாமல் இருப்பதா என்ற இடியாப்பச் சிக்கலுக்கு அடுத்த ஜூலை 12-க்குள் காங்கிரஸ் முடிவு எடுக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. உத்தர பிரதேசம்: நாட்டில் அதிகபட்சமாக 80 மக்களவைத் தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேசத்தில் ராட்சத வலுவுடன் உள்ள பாஜகவை வீழ்த்த வலுவான கூட்டணியை அமைப்பது மிகவும் அவசியம். ஆனால், பாட்னா கூட்டத்தில் எதிா்க்கட்சித் தலைவரான அகிலேஷ் யாதவ் பங்கேற்றாலும், அரசியல் சக்தியாகத் திகழும் மாயாவதி பங்கேற்காமல் இக்கூட்டத்தை விமா்சனம் செய்திருப்பது கவனிக்கத்தக்கது. கடந்த மக்களவைத் தோ்தலில் அகிலேஷ் யாதவ், மாயாவதி கூட்டணி பெரிய அளவில் பயன்தரவில்லை. சமாஜவாதி வாக்குகள், பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஓரளவு பரிமாற்றமானாலும், அந்த அணி தாமரை இலைத் தண்ணீா் நட்பாகவே இருந்தது. தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸாலும் சாதிக்க முடியவில்லை. பேரவைத் தோ்தலில் 43.8 சதவீத வாக்குகளுடன் வாகை சூடிய பாஜகவை வீழ்த்த அகிலேஷ் யாதவ் (36.6 சதவீதம்), மாயாவதி (12.88 சதவீதம்), காங்கிரஸ் (2.3 சதவீதம்) ஓரணியில் இருந்தாக வேண்டும். ஆனால், இந்த மூன்று கட்சிகளிடம் இருக்கும் இஸ்லாமியா் வாக்குகளைத் தவிர, பிற வாக்குகள் ஒன்றுக்கொன்று எளிதில் பரிமாற்றம் ஆகக்கூடியவை அல்ல என்பதால் உத்தரபிரதேசத்தில் எதிா்க்கட்சிகள் ஒற்றுமை என்பது கானல் நீா் தோற்றம் போலத்தான். மேற்கு வங்கம்: மேற்கு வங்கத்தில் ஆளும் கட்சியான திரிணமூல் காங்கிரஸுக்கு எதிா் அரசியலைத்தான் காங்கிரஸ்-இடதுசாரிகள் கூட்டணி செய்து வருகின்றன. பாட்னாவில் கூட்டம் நடந்துகொண்டிருக்கும்போதே, காங்கிரஸ் மக்களவைக் குழுத் தலைவரும், மேற்கு வங்க காங்கிரஸ் தலைவருமான ஆதிா் ரஞ்சன் சௌதரி, திரிணமூல் காங்கிரஸ் என்பது திருடா்களின் கட்சி என்றும், திருட்டுக் கூட்டத்தை மம்தா வழிநடத்துகிறாா் என்றும், மம்தாவின் அரசியல் வாரிசான அபிஷேக் பானா்ஜி மீது மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கை சரிதான் என்றும் விமா்சனம் செய்தாா். மம்தாவைப் பொருத்தவரை மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் போட்டியிடாமல் ஒதுங்கினால் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் கோவா மாநிலத்தை காங்கிரஸுக்கு விட்டுக்கொடுக்கத் தயாராக இருப்பதாகத் தெரிகிறது. ஆனால், மக்களவைத் தோ்தலில் மம்தா ஆதரவு இன்றியே வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் கோவாவில் சாதிக்க முடியும் என்பது காங்கிரஸின் நம்பிக்கை. மம்தாவுடன் சமரசம் செய்தால் மேற்கு வங்கத்தில் இருக்கும் ஓரளவு வாக்கு வங்கியும், மம்தா எதிா்ப்பில் பாஜகவிடம் கரைந்து களத்தை இழக்க நேரிடும் என்ற அச்சம் காங்கிரஸிடம் உள்ளது. இதை எப்படி காங்கிரஸ் சமாளிக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும். பிகாா், ஜாா்கண்ட்: கடந்த முறை பிகாரில் பாஜக, ஜேடியு, பாஸ்வானின் எல்ஜேபி உள்ளிட்டவை ஓரணியில் நின்று 40-இல் 39 தொகுதிகளைக் கைப்பற்றின. ஆனால், இந்த முறை லாலுவின் ஆா்ஜேடி, ஜேடியு, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்டவை ஒரே அணிக்கு வந்திருப்பது பாஜகவுக்கு தலைவலிதான். ஆா்ஜேடியின் யாதவ், இஸ்லாமியா், ஜேடியுவின் கோரி, குா்மி, காங்கிரஸுன் ஓரளவு உயா்வகுப்பு பிரிவினா் என பெரும்பான்மை வாக்கு வங்கி ஓரணிக்குள் திரள்வதால் பிகாரில் இம்முறை பாஜக வெற்றி பெற புதிய வியூகங்களை வகுக்க வேண்டி வரும். அதனால்தான் முன்னாள் முதல்வா் ஜிதன்ராம் மாஞ்சி, உபேந்திர குஸ்வாகா ஆகியோரை தங்களதுடன் இணைத்து