இரண்டாம் உலகப் போரின்போது பசிபிக் பெருங்கடலில் மூழ்கிய ஜப்பானின் இரு விமானந் தாங்கிக் கப்பல்களையும் அமெரிக்காவின் ஒரு கப்பலையும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மூழ்கிய ஜப்பானிய கப்பலை முதல்முறையாக விடியோ பதிவு செய்துள்ளனர்.
மிட்வே சண்டை எனப்படும் இந்தத் தாக்குதலில் ஜப்பானின் இவ்விரு விமானந்தாங்கிக் கப்பல்களும் மூழ்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்துதான், ஜப்பான் வசமிருந்த பசிபிக் பெருங்கடலின் கட்டுப்பாடு அமெரிக்கப் படைகள் வசம் மாறியது.
1942 ஜூனில் நடந்த சண்டையில் மூழ்கடிக்கப்பட்ட அகாகி, காகா என்ற இரு ஜப்பானிய கப்பல்களும் அமெரிக்காவின் யுஎஸ்எஸ் யார்க்டவுன் என்ற கப்பலும் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4.8 கிலோ மீட்டர் ஆழத்தில் கிடப்பதைத் தற்போது கடலடித் தொல்லியல் ஆய்வில் நீர்மூழ்கிகள் கண்டறிந்து படம் பிடித்துள்ளன.
கப்பல்களின் கடைசி நேரத்தில் இந்தச் சண்டையின்போது என்ன நடந்தது என்பதைத் தெரிந்து, தெளிந்துகொள்வதில் தற்போதைய ஆய்வின்போது எடுக்கப்பட்ட தெளிவான விடியோக்கள் உதவலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்தச் சண்டையின்போது காயமுற்று, மூட்டு விலகிய தோளுடன் 6 மணி நேரத்துக்கும் மேலாக நீந்தித் தப்பிப் பிழைத்த - சில வாரங்களுக்கு முன் 101-வது பிறந்த நாளைக் கொண்டாடிய - அமெரிக்க கடற்படை வீரரான ஜூலியன் ஹாட்ஜஸ், இந்த விடியோவைப் பார்க்கும்போது கண்ணீர் விட்டழுதார்.
இந்த மூன்று கப்பல்களும் கடலுக்குள் கிடப்பது ஏற்கெனவே கண்டறியப்பட்டுள்ளது. எனினும், அப்போது குறைந்த அளவு புகைப்படங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. தற்போது விரிவான ஆய்வுடன் தெளிவான விடியோ பதிவுகளும் செய்யப்பட்டுள்ளன.
மூன்று முழு நாள்கள் இந்தப் பகுதியிலிருந்து முறைப்படி இந்த ஆய்வைக் குழுவினர் மேற்கொண்டதாக ஓஷன் எக்ஸ்ப்ளரேஷன் ட்ரஸ்ட் முதன்மை விஞ்ஞானி டேனியல் வாக்னர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆய்வை நேரலை ஒளிபரப்பின் மூலம் உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், வரலாற்றாளர்கள் மற்றும் வல்லுநர்கள் பார்த்தனர்.
அமெரிக்காவின் பேர்ல் துறைமுகத்தை ஜப்பான் கப்பற்படை தாக்கித் தகர்த்த ஆறு மாதங்களுக்குப் பிறகு இந்த மிட்வே சண்டை நடைபெற்றது.
அமெரிக்காவுக்கும் ஆசியாவுக்கும் இணையான தொலைவில் பசிபிக் பெருங்கடலில் உள்ள மிட்வே அடால் என்ற குட்டித் தீவுகளில் இருந்த அமெரிக்க ரோந்து விமான தளத்தைத் தாக்கித் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரவும் அமெரிக்காவின் பசிபிக் கடற்படைப் பிரிவிலுள்ள கப்பல்களை அழிக்கவும் ஜப்பானிய கடற்படை திட்டமிட்டது.
ஆனால், இதுதொடர்பான தகவல் தொடர்புகளை அமெரிக்கப் படையினர் ஒட்டுக்கேட்டு முன்னதாகவே அறிந்துகொண்டுவிட்டனர்.
இதைத் தொடர்ந்து, மிட்வே அடாலிலிருந்து சுமார் 320 கிலோ மீட்டர் தொலைவுக்கு 5 நாள்கள் இந்தச் சண்டை நடைபெற்றது. நான்கு விமானந் தாங்கிக் கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டதுடன், 200-க்கும் அதிகமான ஜப்பானிய விமானங்களை அமெரிக்கப் படை சுட்டு வீழ்த்தியது. மூவாயிரத்துக்கும் மேற்பட்ட ஜப்பானிய வீரர்கள் கொல்லப்பட்டனர்.
அமெரிக்கத் தரப்பில் 300-க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்தனர். போரில் மிக மோசமாகச் சேதமுற்ற யார்க்டவுன் விமானந்தாங்கிக் கப்பல், சுமார் 150 விமானங்களுடன் பழுதுபார்க்கக் கொண்டுசெல்லப்பட்டபோது ஜப்பானிய நீர்மூழ்கியால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது.
from Dinamani - சிறப்புச் செய்திகள் - https://ift.tt/9NnSb7T