https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2023/6/13/w600X390/eps.JPGஅங்கீகாரம் அளித்த மதுரை மாநாடு

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு அதிமுகவின் அரசியல் அத்தியாயம் முடிந்தது என்பது மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் அப்போதைய எண்ண ஓட்டமாக இருந்தது. ஆனால், பல்வேறு போராட்டங்களுக்கிடையே அதிமுகவின் பொதுச் செயலர் பதவியை அடைந்து, அந்தக் கட்சியை மாநிலக் கட்சியிலிருந்து தேசியக் கட்சி என்றளவுக்கு உயர்த்தினார் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அதற்கு முழு முதல் காரணம், தொண்டர்கள் அவர் மீது கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையே ஆகும்.  ஏறத்தாழ எம்.ஜி.ஆரை போன்றே தனக்கு அடுத்து, கட்சிக்குத் தலைமை யார் என்பதை அடையாளம் காட்டாமலேயே இருந்தார் ஜெயலலிதா. ஆனால், "100 ஆண்டுகள் ஆனாலும் அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது' என சூளுரைத்தார். அப்போது, தொண்டர்களை சோர்வடையாமல் இருக்கச் செய்யவே ஜெயலலிதா இவ்வாறு கூறினார் என்பது பிற கட்சிகளின் கருத்தாக இருந்தது. "அதிமுக என்பது ஓர் சுழலும் பம்பரம்; ஜெயலலிதா இல்லாவிட்டால் அது சுழலாது' என்றனர் அரசியல்நோக்கர்கள். இதேபோல, ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக வரலாறு காணாத சோதனைகளைச் சந்தித்தது.அதிமுக தலைமையை சசிகலா ஏற்றது; எதிர்பாராத வகையில் ஓ.பன்னீர்செல்வம் விலக்கப்பட்டு எடப்பாடி கே. பழனிசாமி ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தப்பட்டது; ஓ. பன்னீர்செல்வம் விலகி நின்று தர்மயுத்தம் நடத்தியது; அடுத்தகட்டமாக சசிகலாவின் தலைமையிலிருந்து மாவட்டச் செயலாளர்கள் விலகியது; முன்னெப்போதும் இல்லாத நிலையில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என அதிமுக இரட்டைத் தலைமையில் செயல்பட்டது; பிறகு கட்சிக்கு ஒற்றைத் தலைமையே தேவை என மாவட்டச் செயலாளர்கள் போர்க்கொடி தூக்கியது;  அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி கே. பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது; அவருக்குத் தேர்தல் ஆணைய அங்கீகாரம் கிடைப்பதில் நீடித்த தாமதம் எனப் பல எதிர்பாராத நிகழ்வுகளை அதிமுக கடந்த ஆறரை ஆண்டுகளாக எதிர்கொண்டு வந்தது.  எடப்பாடி கே. பழனிசாமியின் தலைமையை அந்தக் கட்சியின் பொதுக் குழு ஏற்றது. தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் அங்கீகரித்தனர்.  தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. ஆயினும், கட்சியின் ரத்த நாளங்களான தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை அங்கீகரிக்கின்றனரா என்பது கடந்த 19}ஆம் தேதி வரை பலருக்கும் கேள்விக்குறியாகத்தான் இருந்தது. இதேபோன்று, முக்குலத்தோர் சமுதாயத்தினர் அதிகம் வாழும் தென் மாவட்டங்களில் அதிமுக மிக அதிக பலம் வாய்ந்த கட்சியாக கருதப்படுவது வழக்கம். ஆனால், எடப்பாடி கே. பழனிசாமி ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் அந்த பிம்பத்தில் விரிசல் ஏற்படத் தொடங்கியது.  இதையடுத்து, சசிகலா, டி.டி.வி. தினகரன் அதிமுகவிலிருந்து விலக்கப்பட்டதும், எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு அறிவித்ததும் மேலும் விரிசலை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஓ. பன்னீர்செல்வமும், டி.