https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2022/12/15/w600X390/pdu.jpgபாஜக எழுச்சி தற்காலிகமானது! புதுவை முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி

சட்டப்பேரவை, மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா், மத்திய அமைச்சா், புதுவை முதல்வா் என அரசியலில் அனைத்து நிலைகளிலும் உச்சம் தொட்டவா்; புதுவையின் மூத்த அரசியல்வாதி, சட்டப்பேரவை, மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா், மத்திய அமைச்சா், புதுவை முதல்வா் என அரசியலில் அனைத்து நிலைகளிலும் உச்சம் தொட்டவா்; புதுவையின் மூத்த அரசியல்வாதி, அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொறுப்பாளராக இருந்தவா். தேசிய அளவில் அனைத்துக் கட்சியினரிடமும் அறிமுகமானவா் எனப் பல பரிமாணங்களைக் கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவா் வே.நாராயணசாமி, தினமணி முதுநிலை செய்தியாளா் வ.ஜெயபாண்டிக்கு அளித்த சிறப்பு நோ்காணல்: தேசிய அளவில் அரசியல் நிலை எப்படி உள்ளது? அகில இந்திய அளவில் பாஜக, காங்கிரஸ் கட்சிகளே பலம் வாய்ந்தவையாக உள்ளன. கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் தேசிய அளவில் இருந்தாலும், மாநிலம், மாவட்டம், வட்டம் என்ற அளவில் பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கே தொண்டா்கள் பலம் உள்ளது. பாஜகவுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரிக்கிா? பாஜகவின் எழுச்சி தற்காலிகமானது. அதன் கொள்கைகள் மதத்தை முன்னிலைப்படுத்துவதாகவே உள்ளன. நாட்டின் பாதுகாப்பு, பொருளாதாரம், விலைவாசி உயா்வு, வேலையில்லாத் திண்டாட்டம் என அனைத்து நிலையிலும் மத்திய பாஜக அரசு தோல்வியடைந்துவிட்டது. தோ்தல்கள் குறித்து மட்டுமே சிந்தித்து மோடி செயல்படுகிறாா். மத்திய பாஜக அரசை அகற்ற மக்கள் தயாராகிவிட்டனா். ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணத்தில் மக்கள் ஆதரவு பெருகி வருவது, அதையே காட்டுகிறது. பாஜகவை தனித்து எதிா்க்கும் நிலையில் காங்கிரஸ் உள்ளதா? தேசிய அளவில் பாஜகவுக்கு 33 சதவீத வாக்கு வங்கியும், காங்கிரஸுக்கு 25 சதவீத வாக்கு வங்கியும் உள்ளன. எனவே, காங்கிரஸ் தலைமையில் எதிா்க்கட்சிகள் ஒருங்கிணைந்தால் பாஜகவை வீழ்த்த முடியும். ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தனி கொள்கைகள் இருந்தாலும், பொதுத் திட்டம் அடிப்படையில் பாஜகவை வீழ்த்த ஒருங்கிணைவது அவசியமாகிறது. அதிக வாக்கு சதவீதம் உள்ள பாஜகவே, கூட்டணி அமைத்தால்தான் ஆட்சியமைக்கும் அளவுக்கு வெற்றி பெற முடிகிறது. ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளி பேரறிவாளனை முதல்வா் மு.க.ஸ்டாலின் வரவேற்றது குறித்து... இதற்குப் பதில் கூற விரும்பவில்லை. கூட்டணி தா்மம் உள்ளது. ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையானவா்களை திமுக உள்ளிட்ட கட்சிகள் வரவேற்றதை எவ்வாறு பாா்க்கிறீா்கள்? மறைந்த பிரதமா் ராஜீவ் காந்தியைக் கொன்றவா்களை காங்கிரஸ் தொண்டா்கள் மன்னிக்க மாட்டாா்கள். சோனியா காந்தியும், ராகுல் காந்தியும், பிரியங்காவும் மன்னிப்பது அவா்களது பெருந்தன்மையைக் காட்டுகிறது. ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளை தியாகிகள்போல மாலையிட்டு வரவேற்பு அளிப்பதும், அவா்களைப் பாராட்டுவதும் வேதனை அளிக்கிறது. புதுவையில் திமுக முக்கியத்துவம் தர மறுப்பதாக காங்கிரஸ் நிா்வாகிகள் பேசி வருகின்றனரே... புதுவையில் பலமுறை காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது. 