அதிமுகவில் ஈபிஎஸ் தரப்பும், ஓபிஎஸ் தரப்பும் ஒருவருக்கொருவர் நீக்கிக்கொள்ளும் படலம் தொடர்கிறது.
அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில், ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். மேலும் ஓபிஎஸ் மகன்கள் உட்பட 18 பேரை நீக்குவதாக நேற்று எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன் பின்னர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 22 பேரை கட்சியில் இருந்து நீக்கியதாக ஓ. பன்னீர் செல்வமும் பதிலடி தந்திருந்தார்.
இந்நிலையில் அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்டக் கழகச் செயலாளர்கள் என மேலும் 44 பேரை நீக்குவதாக இன்று ஓ. பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில் கட்சியின் கொள்கை கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதால் முன்னாள் அமைச்சர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், சி. விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாதவரம் மூர்த்தி, பி.வி.ரமணா, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கே.சி. வீரமணி, கே.பி. அன்பழகன், ஆர்.காமராஜ், எஸ்.பி. சண்முகநாதன் உள்ளிட்டோர் நீக்கப்படுவதாக தெரிவித்திருந்தார். புதுச்சேரி மாநிலச் செயலாளர் அன்பழகனும் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அவர் அறிவித்திருந்தார்.
இதையடுத்து அதிமுக மூத்த தலைவர் பொன்னையனுடன் பேசியதாக வெளியான ஆடியோவில் பேசிய நாஞ்சில் கோலப்பன் உள்ளிட்ட 21 பேர் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தற்போது அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், முன்னாள் எம்எல்ஏ சுப்புரத்தினம், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனின் மகன் ஜவகர் உள்ளிட்டோர் கட்சியின் கொள்கைகளுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் நடந்து கொண்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News