ராமஜெயம் கொலை வழக்கை சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் 40 பேர் அடங்கிய போலீசார் மீண்டும் விசாரித்து வருகின்றனர். சிபிசிஐடி போலீசார் தயாரித்து வைத்துள்ள கேள்விகளுடன் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது. அது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரரும், திருச்சியைச் சேர்ந்த தொழிலதிபருமான ராமஜெயம் கடத்த 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருச்சியில் இருந்து கல்லணை செல்லும் வழியில் திருவளர்ச்சோலை என்ற கிராமத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு முட்புதரில் வீசப்பட்டார். இந்த வழக்கை 10 ஆண்டுகளாக போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்தும் கொலையாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டது.
காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் 40 பேர் அடங்கிய போலீசார் இந்த வழக்கை மீண்டும் விசாரித்து வருகின்றனர். ராமஜெயம் கொலைபாணியில் தமிழகத்தில் நடைபெற்ற கொலை வழக்குகளில் கைதான ரவுடிகள், ராமஜெயம் கொலையின்போது திருச்சியில் தங்கி இருந்த ரவுடிகள் பட்டியலை தயாரித்தனர். அதைவைத்து இந்த வழக்கில் 12 பேர் சந்தேக நபர்களாக சேர்க்கப்பட்டனர்.
அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்கு சிறப்பு புலனாய் குழு திருச்சி நீதிமன்றம் மூலம் அனுமதி பெற்றது. இதையடுத்து காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் உள்ள தடைய அறிவியல் பரிசோதனைக் கூடத்தில் உண்மை கண்டறியும் சோதனை 18, 19 ஆகிய தேதிகளில் மோகன்ராம், நரைமுடி கணேசன், தினேஷ், சீர்காழி சத்திய ராஜ் ஆகியோரும் 19, 20 தேதிகளில் சாமி ரவி, மாரிமுத்து, ராஜ்குமார், சிவா நான்கு பேருக்கும் 20, 21ஆம் தேதி லெஃப்ட் செந்தில், கலைவாணன், சுரேந்தர், திலீப் ஆகிய 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படவுள்ளது.
அதற்கு முன்னதாக அவர்களிடம் சிறிய மருத்துவ சோதனை மற்றும் விசாரணை செய்தபிறகு உண்மை கண்டறியும் சோதனை துவங்குவார்கள் என தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சோதனை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட உள்ளது.
உண்மை கண்டறியும் குழுவில் இரண்டு விதமாக தடயங்களை வைத்து விசாரணை மேற்கொள்ளுவர்கள் ஒன்று மயக்கம் மருந்து செலுத்தி சந்தேகம் அடையும் நபரிடம் கேள்வியை முன்வைப்பார்கள். அதன் மூலம் உண்மையை கண்டறிய முயற்சி செய்வார்கள். மற்றொன்று கேள்வி கேக்கும்போது இதய துடிப்பு மற்றும் நாடி துடிப்பு, முக பாவனை வைத்தும் கண்டறிய முயற்சி செய்வார்கள். இதில் உறுதி செய்யதாலும் கூட அவர்கள் குற்றவாளியாக கருதமுடியாது. அடுத்தகட்ட விசாரணைசெய்ய பெரும் உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
இதுகுறித்து சந்தேகப்படக்கூடிய நபர்களின் வழக்கறிஞர் புகழேந்தி கூறுகையில், ”சந்தேகப்படக்கூடிய 12 நபர்களிடமும் அவர்கள் சம்மதத்துடன் உண்மை கண்டறியும் குழு விசாரணை சோதனை மேற்கொள்ள நீதிமன்றத்தின் மூலமாக ஒப்புகொண்டது.
இன்று நான்கு நபர்களிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 12 கேள்விகள் கேட்கப்பட்டது. குறிப்பாக 12 கேள்விகளும் ஒருவரிடமே ஆறு முறை மாற்றி மாற்றி கேட்கப்பட்டது. கேள்வி கேட்கும்பொழுது இதய துடிப்பு, நாடித்துடிப்பு உள்ளிட்டவற்றை கண்காணித்து பதிவுசெய்தனர். குறிப்பாக 12 கேள்வியில் குற்றவாளிகள் சம்பந்தமாக அவர் யார்? அவர் பெயர் என்ன? அவர் எந்த பகுதியை சேர்ந்தவர்? என்றும் மற்ற ஆறு கேள்விகள் ராமஜெயம் சார்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டது.
ஆனால் உண்மை கண்டறியும் சோதனை மூலம் குற்றவாளிகளை முழுமையாக அடையாளம் காணமுடியாது. இந்த சோதனை வெறும் கண் துடைப்புதான். சோதனை மூலம் மேற்கொண்ட அனைத்து நிகழ்வுகளும் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படும்” என்று வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்தார்.
- செய்தி: ஆனந்தன், தொகுப்பு - சினேகதாரா
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News