https://gumlet.vikatan.com/vikatan/2022-12/90d8659b-7d56-4c7c-a208-f35e164339bc/WhatsApp_Image_2022_12_07_at_17_29_06.jpegஊருக்கே தெய்வமான ராமநாதபுரம் ராஜாவின் மகள் சௌந்தரவல்லி நாச்சியார் - அதிசயக் கதை!

மறவர் சீமை என்றும் சேதுபதி சீமை என்றும் போற்றப்படுவது ராமநாதபுரம் பகுதிகள். இது தொன்மையான வரலாற்றைக் கொண்டது. ராமநாதபுரம் மாவட்டம் 1063ம் ஆண்டுக்கு முன்பு வரை பாண்டியர்களின் ஆதிக்கத்தில் முத்துக் குளிக்கும் பகுதியாக இருந்து வந்தது. பிறகு 1063-ம் ஆண்டு ராஜேந்திர சோழனால் கைப்பற்றப்பட்டு சோழர்களின் கீழ் வந்தது. பின்னர் 15-ம் நூற்றாண்டில் மீண்டும் பாண்டிய நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. கி.பி 1520-ல் விஜயநகரத்தை ஆண்ட நாயக்கர்கள் பாண்டியர்களிடமிருந்து கைப்பற்றி சுமார் இரண்டு நூற்றாண்டுகள் வரை ஆண்டனர். 17-ம் நூற்றாண்டு முதல் சேதுபதி மன்னர்களால் தனித்த உரிமையுடன் இப்பகுதி ஆளப்பட்டு வந்தது. 18-ம் நூற்றாண்டின் முன் பகுதியில் ராமநாதபுரம், தாண்டவராயப் பிள்ளையால் சிவகங்கை, ராமநாதபுரம் என்று இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டன.

சேதுபதி மன்னர்களின் கதைகள் பெரும்பாலும் அப்பகுதி மக்களால் பல புனைவுகளோடு சொல்லப்பட்டு வருகின்றன. அதில் ஒன்று இக்கதை.
சௌந்தரவல்லி நாச்சியார்

1940-களில் ராமநாதபுரத்தை ஆண்ட ராஜாவின் மகள், சௌந்தரவல்லி நாச்சியார். மென்னந்தி‌ கிராமத்திலேயே அவள் மிகவும் அழகான பெண். அவள் இடுப்பில் எப்போதும் ஒரு கத்தி இருந்து கொண்டே இருக்கும். தற்காப்புக் கலைகளில் மிகவும் சிறந்து விளங்கியவள். அவளுடைய கோபமும் எப்போதும் நியாயத்திற்காக மட்டும்தான் இருந்தது. அவள் எங்குச் சென்றாலும் இடுப்பு அரையில் கத்தியையும், கூந்தலில் மல்லிகை பூவையும் வைத்துக் கொள்ள மறப்பதில்லை. அவள் தாயில்லாமல் வளர்ந்தவள் என்பதால் ராஜா அவளை மிகவும் அன்புடன் வளர்த்தார்.

இப்படியிருக்க, ராஜாவின் மாளிகையில் வேலை செய்த மாட்டு வண்டி ஓட்டும் வெள்ளையன் என்பவர் மீது நாச்சியார் காதல் வயப்படுகிறாள். வெள்ளையன் ஏற்கெனவே திருமணமாகி, அவனுக்கு 7 குழந்தைகளும் இருந்தனர். எனினும் நாச்சியாரும் வெள்ளையனும் ஒருவரையொருவர் நேசித்து வந்தனர். அவள் தந்தையும் இதை அறிந்திருந்தார். இப்படியிருக்க, ஒரு நாள் மாளிகையில் இருந்து அவள் மறைமுகமாக காதலனைப் பார்க்கச் செல்வது அவளின் பெரியப்பா மகன்களுக்குத் தெரிந்து விட, தங்களின் தங்கை மாளிகையில் வேலைப்பார்க்கும் ஒருவரைக் காதலிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாத அண்ணன்கள் அவளைக் கொல்ல சதித்திட்டம் தீட்டினர்.

