https://ift.tt/3CXf4rT ”எங்களுக்கு சொல்லி தருகிறீர்களா?”- பாஜகவை கழட்டிவிடுகிறாரா ஈபிஎஸ்? முற்றும் வார்த்தை போர்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக -பாஜக கட்சிகளிடையே நிலவி வரும் போக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிப்ரவரி 27-ம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலையொட்டி பிரதானக் கட்சிகள் எல்லாம் வேட்பாளர்களை அறிவித்து முடித்து விட்டநிலையில், அ.தி.மு.க. கட்சியில் நிலவும் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருதரப்பு மோதல் மற்றும் கூட்டணி கட்சியான பா.ஜ.க.வின் நிலைப்பாடு ஆகியவற்றால் வேட்பாளர் அறிவிப்பதில் தாமதம் நிலவி வந்தது.

இந்தநிலையில்தான் பா.ஜ.க.வின் நிலைப்பாடு குறித்த அறிவிப்புகள் எதுவும் வெளியாகமலேயே, அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வேட்பாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தென்னரசு நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டார். அதேபோல் அன்றுமாலை ஓ. பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளராக செந்தில் முருகன் அறிவிக்கப்பட்டார். எனினும் அறிவிப்பு வெளியான கையோடு ஈரோடு கிழக்கு தொகுதியில் இருதரப்பு பணிமனை அலுவலகங்களில் வைக்கப்பட்டிருந்த பேனர்களில் மாற்றுக்கருத்து நிலவியது.

எடப்பாடி தரப்பில் முதலாவதாக வைக்கப்பட்ட பேனரில் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்றும், பின்னர் மாற்றி தேசிய ஜனநாயக கூட்டணியாகவும் வைக்கப்பட்டது. தொடர்ந்து மூன்றாவது முறையாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான கூட்டணி என எடப்பாடி பழனிச்சாமி தரப்பு பேனர் வைக்கப்பட்டது.

image

அதேநேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பணிமனை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தது. அதிமுக கூட்டணியில் பாஜக தற்போது இருக்கக்கூடிய சூழ்நிலையில், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலான இந்த நேர் - எதிர்மறை பேனர்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

மேலும், அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் செய்தியாளர்களை சந்தித்தபோது, அதிமுகவை ஒருங்கிணைக்க பாஜக முயற்சி செய்கிறதா என்று கேட்கப்பட்டதற்கு, “அதிமுகவை ஒருங்கிணைத்து நடத்துவது எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் ஆவி தான். எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவிற்கு பிறகு இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிச்சாமிக்கு தான் சொந்தம், இதனை மக்கள் ஏற்றுக்கொண்டனர். 94.5% பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக உள்ளனர், எனவே இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிச்சாமிக்கு கிடைக்கும்” என்று பதிலளித்திருந்தார்.

image

அத்துடன் பா.ஜ.க. இரண்டு தரப்பு தலைவர்களையும் சந்திப்பது தொடர்பாக பேசிய பொன்னையன், “பாஜக வட இந்தியாவில் நட்பு கட்சிகளின் ஆட்சி எப்படி எல்லாம் கவிழ்ந்தன, அதனை பாஜக எவ்வாறு வீழ்த்தியது, எப்படி எதிர்த்தனர் என அனைவருக்கும் தெரியும், மக்களுக்கு நன்றாக தெரியும், ஈரோடு கிழக்கு தேர்தலை பொறுத்தவரை, எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் போட்டியிடுவோம். மக்கள் எங்கள் பக்கம் தான் நிற்கிறார்கள். அதுபோல் பாஜக எங்கள் பக்கம் நிற்க விரும்பலாம். திமுக தவிர மற்ற எந்த கட்சிகள் வேண்டும் என்றாலும், அதிமுகவிற்கு ஆதரவு அளிக்கலாம். அந்த வகையில் பாஜக உள்ளனர்” என தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில் டெல்லி சென்றுவந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தபோது, “பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி நட்டாவின் கருத்துக்களை அ.தி.மு.க.-வின் முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இருவரையும் தனித்தனியாக நேரில் சந்தித்து வலியுறுத்தினோம்.

இதில் ஆளும் கட்சியான திமுக, தீய சக்தி, மக்களின் எதிர்ப்புகளுக்கு உள்ளாகி இருக்கிறது. எனவே ஒன்றுபட்ட அதிமுக-வாக உறுதியான நிலையான வேட்பாளராக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். இதனால் அதிமுக இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும். அப்போது தான் தி.மு.க. அரசை வீழ்த்த முடியும். அதேபோல் பா.ஜ.க நிலைப்பாடு என்ன என்பதை தெரிவிக்க கால அவகாசம் பிப்ரவரி 7 வரை இருக்கிறது” என்று தெரிவித்திருந்தார்.

