2006-2011 தி.மு.க. ஆட்சிக்காலத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக தங்கம் தென்னரசு பணியாற்றினார். அப்போது எதிர்க்கட்சி வரிசையில் இருந்த அ.தி.மு.க., அமைச்சர் தங்கம் தென்னரசு, அவரின் மனைவி மணிமேகலை ஆகியோர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்து வைத்திருப்பதாக புகார் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து 2012-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அ.தி.மு.க. ஆட்சிப்பொறுப்பேற்றதும், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு, அவரின் மனைவி மணிமேகலை மீது அ.தி.மு.க.சார்பில் சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம், வழக்கை மறு அமர்வுக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டது. இதற்கடுத்த அமர்வுகளில் வாத, பிரதிவாத விவாதங்கள் நடத்தப்பட்டன.
அப்போது அமைச்சர் தங்கம் தென்னரசு தரப்பில், அரசியல் காரணங்களுக்காக கடந்த அ.தி.மு.க.ஆட்சியில் தன் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே, என்னையும், எனது மனைவியையும் சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் எனக்கோரி மனுவை தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், சொத்துக்குவிப்பு வழக்கிலான தீர்ப்பை தள்ளிவைத்து உத்தரவிட்டது. இந்தநிலையில் இறுதி விவாதத்துக்காக அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான சொத்துக்குவிப்பு வழக்கு மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கிறிஸ்டோபர் முன்பு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன்படி, வாதங்களை கேட்டறிந்த நீதிபதி கிறிஸ்டோபர், அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரின் மனைவி மணிமேகலை ஆகியோரை சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டார்.
from Latest News