இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்றுவதற்கான தீர்மானம் செப்டம்பர் 18ஆம் தேதி கூடவிருக்கும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனை உறுதிப்படுத்தும் வகையில், புது தில்லியில் நடைபெறவிருக்கும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்களுக்கு அளிக்கும் விருந்துக்கான அழைப்பிதழில், இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்கு பதிலாக, பாரத குடியரசுத் தலைவர் என்று அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதையும் படிக்க | நிகழ்ச்சி நிரல் வெளியிட வேண்டும்: மோடிக்கு சோனியா கடிதம் இந்தியா - பாரதம் எனும் பெயர் மாற்றம் இன்றோ நேற்றோ எழுந்ததல்ல. பிரிட்டிஷ்காரர்களிடமிருந்து 1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரமடைந்தபோது, இந்தியாவுக்கென அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க 389 பேர் கொண்ட குழு ஒன்று அரசியலமைப்புச் சபை என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. இந்த சபை 1948ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தாக்கல் செய்த வரைவில் பாரதம் என்ற வார்த்தை இடம்பெறவில்லை. ஆனால், 1949ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு வரைவு மசோதா கொண்டு வரப்பட்டது. இந்த வரைவு மசோதா மீது 4 நாள்கள் விவாதம் செய்த இந்திய அரசியலமைப்புச் சபை, 1949ஆம் ஆண்டு செப்டம்பர் 18ஆம் தேதி இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1ன்படி, "இந்தியா, அதாவது பாரத், மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்" எனத் தொடங்கும் வரைவு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த நிலையில்தான், வரும் செப்டம்பர் 18ஆம் தேதி நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் தொடங்கவிருப்பதும், இந்தியா என்பது பாரதம் என பெயர் மாற்றம் செய்யப்படலாம் என்ற சந்தேகங்களும் தற்போது வேகமாகப் பரவி வருகிறது. இந்தியா என்ற பெயரை மாற்றி பாரதம் என சூட்டுவதற்கு இரு வேறு கருத்துகள் நிலவி வருகிறது. இதற்கிடையே, தங்கள் நாட்டின் பெயர்களை தாங்களே மாற்றி அமைத்துக் கொண்ட நாடுகளின் பட்டியல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி, உலக நாடுகளில் 11 நாடுகள் தங்களது பெயர்களை பல்வேறு காலக்கட்டங்களில் மாற்றியமைத்துக் கொண்டுள்ளன. அந்தப் பட்டியலில், 2022 - துர்க்கியே (பழைய பெயர் துருக்கி) துருக்கி என்ற பெயர் வான்கோழி இன பறவையுடன் தொடர்புடையது என்பதாலும், சில எதிர்மறையான கருத்துகளைக் கொண்டிருப்பதாலும் இந்தப் பெயரை அந்நாடு மாற்றியதாகக் கூறப்படுகிறது. துர்க்கியே என்ற பெயரே, அந்நாட்டு மக்களின் கலாசாரம், நாகரீகத்தை சிறப்பாக எடுத்தியம்புகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019 - மியான்மர் (பழைய பெயர் பர்மா) மியான்மர் பை என்பது அந்நாட்டின் எழுத்துப்பூர்வ மற்றும் இலக்கியப் பெயராகவும், பர்மா என்பது பேச்சு வழக்காகவும் இருந்துள்ளது. அந்நாட்டின் ராணுவ ஆட்சியின்போது மியான்மர் என்பது அதிகாரப்பூர்வ பெயராக மாற்றப்பட்டுள்ளது. 2018 - எஸ்வாத்தினி (பழைய பெயர் ஸ்வாஸிலாந்து) 2002 - டிமோர் லாஸ்டி (பழைய பெயர் ஈஸ்ட் டிமோர்) 1997 - காங்கோ ஜனநாயகக் குடியரசு (பழைய பெயர் ஜைர்) 1972 - ஸ்ரீலங்கா - (பழைய பெயர் சிலோன்) பிரட்டிஷ் ஆட்சியில் வைக்கப்பட்ட சிலோன் என்ற பெயரை மாற்றி, சிங்கள மொழியில் பிரகாசமான நிலம் என பொருள் தரும் ஸ்ரீலங்கா என்ற பெயரை அந்நாடு சூட்டிக்கொண்டது. 1935 - ஈரான் - (பழைய பெயர் பெர்சியா) 1939 - தாய்லாந்து (பழைய பெயர் சியாம்) நாடு, மக்கள் மற்றம் தேசியம் தாய் என அழைக்கப்பட வேண்டும் என்பதால், நாட்டின் பெயரை தாய்லாந்து என மாற்றியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 1949 - ஜோர்டான் (பழைய பெயர் டிரான்ஸ்ஜோர்டான்) 1957 - கானா (பழைய பெயர் கோல்டு கோஸ்ட்) 1966 - போட்ஸ்வானா (பழைய பெயர் பெச்சுவான்லாந்து) என 11 நாடுகள் இதுவரை தங்களது பெயர்களை மாற்றிக்கொண்டுள்ளன. இது மட்டுமல்லாமல், சில நாடுகள் போரின்போது பிரிந்து, ஒரு நாடு இரண்டு நாடாக பிரியும் போதும் புதிய பெயர்கள் சூட்டப்பட்ட வரலாறும் இருந்துள்ளது.
from Dinamani - சிறப்புச் செய்திகள் - https://ift.tt/5IzqJZa
from Dinamani - சிறப்புச் செய்திகள் - https://ift.tt/5IzqJZa