பிரபல புகைப்பட கலைஞரும், இணையத்தில் பிரபலமான “What a Karward" உணவு நிறுவனத்தின் இணை நிறுவனருமான ஸ்டாலின் ஜேக்கப் சாலை விபத்தில் மரணித்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மரணமடைந்த ஸ்டாலின் ஜேக்கப் மறைவை அடுத்து, முதலமைச்சர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரபல புகைப்பட கலைஞர் மற்றும் வாட்ட கர்வர்டு உணவு நிறுவனத்தின் இணை நிறுவனரும், புகைப்பட செய்தியாளர் என பன்முக திறமையோடு இருந்தவர் ஸ்டாலின் ஜேக்கப். திமுக-வின் சமூகவலைதள பக்கங்களிலும் இவர் பணியாற்றி வந்திருக்கிறார். இவர் இன்று செங்கல்பட்டு மறைமலைநகர் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த போது, கார் மீது மோதி ஏற்பட்ட விபத்தின் காரணமாக படுகாயம் அடைந்துள்ளார். அதன்பிறகு அவசர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவருடன் பயணித்த மற்றொரு நபரும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் ஸ்டாலின் ஜேக்கப்பின் மரணத்தை கேள்வியுற்ற தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இரங்கல் செய்தியில், “நேற்றுதான் பிறந்தநாள் கொண்டாடிய நிலையில், கழகத்தின் துடிப்பான சமூக வலைதள செயல்வீரர் ஸ்டாலின் ஜேக்கப், இத்தனை இளம் வயதில் நம்மைவிட்டு பிரிந்தார் என்ற செய்திகேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரை இழந்துவாடும் குடும்பத்தினர் மற்றும் உடன்பிறப்புகளுக்கு எனது ஆறுதலும், ஆழ்ந்த இரங்கல்களும்” என தெரிவித்துள்ளார்.
நேற்று தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு திமுக எம்பி கனிமொழியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுக்கொண்ட ஜேக்கப், அந்த புகைப்படத்தை தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் நேற்று பிறந்த நாள் கொண்டாடிய நிலையில், தற்போது மரணித்திருப்பது வேதனையான செய்தியாக மாறியுள்ளது. இணையவாசிகள் தொடங்கி அரசியல் தலைவர்கள் வரை பலரும் ஜேக்கப் ஸ்டாலின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News