அமைச்சர் செந்தில் பாலாஜியைத் திடீரென அமைச்சர் பதவியிலிருந்து நீக்கி, பின்னர் சில மணி நேரங்களில் நிறுத்தியும் வைத்திருக்கிறார் ஆளுநர் ரவி. தமிழகத்தில் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு இதய அறுவைச் சிகிச்சைக்குப் பின் மருத்துவமனையில் இருக்கும் துறை இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜி. மாநில அரசு இணையதளத்திலும் துறை இல்லாத அமைச்சர் என்பதாகப் பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. துறை இல்லாத அமைச்சர்கள் பதவி என்பது இந்தியாவில் புதிதல்ல. தமிழகத்திலும் உடல்நலக் குறைவு காரணமாக பலர் துறை இல்லாத அமைச்சர்களாகப் பதவி வகித்துள்ளனர். தற்போதைய அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது பணமோசடி செய்ததாக புகார்கள் எழுந்தது. இந்த விசாரணை முடிவில் கடந்த ஜூன் 13ஆம் தேதி அமலாக்கத் துறையினரால் அவர் கைது செய்யப்பட்டார். அவர் கவனித்து வந்த மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறைகள், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் சு. முத்துசாமி ஆகியோருக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன. துறை மாற்றத்திற்கு ஒப்புதல் அளித்த தமிழக ஆளுநர் ரவி, குற்றவியல் வழக்கு இருப்பதால் செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர முடியாது என்று கூற, தொடர்ந்து செந்தில் பாலாஜி துறை இல்லாத அமைச்சராக இருப்பார் என்று என்று தமிழக அரசு அறிவித்தது. நேற்று, வியாழக்கிழமை இரவு அவரை நீக்கியும், பின்னர் நிறுத்திவைத்தும் அறிவித்துள்ளார் ஆளுநர் ரவி. துறை இல்லாத அமைச்சர் பதவி அரசாங்கத்தில் எந்தவொரு துறைக்கும் பொறுப்பு வகிக்காமல் அமைச்சரவை முடிவுகளில் வாக்களிக்கும் உரிமையும் அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்கும் உரிமையும் அமைச்சருக்கான ஊதியமும் பெற்று அமைச்சரவையில் பங்கு பெறுவதே துறை இல்லாத அமைச்சர் பதவி. இந்திய அரசியலமைப்பு சட்டம் 166[3] இன் படி சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் முதல்வர் மற்றும் ஆளுநர், பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் ஒப்புதலோடு எந்தத் துறையும் இல்லாமல் அமைச்சராக பதவி வகிக்கலாம். மத்தியில் துறை இல்லாத அமைச்சர்கள் பட்டியல் 1947-ல் நாடு சுதந்திரமடைந்த பின் பிரதமர் நேரு தலைமையில் அமைக்கப்பட்ட முதல் அமைச்சரவையில், ராஜாஜி, என்.கோபாலசாமி அய்யங்கார், வி.கே. கிருஷ்ண மேனன் ஆகியோர் துறை இல்லாத அமைச்சர்களாக இருந்தனர். 1952-ம் ஆண்டில் நேரு 2-வது முறை பிரதமராக பொறுப்பேற்ற போதும், அவரின் அமைச்சரவையில் டி.டி. கிருஷ்ணமாச்சாரி மற்றும் லால்பகதூர் சாஸ்திரி ஆகியோர் துறை இல்லாத அமைச்சர்களாக இருந்தனர். 2003-ம் ஆண்டு பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் தனக்கு வழங்கப்பட்ட நிலக்கரி துறையை ஏற்காத மம்தா பானர்ஜி, துறை இல்லாத அமைச்சராக பதவி வகித்தார். 2003-ம் ஆண்டு பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த முரசொலி மாறன், உடல்நலக்குறைவால் பல மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, துறை இல்லாத அமைச்சராக இருந்தார். அவர் நிர்வகித்த தொழில் மற்றும் வர்த்தக துறைகள் அருண் ஜேட்லியிடம் ஒப்படைக்கப்பட்டண. 2004-ம் ஆண்டு பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவையில், தற்போது தெலங்கானா முதலமைச்சராக உள்ள சந்திரசேகர ராவ் துறை இல்லாத அமைச்சராக பதவி வகித்தார். 2005-ம் ஆண்டு பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவையில் நட்வர் சிங் துறை இல்லாத அமைச்சராக பதவி வகித்தார். 2014-ல் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் அருண் ஜேட்லி துறை இல்லாத அமைச்சராக பதவி வகித்தார். தற்போதைய தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்கூட இப்போதும் தன் வசம் எந்தத் துறையையும் வைத்துக்கொள்ளவில்லை தமிழகத்தில் துறை இல்லாத அமைச்சர்கள் 1984-85-ல் தமிழக முதலமைச்சராக எம்.ஜி.ஆர். இருந்தபோது உடல்நலக் குறைவால் அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் கவனித்துவந்த துறைகள் ஆளுநர் குரானாவால் அப்போதைய நிதி அமைச்சர் நெடுஞ்செழியனுக்கு வழங்கப்பட்டது. 2011-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் கால்நடைத் துறை அமைச்சர் கருப்பசாமிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட போது, அவரது துறை மற்றொரு அமைச்சருக்கு வழங்கப்பட்டது. இதனால் அவர் துறை இல்லாத அமைச்சராக நீடித்தார். 2015-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருந்த செந்தூர் பாண்டியன் திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். அப்போது அவர் வகித்து வந்த இந்து சமய அறநிலையத்துறை உணவுத்துறை அமைச்சராக இருந்த காமராஜிடம் கூடுதல் துறையாக ஒப்படைக்கப்பட்டது. 2016-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அவரது துறைகளை நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திடம் ஒப்படைத்து ஆளுநர் அறிவித்தார். இதுவரை திமுக ஆட்சியில் யாரும் துறை இல்லாத அமைச்சராகப் பதவி வகித்ததில்லை. முதல்முறையாக அமைச்சர் செந்தில் பாலாஜியைத் துறை இல்லாத அமைச்சராக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
from Dinamani - சிறப்புச் செய்திகள் - https://ift.tt/wVQviDp
from Dinamani - சிறப்புச் செய்திகள் - https://ift.tt/wVQviDp