மேக்கேதாட்டு அணைத் திட்டம், காவிரி வனவிலங்கு சரணாலயத்தைச் சார்ந்த வனவிலங்குகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் எச்சரித்துள்ளது. காவிரி நீரைப் பகிர்ந்து கொள்வதில் கர்நாடகம், தமிழகம் இடையே நீண்ட காலமாக கசப்புணர்வு நிலவி வருகிறது. இரு மாநிலங்களுக்கு இடையே பேச்சுவார்த்தை பலனளிக்காததால், காவிரி நடுவர் மன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை நெடிய சட்டப் போராட்டம் நடந்தது. 2018-இல் உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்குப் பிறகு, 150 ஆண்டு காலமாக நிலவி வந்த காவிரி பிரச்னை ஓய்ந்தது. இந்நிலையில், காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு என்னுமிடத்தில் புதிய அணை கட்டுவதற்கு கர்நாடகம் மேற்கொண்டுள்ள முயற்சிகள், தமிழகத்தை கவலையில் ஆழ்த்தியுள்ளன. காவிரி ஆறு, கர்நாடக எல்லையைக் கடந்து, தமிழகத்தில் நுழையும் மேக்கேதாட்டு என்ற மலைப் பகுதியில் இந்த அணையை அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. கடந்த 2013-இல் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் அரசு அமைந்ததும், மேக்கேதாட்டு அணைத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான அடிப்படை வேலைகளில் இறங்கியது. இந்தத் திட்டத்துக்கு அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ், பாஜக, மஜத ஆகிய பிரதான அரசியல் கட்சிகள் ஒன்றுபட்டுள்ளன. முந்தைய பாஜக ஆட்சிக் காலத்தில் மேக்கேதாட்டு அணைத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி, மேக்கேதாட்டுவில் இருந்து பெங்களூருக்கு சித்தராமையா, டி.கே.சிவகுமார் தலைமையில் காங்கிரஸ் நடைப்பயணம் மேற்கொண்டது. முந்தைய பாஜக ஆட்சியில் மேக்கேதாட்டு திட்டத்தைச் செயல்படுத்த நிதிநிலை அறிக்கையில் ரூ.1,000 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், சட்டச் சிக்கல்களால் பணி தொடங்கவில்லை. தற்போது சித்தராமையா தலைமையில் மீண்டும் காங்கிரஸ் அரசு அமைந்துள்ளது. இவரது அரசில் நீர்வளத் துறையைக் கவனித்துவரும் துணை முதல்வர் டி.கே.சிவகுமார், ரூ.9,000 கோடி மதிப்பில், மேக்கேதாட்டு அணைத் திட்டத்தை நிறைவேற்றும் பணியை முடுக்கிவிட்டுள்ளார். பதவியேற்றதும் மேக்கேதாட்டு அணைத் திட்டம் தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் டி.கே.சிவகுமார் தெரிவிக்கையில், "தமிழக சகோதரர்கள் எங்கள் சகோதர, சகோதரிகளைப் போன்றவர்கள். இந்த விவகாரத்தில் நாம் நீதிமன்றங்களுக்கு அலைந்தது போதும். மேக்கேதாட்டு அணை நம் இரு மாநிலங்களுக்குமே நன்மை அளிக்கும். விவசாயிகளுக்குப் பாசன நீரும், சாமானிய மக்களுக்கு குடிநீரும் காவிரியிலிருந்து கிடைக்கும். நான் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். நம் இரு மாநில மக்களும் சகோதரத்துவத்துடன் வாழட்டும். ஒருவொருக்கொருவர் உதவி செய்து முன்னேறுவோம்' என்று கூறியிருந்தார். மேக்கேதாட்டு அணை குடிநீர், மின்சார உற்பத்திக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்று கர்நாடக அரசு கூறினாலும், ராமநகரம், பெங்களூரு ஊரகம், கோலார் ஆகிய மாவட்டங்களில் நீர்ப்பாசனத்துக்குப் பயன்படுத்துவதே மறைமுகத் திட்டம் என்று கூறப்படுகிறது. மேக்கேதாட்டுவில் அமைக்க உத்தேசித்துள்ள அணையில் இருந்து 4 கி.மீ. தொலைவில்தான் தமிழக எல்லை அமைந்துள்ளது. மழைக் காலங்களில் தமிழகத்துக்கு உபரியாகச் செல்லும் நீரை முழுமையாகத் தடுத்து நிறுத்தி, பெங்களூரின் குடிநீர்த் தேவை, மின் உற்பத்திக்குப் பயன்படுத்திக் கொள்வதோடு எதிர்கால நீர்ப்பாசனத் தேவையைப் பூர்த்தி செய்துகொள்வதே கர்நாடக அரசின் நோக்கமாகும். இதனால், காவிரியில் தமிழகத்துக்கு வரவேண்டிய பாசன நீர் கிடைக்காது. தவிர, பிலிகுண்டுலுவுக்கும் மேட்டூர் அணைக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள