பாலஸ்தீன விஷயத்தில் இந்தியா தன்னுடைய நிலைப்பாட்டைக் கடந்த காலத்திலிருந்து முற்றிலுமாக மாற்றிக் கொண்டிருப்பது பெரும் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இஸ்ரேல் தோற்றுவிக்கப்பட்ட காலத்திலேயே எதிர்ப்புத் தெரிவித்த நாடான இந்தியா, தொடர்ந்து இவ்வளவு காலம், இஸ்ரேலுடன் நட்புறவு பாராட்டத் தொடங்கிய பின்னரும்கூட, பாலஸ்தீனத்தின் பக்கமே இருந்து வந்திருக்கிறது.
ஆனால், மிகவும் சிக்கலான இந்த விஷயத்தில் பக்கச் சார்பின்றி நிதானமாகச் செயல்பட்டிருக்க வேண்டிய இந்திய அரசு, உடனடியாக இஸ்ரேலுக்கு ஆதரவான நிலையை வெளிப்படுத்தியது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்திய சில மணி நேரங்களிலேயே கொஞ்சமும் தாமதிக்காமல் அல்லது சற்றும் பொறுத்திராமல் கண்டனம் தெரிவித்த உலக நாடுகளின் தலைவர்களில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் ஒருவர்.
இக்கட்டான சூழலில் இஸ்ரேலுக்கு இந்தியா துணை நிற்பதாகவும் இஸ்ரேல் மீதான தீவிரவாத தாக்குதலை அறிந்து பேரதிர்ச்சி அடைந்ததாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். இந்தக் கருத்தை உடனுக்குடன் இந்திய வெளியுறவு அமைச்சரும் அப்படியே எக்ஸ் வலைத்தளத்தில் ரி-ட்வீட் செய்தார்.
மேற்கு நாடுகள் எப்போதும் இஸ்ரேலுக்கு ஆதரவாகக் கருத்துச் சொல்வது வழக்கமானது என்றாலும் மோடியின் ஆதரவுக் கருத்தோ இந்தியாவின் நிலைப்பாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைக் காட்டுவதாகவே கருதப்பட்டது.
பிறகு சில நாள்கள் கழித்து - மிகக் கொடூரமான விதத்தில் காஸா பகுதியின் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தி பாலஸ்தீன மக்களை ஆயிரக்கணக்கில் கொன்றும் பேரழிவுகளை நிகழ்த்தவும் இஸ்ரேல் தொடங்கியவுடன் - இஸ்ரேல் – பாலஸ்தீனம் என்ற இரு நாடுகள் என்ற தீர்வில் கொண்டுள்ள வரலாற்றுப்பூர்வமான உறுதிப்பாட்டை நினைவுகூர்ந்து இந்தியா கருத்துத் தெரிவித்தது.
இதையும் படிக்க... இஸ்ரேலின் சிதைந்த ஈகோவும் நெதன்யாகுவின் இழந்த செல்வாக்கும்: தொடரும் காஸா தாக்குதலின் பின்னணி!
இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா நிலையெடுத்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள்ளாகவே, காஸாவில் 'மனிதாபிமான அடிப்படையில் போர்நிறுத்தத்துக்கான' ஐக்கிய நாடுகள் அவையின் தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்காமல் வாக்கெடுப்பிலிருந்தே விலகிக் கொண்டது இந்தியா.
இஸ்ரேல் தாக்கப்பட்டபோது உடனே பிரதமர் நரேந்திர மோடி கண்டித்துக் கருத்துத் தெரிவித்ததும் ஐ.நா. தீர்மானத்தில் வாக்களிக்காமல் விலகியிருந்ததும் இரு நாடுகளின் இடையேயுள்ள உறவில் ஏற்பட்டுள்ள மாற்றத்தையும் இரு பிரதமர்கள் இடையேயுள்ள நெருக்கத்தையும் காட்டுவதாகவே கருதப்படுகின்றன.
2014-ல் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றதிலிருந்தே இஸ்ரேல் ஆதரவு நிலையை இந்தியா எடுக்கத் தொடங்கிவிட்டதாகவே அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
பொதுவாக, இதுபோன்ற விஷயங்களில் நிதானமாக இருதரப்பு நிலவரங்களையும் கவனத்தில்கொண்டு, நிலைமையைக் கவனித்துதான் இந்தியா கருத்துத் தெரிவிக்கும். ஆனால், இப்போதோ வெளிப்படையாகவே இஸ்ரேலுக்கு ஆதரவான நிலையை, அதுவும் உடனுக்குடன் எடுத்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
மோடியின் - இந்தியாவின் அறிக்கையைப் பெரும் ஆதரவான அம்சமாகக் கருதுகிறது இஸ்ரேல், தில்லியிலுள்ள இஸ்ரேலிய தூதர் நவோ கிலோன், இந்தியாவின் ‘நூறு சதவிகித’ ஆதரவுக்காக நன்றியும் தெரிவித்தார்.
வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்தால் இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்குமான உறவு மிகவும் வித்தியாசமானது. மகாத்மா காந்தி, நாட்டின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேரு எல்லாருமே, 1940-களில், யூதர்களுக்காகவென இஸ்ரேல் என்றொரு நாட்டை உருவாக்குவதை எதிர்த்தனர்.
இந்தத் திட்டம் நிச்சயமாக பாலஸ்தீனர்களின் வாழ்வுரிமையைப் பறித்துவிடும், பாதித்துவிடும் என்றும் அச்சம் தெரிவித்தனர். இதுபற்றிய தீர்மானத்தில் இஸ்ரேலுக்கு எதிராகத்தான் இந்தியா வாக்களித்தது. (இப்போது இந்தியாவின், அந்தத் தலைவர்களின் அச்சம் நூற்றுக்கு நூறு உண்மையாகிவிட்டதென்றே கூறலாம். பாலஸ்தீன நிலப் பகுதியில் உருவாக்கப்பட்ட இஸ்ரேல் என்ற நாட்டிலிருந்தவாறுதான் பாலஸ்தீன மக்கள் கொன்றொழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது காலங்காலமாகத் தீராத பேரழிவுப் பிரச்சினையாக மாறிவிட்டது).
இதையும் படிக்க... ஹமாஸ்: யார்? என்ன விரும்புகிறது? தாக்குதல் ஏன்?
1970-களில் உலகில் பாலஸ்தீனர்களின் அதிகாரப்பூர்வ பிரதிநிதிகள் என பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை (பிஎல்ஓ) அங்கீகரித்த அரபு நாடு அல்லாத முதல் நாடு இந்தியாதான்.
1980-களில் முழுமையான அரசியல் அந்தஸ்தை அளித்ததுடன், அரசு முறைப் பயணமாக பிஎல்ஓவின் தலைவரான யாசர் அராபத்தையும் பல முறை இந்தியாவுக்கும் வரச் செய்தது. ஐக்கிய நாடுகள் அவையிலும் தொடர்ச்சியாக பாலஸ்தீனத்துக்கு ஆதரவான நிலையையே இந்தியா எடுத்துவந்திருக்கிறது (இந்தியாவில் பல்வேறு அரசியல் கட்சிகளின் மாநாடுகளில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதெல்லாம்கூட உண்டு).
இஸ்ரேலுடன் பாலஸ்தீன விடுதலை இயக்கமே பேச்சுவார்த்தைகளைத் தொடங்கிய பிறகுதான், அமெரிக்காவின் அழுத்தமும் அதிகரிக்க, கடைசியாக 1992-ல் இஸ்ரேலுடன் தூதரக உறவுகளை இந்தியா ஏற்படுத்திக் கொண்டது.
1999-ல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் சண்டை மூண்டபோதுதான் இந்தியாவுக்கும் வளைகுடா நாடுகளுக்கும் இடையே உரசல் ஏற்படத் தொடங்கியது எனலாம். அப்போது இந்தியாவுக்கு ஆயுதம் மற்றும் வெடிபொருள்களை வழங்க இஸ்ரேல் முன்வந்தது. இதுதான் தொடக்கம், தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான ராணுவ - ஆயுத ரீதியிலான உறவுகள் வலுப்பெறத் தொடங்கிவிட்டன.
இப்போது இஸ்ரேலிடமிருந்து ஒவ்வோராண்டும் 2 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஆயுதங்களை இந்தியா வாங்கிக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது – இந்தியாவுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்வதில் தற்போது – ரஷியாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருக்கிறது இஸ்ரேல்! இஸ்ரேலின் ஒட்டுமொத்த ஆயுத ஏற்றுமதியில் 46 சதவிகிதம் இந்தியாவுக்குத்தான்!!
உலகில் நட்பு நாடுகளிடமிருந்து அந்நியமாகிவிடக் கூடாது என்பதையும் இந்தியாவிலேயே கணிசமான அளவுக்கு முஸ்லிம் மக்கள் வசிக்கிறார்கள் என்பதையும் கருத்தில்கொண்டு, உறவு இருந்தாலும் முந்தைய அரசுகள் எல்லாம் இஸ்ரேலுடனான தொடர்புகளை மிகவும் அடக்கியே வாசித்துவந்தன.
ஆனால், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் மத்தியில் பாரதிய ஜனதா கட்சி அரசு பதவியேற்றதும் நிலைமையில் அடியோடு மாற்றம் ஏற்பட்டது.
2017-ல் இஸ்ரேலுக்குச் சென்ற முதல் இந்தியப் பிரதமர் என்ற பெயரையும் புகழையும் பெற்றார் நரேந்திர மோடி.
டெல் அவிவ் கடற்கரையில் மோடியும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவும் வெறுங்கால்களுடன் கடலோரத்தில் கால்நனைத்து நடந்த படங்களெல்லாம் அப்போது வைரலாகின.
