சென்னையில் நடைபெற்ற 70வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் எனக்கு இன்று 70வது பிறந்தநாள் என்று கூறி உரையை தொடங்கினார்.
அப்போது பேசிய அவர், ”நான் தனிப்பட்ட ஸ்டாலின் அல்ல; கண்ணுக்கு எட்டிய தூரம் உள்ள உங்கள் அனைவரையும் சேர்த்துதான். நீங்கள் மட்டுமல்ல; திராவிட முன்னேற்ற கழகமே உயிர் என தமிழகம் முழுவதுமுள்ள கோடிக்கணக்கான உயிர்களையும் சேர்த்துத்தான் சொல்கிறேன். நான் என்றும் உங்களில் ஒருவன். ஸ்டாலின் என்ற பெயருக்குள் கோடிக்கணக்கான உடன்பிறப்புகள், உயிர்கள் அடங்கியிருக்கிறது. ’என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே’ என்ற ஒற்றை வாக்கியத்திற்குள் நம்மை இணைத்தார் கலைஞர். அவருக்கு நான் மட்டுமா பிள்ளை; நீங்கள் அனைவரும் அவருடைய பிள்ளைகள்தான். தந்தை பெரியார், திராவிட சமுதாயத்தை மானமும் அறிவுமுள்ள சமுதாயமாக்கவேண்டு என்றுதான் புறப்பட்டார்.
பேரறிஞர் அண்ணா, எதையெல்லாம் சாதிக்க முடியாது என்று நினைக்கிறார்களோ அதையெல்லாம் அண்ணாதுரையால் சாதிக்க முடியும் என்று எழுந்து நின்றார். நமது தமிழக தலைவர் கருணாநிதி, ’தமிழர்களே! தமிழர்களே! நீங்கள் என்னை கடலில் தூக்கி எறிந்தாலும் நான் கட்டுமரமாகத்தான் மிதப்பேன்; அதில் ஏறி நீங்கள் பயணம் செய்யலாம்’ என்றார். அந்த வழித்தடத்தில் வந்த நானும் வீட்டுக்கு விளக்காக இருப்பேன்; நாட்டுக்கு தொண்டனாக இருப்பேன்; மக்களுக்காக கவலைப்படக்கூடிய தலைவனாக இருப்பேன்; மக்கள் கவலைகளை தீர்ப்பதில் முதல்வனாவேன் என்று உறுதிமொழி ஏற்று உழைத்துக்கொண்டிருக்கிறேன்.
கலைஞரின் பாணி சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்பது; ஆனால், எனது பாணி சொல்லாததையும் செய்வோம், சொல்லாமலும் செய்வோம் என்பதுதான். 2024 நாடாளுமன்ற தேர்தல் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதைவிட யார் வரக்கூடாது என்பதற்கான தேர்தல். எனவே 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த ஒன்று சேர வேண்டும். மதுரை எய்ம்ஸ்க்கு ஒரே ஒரு செங்கலை வைத்துவிட்டு அதற்கு மேல் மத்திய அரசு எதையும் செய்யவில்லை. மகாபாரத்தில் சூதாட்டம் இருப்பதால் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்க மறுக்கிறார்களா? நாற்பதும் நமதே நாடும் நமதே; மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெல்ல வேண்டும்” என்று பேசினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News