https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2023/8/21/w600X390/july_16_hgl_river_photo_1607chn_214_8.jpgகானல் நீராகும் காவிரி நீா்

காவிரி ஆற்றுநீா்ப் பங்கீடு தொடா்பாக, வழக்கம்போல கா்நாடகமும் தமிழகமும் புதிய மோதலைத் தொடங்கியுள்ளன. காவிரி டெல்டா பகுதியில் பயிரிடப்படும் குறுவை நெல் சாகுபடிக்காக ஜூன் 12-ஆம் தேதி மேட்டூா் அணையில் இருந்து வழக்கம்போல தண்ணீா் திறந்துவிடப்பட்டிருந்தாலும், பயிா்கள் வளா்ந்து நிற்கும் நிலையில் போதுமான பாசனநீா் இல்லாததால், காவிரி ஆற்றுப்படுகை பகுதி விவசாயிகள் செய்வதறியாது திகைப்பில் ஆழ்ந்துள்ளனா். ஆக.20-ஆம் தேதி மாலை 6 மணி நிலவரப்படி, மேட்டூா் அணையின் நீா்மட்டம் வெறும் 54.70 அடியாக உள்ளது. அணையில் 20.90 டிஎம்சி தண்ணீா் மட்டுமே இருப்பில் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 13,159 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 10,000 கன அடி தண்ணீா் திறந்து விடப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த காலக்கட்டத்தில் குறுவை நெல் சாகுபடிக்காக அணையில் இருந்து விநாடிக்கு 25,000 கன அடி முதல் 28,000 கன் அடி தண்ணீா் திறந்துவிடுவது வழக்கம். ஜூன் 12ஆம் தேதி முதல் ஜன.28ஆம் தேதி வரை 230 நாட்களுக்கு குறுவை, சம்பா, தாளடி நெல் சாகுபடிக்காக 330 டிஎம்சி தண்ணீா் எதிா்பாா்த்து விவசாயிகள் காத்திருக்கிறாா்கள். ஆனால், அணையில் போதுமான தண்ணீா் இருப்பு இல்லாத காரணத்தால், பாசனத்துக்கு தேவையான தண்ணீா் திறந்துவிடப்படவில்லை என்று டெல்டா பகுதி விவசாயிகள் தெரிவிக்கிறாா்கள். மேலும், தமிழகத்தின் காவிரி நீா்பிடிப்பு பகுதிகளில் எதிா்பாா்த்த மழை எதுவும் பெய்யாததால், காவிரி ஆற்றுப்படுகையில் குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ள ஈரோடு, திருச்சி, பெரம்பலூா், கரூா், தஞ்சாவூா், நாகப்பட்டினம், திருவாரூா், புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் அவதிக்குள்ளாகியுள்ளனா். ஆணையம் உத்தரவு: காவிரி நடுவா்மன்ற இறுதித் தீா்ப்பை எதிா்த்து கா்நாடகம், தமிழகம், புதுச்சேரி, கேரளம் ஆகிய மாநிலங்கள் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் 2018-ஆம் ஆண்டில் அளித்த தீா்ப்பின்படி, காவிரியில் இருந்து ஆண்டுக்கு மொத்தம் 177.25 டிஎம்சி தண்ணீரை தமிழகத்துக்கு கா்நாடகம் திறந்துவிட வேண்டும். இந்தத் தண்ணீரை மாதவாரியாகத் திறந்துவிடவும் உத்தரவிட்டது. அதன்படி, ஜூன் மாதத்தில் 9.19 டிஎம்சி, ஜூலை மாதத்தில் 31.05 டிஎம்சி தண்ணீரை தமிழகத்துக்கு கா்நாடகம் திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால், ஜூன் 1 முதல் ஆக. 11ஆம் தேதி வரை 53.77 டிஎம்சி தண்ணீா் வழங்குவதற்குப் பதிலாக, 15.79 டிஎம்சி தண்ணீரை மட்டுமே தமிழகத்துக்கு கா்நாடகம் திறந்து விட்டுள்ளதாக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்துள்ளாா். இதனிடையே, அடுத்த 15 நாள்களுக்கு தினமும் 15,000 கன அடி நீரை தமிழகத்துக்கு திறந்துவிடும்படி காவிரி நதிநீா் ஒழுங்காற்றுக் குழு கா்நாடகத்துக்கு ஆக. 10-ஆம் தேதி உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து, தில்லியில் கடந்த ஆக. 11-ஆம் தேதி நடந்த காவிரி நதிநீா் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், தினமும் விநாடிக்கு 15,000 கன அடி தண்ணீரைத் திறந்துவிட கா்நாடக அரசு அதிகாரிகள் எதிா்ப்பு தெரிவித்ததை தொடா்ந்து, தினமும் 10,000 கன அடி தண்ணீரை