புது தில்லி: அமெரிக்காவின் அருங்காட்சியகம் மற்றும் அரசுத் துறைகளிடம் இருந்து 1,440 கலைப்பொருட்கள் விரைவில் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படவிருக்கின்றன.
அமெரிக்கா, தனது நாட்டில் உள்ள அருங்காட்சியகங்கள் அல்லது அரசுத் துறைகள் வசம் உள்ள 1,440 கலைப்பொருள்களை திருப்பி அனுப்ப முன்வந்துள்ளது. இதன் மூலம் வெளிநாடுகளில் இருந்து மிக அதிகளவிலான தொல்பொருள்களை இந்தியா விரைவில் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது. அவற்றின் பழங்கால மதிப்பை ஆராயவும் சரிபார்க்கவும் இந்திய தொல்லியல் துறையின் (ஏஎஸ்ஐ) நிபுணர்கள் குழு ஏற்கனவே நியூயார்க்கிற்கு அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய கலாசார அமைச்சகத்தின் செயலாளர் கோவிந்த் மோகன் இதுகுறித்து கூறுகையில், பல ஆண்டுகாலமாக, பல்வேறு மாநிலங்களில் இருந்து திருடப்பட்டு, நாட்டிற்கு வெளியே கடத்தப்பட்ட கலாசார பாரம்பரியம் கொண்ட தொல்பொருள்களை இதுவரை இல்லாத அளவுக்கு அமெரிக்கா விரைவில் திருப்பி அனுப்பவிருப்பது இதுவே முதல்முறை.
இந்திய தொல்பொருள்களை தாயகம் கொண்டு வருவதற்கான பெரிய அளவிலான நடவடிக்கைகள் இருநாட்டு தரப்பிலும் நடந்து வருகின்றன.
தங்கள் மாகாண அருங்காட்சியகங்களில் உள்ள 1,440 பழங்கால பொருள்களை திருப்பி அனுப்ப அமெரிக்காவும் முன் வந்துள்ளது. இந்தப் பணிகளுக்காக இந்திய தொல்லியல் நிபுணர்கள் குழு ஏற்கனவே நியூயார்க் சென்றுள்ளது. அங்குள்ள இந்திய தொல்பொருள்களின் பதிவுகளைச் சரிபார்த்த பிறகு அவை நமக்குச் சொந்தமானவை என்பதற்கான ஆதாரங்கள் மற்றம் அவற்றைத் திரும்பப் பெறத் தேவையான பணிகளையும் ஆவணங்களை சரிபார்க்கும் பணிகளும் துரித கதியில் நடந்து வருவதாகவும், ஆனால், அதற்கு சிறிது நேரம் ஆகலாம் என்றும் மோகன் தெரிவித்தார்.
நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து இதுவரை, 350 தொல்பொருள்கள், பிரான்ஸ், ஜெர்மனி, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து மீட்டுக் கொண்டு வரப்பட்டுள்ளது. அமெரிக்காவிலிருந்து மட்டும் 190 தொல்பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகள் 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு தீவிரப்படுத்தப்பட்டது. பெரும்பாலான தொல்பொருள்கள், நாட்டிலிருந்து கடத்தி சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் சுபாஷ் கபூர் என்றும், அவர் தமிழகத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
from Dinamani - சிறப்புச் செய்திகள் - https://ift.tt/yxgpvQA