தொடர்ந்து சில மாதங்களிலேயே இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாஹும் இந்தியாவுக்கு வந்தார். இந்த ஆண்டு, பிரதமர் மோடிக்கு மிக நெருக்கமானவராக அறியப்படும் இந்தியப் பெரும் பணக்காரரான கௌதம் அதானி, இஸ்ரேலில் முக்கியத்துவம் வாய்ந்த ஹைஃபா துறைமுகத்தின் கட்டுப்பாட்டைப் பெறுவதற்கான முயற்சியில் இறங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
ஆனால், இந்திய அரசின் தற்போதைய நிலைக்கு மாறாக, தொடக்க காலத்திலிருந்தே பாலஸ்தீன மக்களின் பக்கம் இருந்துவரும் காங்கிரஸ் கட்சியின் தலைவரான சோனியா காந்தி, ஐக்கிய நாடுகள் அவையில் மனிதாபிமான போர் நிறுத்தத்துக்கு ஆதரவான தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்காமல் இந்தியா விலகியிருந்ததைக் கடுமையாகக் குறை கூறியுள்ளார்.
கட்டுரையொன்றில் இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலைக் கண்டித்துள்ள சோனியா காந்தி, காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கும் கண்டனம் தெரிவித்துள்ளார். தவிர, இந்தப் பிரச்சினையில் காங்கிரஸின் நிலைப்பாடு நீண்ட காலத் தொடர்ச்சியானது, கொள்கைவழிப்பட்டது என்றும் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
முதன்முதலில் இஸ்ரேலுக்கு உறுதுணையாக இருப்பதாகத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டபோது பிரதமர் நரேந்திர மோடி, பாலஸ்தீன மக்களின் உரிமைகள் பற்றி எதுவும் குறிப்பிடாததையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஹமாஸ் நடவடிக்கைகளையும் பாலஸ்தீன மக்களையும் ஒன்றெனப் பாவித்து, இஸ்ரேல் அரசு பெரும் தவறிழைத்துக்கொண்டிருக்கிறது என்று தெரிவித்துள்ள சோனியா காந்தி, ஹமாஸை அழிப்பது என்ற பெயரில் காஸாவிலுள்ள சாதாரண மக்களைக் கொன்று, பேரழிவை இஸ்ரேல் ஏற்படுத்திக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் – காஸா விஷயத்தில் இந்திய அரசின் நிலைப்பாடு உலகளாவிய அளவில் மிகுந்த கவனம் பெற்றிருக்கிறது. எதிர்காலத்தில் இதையொட்டியே, இந்தியா தொடர்பான விஷயங்களில், பாலஸ்தீனத்துக்கும் காஸாவுக்கும் ஆதரவாக உள்ள நாடுகள் முடிவெடுக்கும் நிலையும் ஏற்படக் கூடும் எனக் கருதப்படுகிறது.
இஸ்ரேலின் உளவுக் கரங்கள் உலகம் முழுவதும் விரிந்து பரந்திருக்கின்றன என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. இஸ்ரேலும், பல்வேறு காரணங்களால் இஸ்ரேலை உறுதிப்பட ஆதரித்து நிற்கும் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளும் தங்கள் நலனுக்காக உலகிலுள்ள நாடுகளில் தங்களுக்கு ஆதரவான அரசுகளே இருக்க வேண்டும் என எதிர்பார்த்தால் வியப்பதற்கில்லை.
இதையும் படிக்க... இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலும் காஸா போரும்! விரிவும் ஆழமும் கொண்ட அலசல்
தனது வாடிக்கையாளர்களின் செல்போன்களை வலுவான அரசு அமைப்புகளின் சார்பில் ஒட்டுக்கேட்கும் அச்சுறுத்தல் இருப்பதாகத் தற்போது ஆப்பிள் நிறுவனம் எச்சரித்திருக்கிறது. இதேபோல, 2021-லும் பெகாசஸ் மென்பொருள்வழி இந்தியத் தலைவர்களின் செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்படுவதாகப் பெரிய அளவில் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த பெகாசஸ் உளவு மென்பொருள் இஸ்ரேலியத் தயாரிப்பு என்பது குறிப்பிடத் தக்கது. இதுபற்றிய விசாரணையெல்லாம் நடத்தப்பட்டபோதிலும் எவ்விதப் பலனும் ஏற்படவில்லை.
இத்தகைய சூழ்நிலையில், இஸ்ரேல் – பாலஸ்தீன பிரச்சினையில் இந்திய நிலைப்பாட்டிலான மாற்றம், வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் எத்தகைய தொடர் விளைவுகளை ஏற்படுத்தும் என்பது மில்லியன் டாலர் கேள்வி.
from Dinamani - சிறப்புச் செய்திகள் - https://ift.tt/niLyVX8