இந்த செய்தியாளர் சந்திப்பின்போது உடனிருந்த அக்கட்சியின் தமிழ்நாடு மாநில மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி பேசும்போது, “அ.தி.மு.க. உருவாகும் போது தீய சக்தி என்ற தி.மு.க.வை எதிர்த்து உருவானார்கள். தற்போது மாநில அரசான தி.மு.க.வுக்கு மக்களிடம் எதிர்ப்பு உருவாகி இருக்கிறது. மின் கட்டணம், பால் விலை உயர்வு, சொத்து வரியினை உயர்த்திருக்கிறார்கள். எனவே ஒன்றுபட்ட அ.தி.மு.க.-வாக இந்த இடைத்தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என அ.தி.மு.க. எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஒ.பன்னீர் செல்வத்திடம் வலியுறுத்தியுள்ளோம்” என்றுக் கூறியிருந்தார்.

image

இந்தநிலையில்தான் அ.தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்ப கோவை மண்டல செயலாளர் சிங்கை ராமசந்திரன் பா.ஜ.க.வை விமர்சித்துப் பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில், “எங்கள் கட்சியில் நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று சொல்ல சி.டி.ரவி யார்?. தேசியக் கட்சி என்றால் எங்களை என்ன வேண்டுமானாலும் செய்ய ஆணையிடுவீர்களா?. கர்நாடகாவை எப்படி ஆள வேண்டும் என்று நாங்கள் சொன்னால் சி.டி.ரவி ஒப்புக்கொள்வாரா?. 30 வருடங்களுக்கு மேல் ஆட்சி செய்த கட்சியான எங்களுக்கு, திமுகவை எதிர்த்து தனியாக நின்று வெற்றிபெறாத நீங்கள் அறிவுரை சொல்கிறீர்களா?. தீய சக்தி யார் என்றும் புரட்சித் தலைவர் 1972-ல் எங்கள் கட்சியை துவங்கினார் என்றும், நீங்கள் எங்களுக்குச் சொல்லித் தருகிறீர்களா? உங்கள் எல்லைகளை முதலில் தெரிந்துகொள்ளுங்கள்!” என்று பதிவிட்டிருந்தார்.

இவரின் இந்தப் பதிவுக்கு பதிலடி தரும் வகையில், “எல்லாம் தெரியும் என்றால் பின்னர் எதற்காக 2017-லில் டெல்லி வழிகாட்டுதல் படி இணைந்தீர்கள், அன்று அது நடக்கவில்லை என்றால் இன்று உங்கள் கட்சி யாரிடம் இருந்திருக்கும்? சி.டி.ரவி கூறியது எங்களுடைய கருத்து தானே தவிர முடிவெடுக்க உங்களுக்கு உரிமை உள்ளது” என்று தமிழக பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மாநிலத் தலைவர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். இரு கட்சிகளின் முக்கிய தலைவர்களே அமைதியாக இருக்கும் நிலையில், சமூகவலைத்தளத்தை நிர்வகிக்கும் இருக் கட்சி நிர்வாகிகளும் இவ்வாறு பதிவிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவுக்கு தொடர்ந்து ஆதரிக்கும் ஓபிஎஸ்

அதிமுகவில் தற்போது உள்ள ஈபிஎஸ், ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா என அனைவரும் பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் தான் உள்ளன. நேர் எதிர் முகாமில் இல்லை. ஆனால், ஈபிஎஸ் தரப்பில் தங்களது தனித்தன்மையை விட்டுக் கொடுக்காமல் இருக்க சில முயற்சிகளை செய்து வருகின்றனர். அதன் வெளிப்பாடாகவே சமீபகாலமாக பாஜகவை கழட்டிவிடும் தொணியில் சில விஷயங்களை மேற்கொண்டு வருகின்றனர். அப்படியில்லை என்றாலும் தங்களது தலைமையில் பாஜக ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர். ஆனால், ஓபிஎஸ் தரப்பினர் பாஜகவிற்கு முற்று முதலான ஆதரவை தெரிவித்து வருகிறார்கள். எந்த அளவிற்கு என்றால் பாஜக வேட்பாளரை அறிவித்தால் தங்களது வேட்பாளரை வாபஸ் பெற்றுவிடுகிறோம் என்று சொல்லும் அளவிற்கு இருக்கின்றனர். பிரதமர் மோடி குறித்து அவர் அதிமுகவின் உள் விவகாரங்களில் தலையிடுவது குறித்து தொடக்கத்தில் இருந்து பெருமிதமாக பேசி வருபவரும் அவரே. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post