டி.வி. தினகரனும் கைகோத்ததும், எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அதிமுகவுக்கு தென் மாவட்டங்களில் உள்ள செல்வாக்கு குறித்த சந்தேகத்தை வலுப்படுத்தியது. இந்த நிலையில்தான், எடப்பாடி கே. பழனிசாமி தலைமைக்கு எதிராக இருந்த அத்தனை விமர்சனங்களையும், ஊகங்களையும் தகர்ப்பதாக அமைந்தது மதுரை வலையங்குளத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 20) நடைபெற்ற அதிமுகவின் பொன் விழா மாநாடு.  ஏறத்தாழ 65 ஏக்கர் பரப்பில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த விழாப் பந்தலில் சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான எண்ணிக்கையில் பரப்பப்பட்டிருந்த நாற்காலிகள் அனைத்திலும் தொண்டர்கள்; வாட்டி வதைத்த வெயிலில் இருந்து விலகி, நிழலை நாடக்கூட மரங்கள் இல்லாத பொட்டல்காட்டில் அமைக்கப்பட்டிருந்த இந்த மாநாட்டுத் திடல் முழுவதும் தொண்டர்கள்; வெளியில் வெயிலிலும் தொண்டர்கள் என்பது இந்தக் காலத்தில் கற்பனைக்கும் எட்டாத விஷயம்.  1972ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட அதிமுகவுக்கு அரசியல் அங்கீகாரத்தையும், இரட்டை இலை சின்னத்தையும் அளித்தது, அப்போதைய ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்துக்குட்பட்ட திண்டுக்கல் மக்களவைத் தொகுதி இடைத் தேர்தல் வெற்றியே ஆகும். 1973ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மாயத்தேவர், மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் தனக்காகத் தேர்ந்தெடுத்த சுயேச்சை சின்னமே, அதிமுகவின் சின்னமான இரட்டை இலை. அதிமுக தொடங்கப்பட்ட 6 மாதங்களில் வெற்றிக் கணக்கை தொடங்கிவைத்ததுடன், கட்சிக்கு இரட்டை இலை என்ற சின்னத்தையும் பெற்றுத்தந்த மதுரை மாவட்டம், தற்போது எடப்பாடி கே. பழனிசாமி தலைமைக்கான அங்கீகாரத்தை பொன் விழா மாநாட்டின் மூலம் வழங்கியுள்ளது. அதிமுக பொன் விழா மாநாட்டுக்கு ஏறத்தாழ 2 கி.மீ. தொலைவுக்கு முன்பாக தடுக்கப்பட்ட வாகனங்களில் இருந்து இறங்கி, சுட்டெரிக்கும் வெயிலில் நடந்து வந்த கட்சியின் கடைக்கோடி தொண்டர்கள் ஒவ்வொருவரின் வருகையும், எடப்பாடி கே. பழனிசாமியின் தலைமைக்குக் கிடைத்த அங்கீகாரம். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி ஆட்சிப் பொறுப்பேற்ற போது, அவர் தலைமையிலான அரசு 10 நாள்கள்கூட நீடிக்காது எனப் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கருத்துத் தெரிவித்தனர். ஆனால், தனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை முறையாகப் பயன்படுத்தி நான்கரை ஆண்டுகால ஆட்சிக் காலத்தை முழுமையாக நிறைவு செய்தார் எடப்பாடி பழனிசாமி.  கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்தபோது, இனி அதிமுக அவ்வளவுதான்; மூன்று, நான்காக சிதறிவிடும் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக இருந்தது. ஆனால், அவர்களது ஊகங்களுக்கும் தனது அரசியல் சாதுர்யத்தால் முற்றுப்புள்ளி வைத்தார் எடப்பாடி பழனிசாமி. கட்சியில் நிர்வாகிகள் மட்டுமல்ல, தொண்டர்களும் தனது பக்கம்தான் என்பதை மதுரை அதிமுக மாநாட்டின் மூலம் சாமர்த்தியமாக நிரூபித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி என்றால் மிகையல்ல.

from Dinamani - சிறப்புச் செய்திகள் - https://ift.tt/gvp1DwW

Post a Comment

Previous Post Next Post