காடுகள் அழிந்து, நிலத்தடிநீர் வற்றிவிடும் அபாயம் உள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். மேக்கேதாட்டு அணையைக் கட்டுவதன் மூலம் காவிரி ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள 5,000 ஹெக்டேர் காடு அழியக்கூடிய அபாயம் உள்ளது. இதற்கு கர்நாடக வனத் துறை ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்துள்ளது. காடுகளின் பரப்பைக் குறைப்பது சுற்றுச்சூழலில் நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் நீரில் மூழ்கும் அபாயமும் உள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இந்தத் திட்டத்திற்கு மேக்கேதாட்டுவை சுற்றியுள்ள கிராம மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம்: இந்நிலையில், 2022-ஆம் ஆண்டுக்கான புலிகள் கணக்கெடுப்பு அறிக்கையை அண்மையில் வெளியிட்டிருந்த தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் (என்டிசிஏ), மேக்கேதாட்டு அணைத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், புலிகள் உள்ளிட்ட அரியவகை வனவிலங்குகளின் நடமாட்டம் நிறைந்த காவிரி வனவிலங்கு சரணாலயம் நீரில் மூழ்கி அழிந்துவிடும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளது. ஐந்நூறு பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கர்நாடக மாநில அரசால் திட்டமிடப்பட்டுள்ள மேக்கேதாட்டு அணை, 50 சதுர கி.மீ. பரப்புள்ள வனப் பகுதியை மூழ்கடித்துவிடும். இது காவிரி வனவிலங்கு சரணாலயத்துக்கு பெரும் அச்சுறுத்தலாகும். மேக்கேதாட்டு வனப் பகுதி என்பது, பிலிகிரி ரங்கநாத சுவாமி கோயில் (பிஆர்டி) புலி பாதுகாப்புக் காடு, மலேமாதேஸ்வரா மலை (எம்.எம்.ஹில்ஸ்) வனவிலங்குப் பிரிவை இணைக்கும் முக்கியமான வனவிலங்கு வழித்தடமாகும். இப்பகுதியைப் பாதுகாக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. கர்நாடக அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் முன்னாள் செயலர் ஏ.சி.லட்சுமணா கட்டுரை ஒன்றில் கூறியிருப்பதாவது: காவிரி ஆற்றுக்குக் குறுக்கே மேக்கேதாட்டு அணைத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், காவிரி வனவிலங்கு சரணாலயத்தின் 53 சதுர கி.மீ. பரப்புள்ள வளமான வனப் பகுதி மூழ்கிவிடும். பெங்களூருக்கு குடிநீர் வழங்குவதையும், தமிழகத்துக்கு வழங்கப்படும் காவிரி நீரை ஒழுங்குபடுத்துவதையும், 400 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்வதையும் இந்தத் திட்டத்தின் நோக்கமாகக் கூறுகிறார்கள். கர்நாடகம், தமிழகத்துக்கு இடையே பன்னர்கட்டா தேசியப் பூங்காவில் தொடங்கி, காவிரி வனவிலங்கு சரணாலயம், மலேமாதேஸ்வரா மலை வனவிலங்கு சரணாலயம், பிலிகிரி ரங்கநாத சுவாமி கோயில் வனவிலங்கு சரணாலயம், தமிழகத்தில் சத்தியமங்கலம் வனவிலங்கு சரணாலயம், முதுமலை புலிகள் சரணாலயம், கர்நாடகத்தின் பந்திப்பூர், நாகர்ஹொளே புலிகள் சரணாலயம், கேரளத்தின் வயநாடு வனவிலங்கு சரணாலயம் உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட காடுகள் நேர்வரிசையில் அமைந்துள்ளன. இந்தப் பிணைப்பு, மேற்கு தொடர்ச்சி மலையின் வடக்குப் பகுதி வரை நீள்கிறது. காவிரி வனவிலங்கு சரணாலயத்தில் மஹ்ஷீர் மீன், யானைகள், புலிகள் என்று வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம்-1972-இல் குறிப்பிடப்பட்டுள்ள அரிய வனவிலங்குகள் உள்ளன. "சில வனப் பகுதிகளை வளர்ச்சிப் பணிகளுக்கு ஒதுக்கினால் என்ன? மனிதத் தேவையைவிட வனங்களும் வனவிலங்குகளும் முக்கியமா?' என்று சிலர் கேட்கிறார்கள். ஆனால், வனங்களை அழிப்பது சுற்றுச்சூழல் பேரழிவுக்கு வழிவகுக்கும். கட்டுப்பாடில்லாமல் மரங்களை வெட்டினால், அரபிக் கடலில் குதித்து தற்கொலை செய்துகொள்ள வேண்டியதுதான் என்று முன்னாள் முதல்வர் தேவராஜ் அர்ஸ் கூறியதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
from Dinamani - சிறப்புச் செய்திகள் - https://ift.tt/LxS9FhU
from Dinamani - சிறப்புச் செய்திகள் - https://ift.tt/LxS9FhU