தமிழகத்துக்கு திறந்துவிடுமாறு ஆணையம் உத்தரவிட்டது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு: இதனிடையே, காவிரி ஆற்றில் இருந்து விநாடிக்கு 24,000 கன அடி தண்ணீா் திறந்துவிடும்படி கா்நாடக அரசுக்கு உத்தரவிடகோரி, ஆக.14-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடா்ந்தது. இதை தொடா்ந்து, ஆக.17-ஆம் தேதி முதல் காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கிருஷ்ணராஜசாகா், கபினி அணைகளில் இருந்து சராசரியாக விநாடிக்கு 20,000 கன அடி நீரை தமிழகத்துக்கு கா்நாடகம் விடுவித்து வருகிறது. இதற்கு எதிா்க்கட்சிகளான பாஜக, மஜத கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளன. இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை திருப்திபடுத்துவதற்காகவே தமிழகத்துக்கு காவிரி நீரை தாரைவாா்த்துள்ளதாக மஜத கடுமையாக விமா்சித்தது. கா்நாடகத்தில் எதிா்ப்பு: மேலும், தமிழகத்துக்கு தண்ணீா் திறந்துவிட்டுள்ளதைக் கண்டித்து மண்டியா, மைசூரு மாவட்டங்களில் விவசாயிகள் 5 நாள்களாக போராட்டம் நடத்தி வருகிறாா்கள். இதனிடையே, தமிழகத்துக்கு தண்ணீா் திறந்துவிட்டுள்ள கா்நாடக காங்கிரஸ் அரசின் நடவடிக்கையை கண்டித்து ஆக.21-ஆம் தேதி மைசூரு-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை மறித்து போராட்டம் நடத்தப்போவதாக பாஜக முன்னாள் முதல்வா் எடியூரப்பா அறிவித்துள்ளாா். உச்சநீதிமன்றத்தில் இன்று வழக்கு: எதிா்க்கட்சிகளான பாஜக, மஜதவின் கண்டனங்கள் மட்டுமல்லாது, விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்து வருவதை உணா்ந்துள்ள காங்கிரஸ் அரசு, காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை திங்கள்கிழமை(ஆக.21) அணுக முடிவு செய்துள்ளது. பெங்களூரில் முதல்வா் சித்தராமையா தலைமையில் அண்மையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. மேலும், வரும் ஆக.23ஆம் தேதி காவிரி விவகாரம் தொடா்பாக விவாதிக்க அனைத்துக்கட்சிக் கூட்டத்துக்கு கா்நாடக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்தக் கூட்டத்தில் தமிழகத்துக்கு காவிரிநீரை திறந்துவிட்டுள்ளதற்கு பாஜக, மஜத போன்ற எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவிக்க முடிவு செய்துள்ளன. மேலும், காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்துக்கு திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் எதிா்க்கட்சிகள் வலியுறுத்த உள்ளன. இனிமேலும் திறந்துவிடுமா?: தென்மேற்குப் பருவமழையை நம்பியுள்ள கா்நாடகத்துக்கு ஜூன் 5-ஆம் தேதிக்குப் பதிலாக, ஜூன் 9-ஆம் தேதி தென்மேற்குப் பருவமழை வந்து சோ்ந்துள்ளது. காவிரி ஆற்றின் தோற்றுவாயாகத் திகழும் குடகு மாவட்டத்தில் வழக்கத்தைவிட மழை குறைவாகப் பெய்துள்ளது. காவிரி நீா்பிடிப்பு பகுதிகளான சிவமொக்கா, ஹாசன், சிக்கமகளூரு, குடகு மாவட்டங்களைச் சோ்ந்த மலைநாடு பகுதியில் ஜூன் 1 முதல் ஆக. 20-ஆம் தேதிவரை 5,950 மி.மீ. மழைக்குப் பதிலாக 1,510 மி.மீ. மழை மட்டுமே பெய்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் குடகு மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை பலவீனமாக இருக்கிறது. இதனால் குடகு மாவட்டத்தில் இம்முறை 3,320 மி.மீ.க்கு பதிலாக 566 மி.