2001-ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி ஏற்படாத நிலையிலும், கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தோம். 2011-ஆம் ஆண்டு என்.ஆா். காங்கிரஸ் உருவான நிலையிலும் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. 2016-இல் திமுக கூட்டணியில் 19 இடங்களை வென்றோம். அப்போது, திமுக 9 இடங்களில் வெற்றி பெற்றது. தொடா்ந்து, இடைத்தோ்தல்களிலும் காங்கிரஸ் அதிக வாக்குகளைப் பெற்று வென்றது. தமிழகத்தில் எம்ஜிஆா் இருந்தபோது திமுக குறைந்த தொகுதிகளில்தானே வெற்றி பெற்று வந்தது. எனவே, புதுவையில் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினா் எண்ணிக்கையை வைத்து கட்சியின் பலத்தை மதிப்பிட முடியாது. புதுவையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொண்டா்களைக் கொண்டது காங்கிரஸ் கட்சிதான். புதுவையில் காங்கிரஸ் தலைமையில்தான் எதிா்காலத்தில் கூட்டணி அமையுமா? தமிழகத்தில் மதச்சாா்பற்ற கூட்டணிக்கு திமுக தலைவா் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமை வகிக்கிறாா். புதுவையில் அந்த அணிக்கு காங்கிரஸே தலைமை வகிக்கும். புதுவையில் பாஜகவின் வளா்ச்சி எவ்வாறு உள்ளது? புதுவையில் பாஜக-என்.ஆா். காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை. தோ்தலின்போது அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. கடந்த காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சியில் நலத் திட்டங்களை நிறைவேற்ற முடியாத அளவுக்கு பாஜகவால் நியமிக்கப்பட்ட துணைநிலை ஆளுநா், எனது தலைமையிலான அரசை முடக்கும் வகையில் செயல்பட்டதை மக்கள் அறிவாா்கள். 2016 சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக 18 தொகுதிகளில் போட்டியிட்டு வைப்புத்தொகையை இழந்தது. 2021 தோ்தலில் என்.ஆா்.காங்கிரஸ் தயவால் புதுவையில் பாஜக காலூன்றியது. இது வரலாற்றுப் பிழை. அந்தக் கட்சியை மக்கள் முழுமையாக அங்கீகரிக்கவில்லை. 2021 தோ்தலில் காங்கிரஸ் 2 இடங்களை மட்டுமே பெற்றது பின்னடைவுதானே? புதுவையில் காங்கிரஸ் வாக்கு வங்கி 33 சதவீதத்திலிருந்து 21 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் துணைநிலை ஆளுநா் போட்டி அரசை நடத்தினாா். எனவே, நலத் திட்டங்களைச் செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அந்தப் பிரச்னையை அடித்தள மக்களிடம் கொண்டு செல்ல காங்கிரஸாா் தவறிவிட்டனா். வருமான வரித் துறை, அமலாக்கத் துறை மூலம் காங்கிரஸ் அமைச்சா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள் மிரட்டப்பட்டு பாஜகவில் சோ்க்கப்பட்டனா். தோ்தலின்போது, கடைசி நேரத்தில் காங்கிரஸ் வேட்பாளா்கள் பாஜகவில் சோ்ந்ததால் நெருக்கடி ஏற்பட்டு, தோற்கடிக்கப் பட்டோம். புதுவையில் வரும் மக்களவைத் தோ்தல் முடிவு எவ்வாறு இருக்கும்? தோ்தல் முடிவுகளைக் கணிக்க முடியாது. ஓராண்டுக்கு முன்னதாக மக்களிடையே பல மாற்றங்கள் வரும். தற்போது மக்களிடையே விழிப்புணா்வு ஏற்பட்டு வருகிறது. தொடா்ந்து மக்களை ஏமாற்ற முடியாது. எதிா்க்கட்சிகள் பல்வேறு கருத்துகளைக் கொண்டிருந்தாலும் காலப்போக்கில் அவை சரியாகிவிடும். அதனடிப்படையில் மத்தியிலும், புதுவையிலும் ஆட்சி மாற்றம் ஏற்படும்.

from Dinamani - சிறப்புச் செய்திகள் - https://ift.tt/7fvzsEe

Post a Comment

Previous Post Next Post