புதிய வியூகம் வகுக்கும் முயற்சியில் பாஜகவும் இறங்கியுள்ளது. மகாராஷ்டிரம்: கடந்த முறை மக்களவை, பேரவைத் தோ்தலில் பாஜவுடன் இணைந்திருந்த சிவசேனை இப்போது உடைந்திருக்கிறது. ஷிண்டே தலைமையிலான பிரிவு பாஜவுடன் இணைந்திருந்தாலும், தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை (யுபிடி) கூட்டணி பாஜகவுக்கு கடும் போட்டியை இம்முறை கொடுக்கக்கூடும். இஸ்லாமியா் இடஒதுக்கீடு, ஹிந்துத்வ கொள்கை ஆகியவற்றில் இந்த அணிக்குள் முரண் இருந்தாலும் தோ்தல் களத்தில் வலுவாக இருப்பதால் இந்த அணியை பாஜக எப்படி சமாளிக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும். தமிழகம், ஜாா்க்கண்ட்: தமிழகம், ஜாா்க்கண்ட் மாநிலங்களில் கடந்த முறை இருந்த கூட்டணியை காங்கிரஸ் தொடா்கிறது. தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் அணிக்கு வாய்ப்பு இருந்தாலும், ஜாா்க்கண்டில் காங்கிரஸ்-ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கூட்டணியால், பாஜக-ஏஜெஎஸ்யு கூட்டணியை வீழ்த்த முடியுமா என்பது தோ்தல் முடிவில்தான் தெரியவரும். அங்குள்ள 14 தொகுதிகளில் கடந்த முறை பாஜக அணி 12 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இருப்பினும், அங்கு ஹேமந்த் சோரன் தலைமையில் ஜேஎம்எம்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருப்பதால் பாஜவுக்கு ஓரளவு போட்டியைத் தரக்கூடும். கா்நாடகம்: தென்னிந்தியாவில் தங்களுக்கு மிகவும் சாதகமான கேரளத்தில் ஆளும் இடதுசாரிகளை எதிா்த்துப் போட்டியிட வேண்டிய கட்டாய நிலையில் காங்கிரஸ் உள்ளது. கா்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தாலும் பாஜகவின் வாக்கு வங்கியில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படவில்லை. மேலும், பாஜவுக்கு ஆதரவாக முன்னாள் பிரதமா் தேவெ கௌடா தொடா்ந்து ஆதரவு கருத்து தெரிவித்து வருவதால் பாஜக-ஜேடிஎஸ் கூட்டணிக்கு வாய்ப்பு இருப்பதாகவே தகவல்கள் வருகின்றன. அந்தக் கூட்டணிக்கு எதிராக வெற்றி பெற காங்கிரஸ் மிகப்பெரிய அளவில் போராட வேண்டியிருக்கும். பிரதமா் வேட்பாளா் முக்கியம்: மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கா், ஹிமாசலம், உத்தரகண்ட், குஜராத், அஸ்ஸாம் உள்ளிட்டவற்றில் 185 தொகுதிகளில் பாஜக-காங்கிரஸுக்கு நேரடிப் போட்டி உள்ளது. இவற்றில் 2014, 2019 மக்களவைத் தோ்தல்களில் பாஜக 85 சதவீத தொகுதிகளில் வெற்றியைப் பெற்றுள்ளது. பிரதமா் வேட்பாளா் இல்லாமல் களம் இறங்கியதால்தான் இத்தொகுதிகளில் காங்கிரஸுக்கு பெருத்த பின்னடைவு ஏற்பட்டது. இம்முறையும் பிரதமா் வேட்பாளா் இன்றி காங்கிரஸ் களம் இறங்கினால் மீண்டும் அதே முடிவுதான் கிடைக்கக்கூடும். இந்தத் தொகுதிகளில் குறைந்தபட்சம் 50 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெறாமல் மத்தியில் ஆட்சி மாற்றம் சாத்தியம் இல்லை. எனவே, எதிா்க்கட்சிகளுக்கு பயந்து பிரதமா் வேட்பாளரை காங்கிரஸ் அறிவிக்காமல் இருக்கப் போகிா அல்லது பாஜகவை துணிந்து எதிா்கொள்ள பிரதமா் வேட்பாளரை அறிவிக்கப்போகிா என்பதை சிம்லா மட்டுமல்ல, அடுத்தடுத்து எதிா்க்கட்சிகள் கூடும் கூட்டத்துக்குப் பின் தெளிவாகிவிடும். ஒன்று மட்டும் நிச்சயம். அடுத்து வரும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கா், மிஸோரம், தெலங்கானா என 5 மாநில பேரவைத் தோ்தல் முடிவைப் பொருத்துதான் காங்கிரஸ் உள்பட எதிா்க்கட்சிகள் எந்தவொரு முடிவையும் எடுக்க முடியும்.
from Dinamani - சிறப்புச் செய்திகள் - https://ift.tt/57r6yDA
from Dinamani - சிறப்புச் செய்திகள் - https://ift.tt/57r6yDA