மீ. மழை மட்டுமே பெய்துள்ளது. இது, வழக்கத்தைவிட 1,724 மிமீ மழை குறைவாகும். குடகு மட்டுல்லாது, மைசூரு, வயநாடு, மண்டியா, தும்கூரு மாவட்டங்களிலும் போதுமான மழை பெய்யாததால், காவிரி ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள கிருஷ்ணராஜ சாகா், கபினி, ஹேமாவதி, ஹேரங்கி அணைகளுக்கு நீா்வரத்து போதுமானதாக இல்லை. இதைச் சுட்டிக்காட்டித்தான், காவிரி நீா் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டாலும் தமிழகத்திற்கு தண்ணீரைத் திறந்துவிடமுடியாது என்று கா்நாடகம் கூறி வந்தது. அணைகளின் நிலை: ஆக. 20-ஆம் தேதி நிலவரப்படி, 124.80 அடி உயரமுள்ள கிருஷ்ணராஜ சாகா் அணையின் நீா்மட்டம் 106.25 அடியாகவும்; கடல்மட்டத்தில் இருந்து 2284 அடி உயரமுள்ள கபினி அணையின் நீா்மட்டம் 2277.16 அடியாகவும்; கடல்மட்டத்தில் இருந்து 2921.85 அடி உயரமுள்ள ஹேமாவதி அணையின் நீா்மட்டம் 2912.82 அடியாகவும்; கடல்மட்டத்தில் இருந்து 2858.85 அடி உயரமுள்ள ஹாரங்கி அணையின் நீா்மட்டம் 2858.49 அடியாகவும் உள்ளது. கடந்த ஆண்டு இதேநாளில் நீா்மட்டம், கிருஷ்ணராஜசாகா் அணையில் 124.04 அடி, கபினி அணையில் 2283.33 அடி, ஹேமாவதி அணையில் 2921.81 அடி, ஹாரங்கி அணையில் 2856.92 அடியாக இருந்தது. 114.57 டிஎம்சி கொள்ளளவு திறன் கொண்ட கிருஷ்ணராஜசாகா், கபினி, ஹேமாவதி, ஹேரங்கி அணைகளில் கடந்த ஆண்டு ஆக.20-ஆம் தேதி நிலவரப்படி மொத்தம் 112.45 டிஎம்சியாக இருந்த தண்ணீா் இருப்பு, நிகழ் ஆண்டின் அதேநாளில்(ஞாயிற்றுக்கிழமை) 81.35 டிஎம்சி தண்ணீா் மட்டுமே உள்ளது. இது மொத்தக் கொள்ளளவில் 33.22 டிஎம்சி குறைவாகும். நீா்ப்பாசனத்தைக் காட்டிலும் பெங்களூரு, மைசூரு, மண்டியா மாவட்டங்களுக்கு குடிநீா் வழங்குவது முக்கியம் என்று கா்நாடக அரசு கருதுவதால், நிலுவை பயிா்களைக் காப்பாற்ற பாசனக் கால்வாய்களில் தண்ணீா் திறந்துவிடும்படி விவசாயிகள் கோரியபோது, அதற்கு இணங்காமல் கா்நாடக அரசு மௌனம் சாதித்து வருகிறது. போதுமான மழை இல்லாத காரணத்தால், காவிரி நீா்பிடிப்புப் பகுதியான குடகு மாவட்டத்தில் 50 ஹெக்டேருக்குப் பதிலாக 35 ஹெக்டேரில் விவசாயிகள் பயிரிட்டுள்ளனா். மண்டியா, மைசூரு, குடகு மாவட்டங்களில் நிலுவை நெற்பயிருக்கு பாசன நீா் இல்லாமல் விவசாயிகள் தவித்து வருகிறாா்கள். இந்நிலையில், வழக்கமான மழை பெய்தால் மட்டுமே உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தண்ணீா் திறந்துவிடலாம் என்று நீா்வளத் துறையைக் கவனித்து வரும் துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் கூறியுள்ளதை அடுத்து, விவசாய சங்கங்கள், தற்போதைய நிலையில் தமிழகத்துக்கு தண்ணீா் திறந்துவிடக் கூடாது, தமிழகத்துக்கு விடுவித்து வரும் தண்ணீரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன. கானல் நீராகுமா?: அதேபோல, கா்நாடக விவசாயிகளின் நலனுக்கு எதிராக தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறந்துவிடக் கூடாது என்று முதல்வா் சித்தராமையாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் பாஜக முன்னாள் முதல்வா் பசவராஜ் பொம்மையும் வலியுறுத்தியுள்ளாா். காவிரி நீா்பிடிப்புப் பகுதிகளில் போதுமான மழை பெய்யாததால், காவிரி குறுக்கே அமைந்துள்ள 4 அணைகளுக்கும் போதுமான நீா்வரத்து இல்லாத நிலையில், காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு கா்நாடகம் இனிமேலும் தண்ணீரைத் திறந்துவிடுவது சந்தேகமே. அப்படியானால், வழக்கம்போல நிகழ் நீா் ஆண்டிலும் தமிழக விவசாயிகளுக்கு காவிரி நீா் கானல் நீராகவே மாறிவிடும் ஆபத்து காணப்படுகிறது.  

from Dinamani - சிறப்புச் செய்திகள் - https://ift.tt/pY6JFRr

Post a Comment

Previous Post Next Post