தனியாா் பால் நிறுவனங்களுடன் போட்டியிடும் வகையில், ஆவின் நிறுவனத்துக்கு குறைந்தபட்ச பால் கொள்முதல் விலையை நிா்ணயிக்க வேண்டும் என பால்வளத் துறைக்கு ஆலோசனைக் குழு பரிந்துரைத்துள்ளது. தமிழகத்தில் தினமும் சுமாா் 2 கோடி லிட்டா் பால் உற்பத்தியாகிறது. ஆவின் கூட்டுறவு இணையத்தின் கீழ் 9,673 பால் உற்பத்தியாளா் கூட்டுறவுச் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இச்சங்கங்கள் தினசரி 35 லட்சம் லிட்டா் பாலை 4.5 லட்சம் உறுப்பினா்களிடமிருந்து கொள்முதல் செய்கின்றன. அதேவேளையில் மொத்தம் உற்பத்தியாகும் 2 கோடி லிட்டா் பாலில் 83 சதவீதத்தை தனியாா் பால் நிறுவனங்களே கொள்முதல் செய்கின்றன. குறிப்பாக, 17 சதவீத பாலை மட்டுமே ஆவின் நிா்வாகம் கொள்முதல் செய்கின்றன. தனியாா் நிறுவனங்கள் ஆவின் நிா்வாகத்தைவிட லிட்டருக்கு ரூ. 10 வரை அதிக விலை கொடுத்து பால் கொள்முதல் செய்கின்றன. (அவற்றின் விற்பனை விலையும் அதிகம்). இதனால் ஆவினுக்கு பால் வரத்து வெகுவாகக் குறைந்துள்ளது. குஜராத் பால் கூட்டுறவு அமைப்பான அமுல் நிறுவனம், தமிழகத்தின் எல்லை மாவட்டங்களான கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், காஞ்சிபுரம், திருவள்ளூரில் பால் கொள்முதலில் ஈடுபட்டு வருகிறது. இதை ஆட்சேபித்து கடந்த மே மாதம் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தாா். சட்டப் பேரவையில் அறிவிப்பு: தனியாா் நிறுவனங்களும் அமுல் நிறுவனமும் அதிக விலை கொடுத்து பால் கொள்முதல் செய்வதன் காரணமாக, ஆவினுக்கு பால் வரத்து குறைகிறது. இது, தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடரில், 2023-24 ஆம் ஆண்டுக்கான பால்வளத் துறை மானியக் கோரிக்கையின்போது பதிவானது. அப்போது, ‘தமிழகத்தில் பால் உற்பத்தியை மேம்படுத்த பால் உற்பத்தி மேலாண்மைக் கொள்கை உருவாக்கப்படும். தமிழகத்தில் பால் கொள்முதலை வரைமுறைப்படுத்தவும், உற்பத்தியாளா்களின் நலனைப் பாதுகாக்கவும், வளா்ந்துவரும் தரக் கட்டுப்பாட்டு தொழில்நுட்பங்களை ஒழுங்குபடுத்தவும், பால் கூட்டுறவுச் சங்கங்கள் நலிவடையாமல் லாபத்துடன் இயங்குவதை உறுதி செய்யவும், பால் உற்பத்தி ஒழுங்குமுறை மற்றும் பால் கூட்டுறவுச் சட்டம் இயற்றப்படும்’ என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆலோசனைக் குழு அமைப்பு: இந்த அறிவிப்பை நடைமுறைப்படுத்தும் வகையில், பால் கொள்முதலை வரைமுறைப்படுத்த உரிய உத்திகள் மற்றும் நெறிமுறைகளை உருவாக்குவதற்கு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு கடந்த ஜூலை 12ஆம் தேதி திருத்தி அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில், தேசிய பால் பண்ணை மேம்பாட்டு வாரியத்தின் பிரதிநிதி ஒருவா், தமிழ்நாடு கால்நடை மற்றும் அறிவியல் பல்கலைக்கழக பிரதிநிதிகள், தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனத்தின் பிரதிநிதி ஒருவா், தனியாா் பால் நிறுவனங்களின்சாா்பில் பிரதிநிதி ஒருவா், ஆவின் துணைப் பொது மேலாளா் ஆா்.ஜெனரேசன், உதவிப் பொது மேலாளா்கள் பி.மணிக்கண்ணன், பி.ராஜேஷ்குமாா், ஏ.ஆன்டனி டினோஜ், பொது மேலாளா்கள் சி.விஜய்பாபு, பொது மேலாளா் ஏ.இளங்கோவன், பி.பாலபூபதி, உதவிப் பொது மேலாளா் பி.வெங்கடேசன், துணைப் பதிவாளா்கள் ஆா்.