https://ift.tt/FtnCNDP குரூப் 2, 2ஏ தேர்வு குழப்பம்: TNPSC தரப்பில் தரப்பட்ட விளக்கத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளது?

நடந்து முடிந்த குரூப் 2, 2A தேர்வில், வினாத்தாள் மற்றும் விடைத்தாள் தொகுப்பிற்கும், வருகைப்பதிவேட்டிற்கும் இடையிலான வரிசை வேறுபாட்டின் காரணமாக, தேர்வு எழுதுவதில் குழப்பம் ஏற்பட்ட நிலையில், அதற்கு காரணமான அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு துறைகளில், குரூப் 2 மற்றும் 2 ஏ பணிகளில் காலியாக உள்ள 5,446 பணியிடங்களை நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி மூலமாக கடந்த மே 21 ஆம் தேதி முதல்நிலை தகுதி தேர்வு நடைபெற்றது. இதில், சுமார் 9 லட்சம் பேர் பங்கேற்றனர். இந்நிலையில் இந்த தேர்வின் முடிவுகள் கடந்த நவ 8 ஆம் தேதி வெளியானது. இதையடுத்து இதில் தேர்ச்சி பெற்ற 55 ஆயிரம் பேருக்கு, குரூப் 2 பிரதான தேர்வு கடந்த சனிக்கிழமை (25.02.2023) அன்று நடைபெற்றது.

image

விடைத்தாள் மாற்றி வழங்கப்பட்டதால் தேர்வில் நிகழ்ந்த குளறுபடி!

பிப்ரவரி 25ஆம் தேதி காலை தமிழ் தகுதித்தாள் தேர்வு நடைபெற்ற தேர்வு மையங்களுக்கு, கண்காணிப்பாளர்கள் மற்றும் விடைத்தாள்கள் வர தாமதமானதாக புகார் எழுந்தது. இதையடுத்து திட்டமிட்டபடி காலை 9:30 மணிக்கு தேர்வை துவக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து தேர்வை தாமதமாக துவங்கினாலும், பல இடங்களில் தேர்வர்களுக்கு வழங்கப்பட்ட ஓ.எம்.ஆர். விடைத்தாள்களும் மாற்றி வழங்கப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டது.

இதனால், குழப்பமடைந்த பல தேர்வர்கள் தங்கள் பதிவெண்களை பார்க்காமல், மாறியிருந்த விடைத்தாளில் வேகமாக விடைகளை பதிவு செய்தனர். இதையடுத்து தேர்வு மையங்களில் இருந்து, டிஎன்பிஎஸ்சி-க்கு தகவல் அளித்ததை அடுத்து விடைத்தாள்களை சரியாக வழங்கவும், விடைத்தாள் மாறியோருக்கு, வெற்று விடைத்தாள்கள் வழங்கியும், தேர்வு நடைபெற்றது.

image

தேர்வில் நிகழ்ந்த குளறுபடி நேரத்தில், சிலர் மொபைலில் விடைகள் தேடியதாக குற்றச்சாட்டு!

இதனால், பிற்பகலில், 2:00 மணிக்கு துவங்க வேண்டிய தேர்வும் தாமதமாக துவங்கியது. மாலை, 5:00 மணிக்கு முடிய வேண்டிய தேர்வு, பல இடங்களில், 6:30 மணி வரை நடந்ததால் தேர்வர்கள் குழப்பமடைந்தனர். இந்த குளறுபடிகள் காரணமாக பல மையங்களில் துவங்கப்பட்ட தேர்வு இடையில் சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டன. அப்போது தேர்வர்கள், தங்களுக்கு கிடைத்த வினாத்தாளில் இருந்த வினாக்களுக்கான விடைகளை மொபைல் போனில் தேடி பார்த்ததாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதன் காரணமாக, முதன்மை தேர்வை ரத்து செய்து விட்டு, மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

குளறுபடி குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் விளக்கம்!

"ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு - குரூப் 2, 2A ன் முதன்மை எழுத்துத் தேர்வு 25.02.2023 முற்பகல் - பிற்பகல் என 20 மாவட்டத் தேர்வு மையங்களில் நடைபெற்றது.

இந்த முதன்மைத் தேர்வு பின்வரும் இரு தாட்களை உள்ளடக்கியது:

1. தாள் 1 - கட்டாயத் தமிழ்மொழி தகுதித் தாள் முற்பகல்

2. தாள்-2- பொது அறிவுத்தாள் - பிற்பகல் (நேர்முகத் தேர்விற்கு தெரிவிற்கு பெறப்படும் மதிப்பெண்கள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும்)

image

வருகைப்பதிவேட்டில் உள்ள தேர்வர்களின் பதிவெண்களின் வரிசையிலும், வினாத்தாட்களில் உள்ள பதிவெண்களின் வரிசையிலும் இருந்த வேறுபாட்டின் காரணமாக காலை வினாத்தாட்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனை ஈடுசெய்யும் பொருட்டு தேர்வர்களுக்கு கூடுதல் நேரம் வழங்கப்பட்டு முற்பகல் தேர்வுகள் நடைபெற்று முடிந்தது. பிற்பகல் தேர்வு நேரம், 02.30 மணிக்குத் துவங்கி 5.30 மணி வரை நடைபெறும் வகையில் மறுவரையறை செய்யப்பட்டது.

image

அதன்படி பிற்பகல் தேர்வானது துவங்கப்பட்டு அனைத்து தேர்வு மையங்களிலும் சீராக எவ்வித இடர்பாடுமின்றி நடைபெற்று முடிந்தது. பிற்பகல் தேர்வில் 94.30% தேர்வர்கள் பங்கேற்றனர். முற்பகல் தேர்வானது கட்டாயத் தமிழ் தகுதித் தேர்வுதான் என்பதால், இத்தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே போதுமானது. இம்மதிப்பெண்கள் தரவரிசைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. இது தகுதித்தேர்வு என்பதால் தேர்வாணையத்தின் முன் அனுபவத்தின்படி 98% ற்கும் கூடுதலான தேர்வர்கள், தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட தமிழ் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

image

இருப்பினும், தேர்வர்களுக்கு முற்பகல் தேர்வில் ஏற்பட்ட சிரமங்களைக் கருத்தில் கொண்டு, தேர்வர்களின் நியாயமான கோரிக்கைகள் சரியான முறையில் விடைத்தாட்கள் திருத்தும்போது, கருத்தில் கொள்ளப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாள் II மதிபெண்கள் மட்டுமே தரவரிசைக்கு எடுத்துக்கொள்ளப்படும்!

மேலும் “தேர்வாணையத்தின் உடனடி அறிவுறுத்தல்களின்படி, பிற்பகல் தேர்விற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால், பிற்பகல் தரவரிசைக்கு கருதப்படும் தாள்-II பொது அறிவுத்தாள் தேர்வானது எவ்வித இடையூறுமின்றி அனைத்து நேர்வுமையங்களிலும் சுமுகமாக நடைபெற்று முடிந்தது. மேலும் இந்த தாள்-IIல் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் மட்டுமே தரவரிசைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

image

குளறுபடிக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்!

இந்த வினாத்தாள் மற்றும் விடைத்தாள் தொகுப்பிற்கும், வருகைப்பதிவேட்டிற்கும் இடையிலான வரிசை வேறுபாடே முற்பகல் தேர்வில் காலதாமததிற்குக் காரணம். இந்த வேறுபாடு ஏற்படக் காரணமான அனைவர் மீதும் தேர்வாணையம் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளும்” என்று தேர்வாணையம் அறிவித்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post