ஒரு நாள் மாளிகையில், இரவில் யாரும் இல்லாத நேரத்தில், 'ராஜா உன்னை திருவிழாக் காலம் என்பதால் அரண்மனைக்கு அழைத்து வரச் சொன்னார்' என்று கூறி அழைத்தனர். அவளுக்கு மாட்டு வண்டி ஓட்டும் வெள்ளையன் அங்கு இல்லாதது பற்றிக் கேட்க, அதற்கு 'அரசர் உன்னை மட்டும் அழைத்து வரச் சொன்னார்' என்கிறார்கள். அதை நம்பி அவர்களுடன் சென்றவளுக்கு, ஆற்றுக்கு எதிர்திசையில் காத்திருந்தது அதிர்ச்சி. ஆற்றின் அந்தக் கரையில் 100 ஆண்களுடன் தன் அண்ணன்களைப் பார்த்த நாச்சியாருக்கு சதித்திட்டம் புரிய ஆரம்பித்தது. சிறிதும் தயங்காமல், மாட்டு வண்டியில் இருந்து இடுப்பில் இருந்த கத்தியை எடுத்துக்கொண்டு குதித்தாள் நாச்சியார்.

"நான் இவர்கள் கையால் சாகப் போகிறேன், அந்தப் பாவம் யாருக்கும் சேரக்கூடாது. என்னால் யாரும் சாகவும் கூடாது. அதனால் வெள்ளையனின் குலத்தைச் சார்ந்த ஒருவரும் இங்கே இருக்கக் கூடாது" என்கிறாள். அண்ணன்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவள் மனம் வெள்ளையன் மீது கொண்டிருந்த காதலிலிருந்து சற்றும் தளரவில்லை. கடைசியில், ஒரு மரத்தில் தூக்கில் போடுகிறார்கள். ஆனால் அவள் உயிர் பிரியாததால், கட்டைகளைக் வைத்து உயிருடன் எரித்து கொலைச் செய்கிறார்கள். 1946-ம் ஆண்டு அவள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அந்த ஆற்றின் அருகே தண்ணீர் எடுக்க வந்த 7 பெண்கள் அவள் இறப்பை இழிவாக பேசியதையடுத்து, 7 பெண்களும்‌ அடுத்தடுத்து இறந்து விடுகின்றனர். அதோடு, அவள் சாவுக்குக் காரணமான அண்ணன்கள் குடும்பமும் இதனாலேயே சாவை சந்தித்திருக்கிறது என அந்தக் கிராம மக்கள் நம்பி வருகின்றனர்.

சௌந்தரவல்லி நாச்சியார்

இந்நிலையில் ஒருநாள் இரவில், வெள்ளையன் குடும்பத்துக்கு நாச்சியார் காட்சியளித்து, தனக்கு கோயில் கட்டச் சொல்லியுள்ளார். 1948-‌ம்‌ ஆண்டில் கோயில் அமைத்து, அன்று முதல் இன்றுவரை வெள்ளையன் குடும்பத்தினர் குல தெய்வமாக நாச்சியாரை வழிபட்டு வருகின்றனர். இப்போது ராமநாதபுரம் மாவட்டத்தின் மென்னந்தி என்னும் கிராமத்தில் மக்கள் அனைவருக்கும் சௌந்தரவல்லி நாச்சியார் தாயாக விளங்குகிறார்.

மேலும், அந்தக் கிராமத்தில் குல தெய்வமான நாச்சியார் கோயிலின் இரும்பு கதவைத் திருடியவர்கள் மரணித்திருக்கிறார்கள். அதுபோல, பல அமானுஷ்யங்கள் நடப்பதாகவும் நாச்சியாருக்கு எதிராக யாரும் செயல்பட்டால், அவள் கோபத்திலிருந்து தப்பிக்க முடியாது எனவும் அந்தப் பகுதி மக்கள் கூறுகின்றனர்.

- கு.அக்ஷரா சினேகா



from Latest News

Post a Comment

Previous Post Next Post