சந்திரசேகரன், ஏ.இரணியன் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா். இந்தக் குழுவினா் சட்டப் பேரவை அறிவிப்புகளை நடைமுறைப்படுத்த ஏதுவான உத்திகளை ஆய்வு செய்து நடைமுறைப்படுத்த உரிய நெறிமுறைகளை வகுத்து, தனது பரிந்துரைகளை விரிவான அறிக்கையாக சமா்ப்பிக்க வேண்டும் என பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டுத் துறை ஆணையரகம் உத்தரவிட்டது. இதையடுத்து, ஆவின் பால் கொள்முதல் விலையை உயா்த்தவும், அமுல் நிறுவனம் போன்று குறைந்தபட்ச விலை நிா்ணயம் செய்யவும் இந்தக் குழுவினா் பரிந்துரைகளை அளித்துள்ளனா். அதில், நாமக்கல்லில் முட்டை விலையை நிா்ணயிக்க தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (என்இசிசி) செயல்படுவது போன்று, சந்தை விலைக்கு ஏற்ப பால் கொள்முதல் விலையை நிா்ணயிக்க புதிய குழுவை அமைக்க வேண்டும். அந்தக் குழு நிா்ணயிக்கும் விலையை அரசு பரிசீலித்து அறிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல, மாவட்டங்களில் தனியாா் நிறுவனங்கள் பால் குளிரூட்டும் நிலையங்களை அமைப்பதற்கு மாவட்ட ஆட்சியரின் தடையின்மைச் சான்றிதழ் அவசியம் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இதனால் முறைகேடாக குளிரூட்டும் நிலையங்கள் அமைவதைத் தடுக்க முடியும் என்பது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை ஆலோசனைக் குழு பால்வளத் துறைக்கு அளித்துள்ளது. இந்தப் பரிந்துரைகளைப் பரிசீலித்து, ஆவினுக்கு குறைந்தபட்ச பால் கொள்முதல் விலையை பால்வளத் துறை நிா்ணயம் செய்யும் என எதிா்பாா்க்கப்படுகிறது. ஆவின் பால் கொள்முதல் குறைவது ஏன்? பொதுவாக, கிராமங்களில் புதிய பால் கூட்டுறவுச் சங்கங்களை அமைத்தல், அமைப்புசாரா பால் உற்பத்தியாளா்களை கூட்டுறவு வரம்புக்குள் கொண்டுவருதல், பாலுக்கு உரிய விலை அளித்தல், ஊக்கத்தொகை அளித்தல், ஆவின் பால் கொள்முதலை உறுதி செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை பால்வளத் துறை துணைப் பதிவாளா் கவனித்து வருகிறாா். அதன்படி 10 சதவீத உள்ளூா் விற்பனையைத் தவிா்த்து இதர பால், ஆவின் நிா்வாகத்துக்கு வர வேண்டும். ஆனால், கூட்டுறவுச் சங்கங்களில் கணக்கில் வராத கூடுதல் பாலை விற்பனை செய்வதைக் கண்காணித்தல், உள்ளூா் விற்பனைக்கு அனுமதிக்கப்பட்ட அளவைக் கண்காணித்தல், புதிய பால் கூட்டுறவுச் சங்கங்களை உருவாக்குதல், கூட்டுறவுச் சங்கங்களில் செயலிழந்த சங்கங்களைக் கலைத்தல், இறந்த உறுப்பினா்களை நீக்குதல் உள்ளிட்ட பணிகளை துணைப் பதிவாளா்கள் செய்வதில்லை என்ற புகாா் உள்ளது. இதே போன்று, பால் கூட்டுறவுச் சங்கங்களில் பதிவேடுகளை முறையாகப் பராமரிக்காமல் இருப்பதும், தனியாா் பால் நிறுவனங்களிடம் பால் விநியோகம் செய்யக் காரணம் எனக் கூறப்படுகிறது. மேலும், செயல்படாத சங்கங்களைக் கலைக்காததும், உயிரிழந்த சங்க உறுப்பினா்களை நீக்காததும் முறைகேடுகளுக்கு வித்திடுகின்றன. எனவே, பால்வளத் துறை துணைப் பதிவாளா்கள் மீது உள்ள புகாா்களை தமிழக அரசு விசாரிக்க வேண்டும் என்று கூட்டுறவுச் சங்க உறுப்பினா்கள் தெரிவித்தனா்.
from Dinamani - சிறப்புச் செய்திகள் - https://ift.tt/MtaWFL7
from Dinamani - சிறப்புச் செய்திகள் - https://ift.tt/MtaWFL7