ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி என பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் ஈரோடு - கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவேரா ஜனவரி நான்காம் தேதி காலமானார். அதைத்தொடர்ந்து ஈரோடு - கிழக்கு சட்டமன்றத் தொகுதி காலியானது என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
தேர்தலில் போட்டியிடுவது குறித்து செய்தியாளர்களை சந்தித்த ஓ. பன்னீர்செல்வம், “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தலைமைக்காக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் போட்டியிட வேண்டும் என்று ஒருமித்த கருத்தை தெரிவித்துள்ளனர்.
இந்திய தேர்தல் ஆணையத்தில் அதிகாரப்பூர்வ பதவியான ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து கையெழுத்திட்டால் தான் இரட்டை சின்னம் கிடைக்கும். இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமாவால் ஒருங்கிணைப்பாளர் பதவி தற்போது அதிகாரமிக்கதாக உள்ளது. எனவே எங்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும்” என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
மோதலுக்கு தயாராகும் ஈபிஎஸ் - ஓபிஎஸ் அணிகள்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைப் பொறுத்தவரை திமுக கூட்டணி தரப்பில் எவ்வித சிக்கலும் இல்லாமல் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டு விட்டார். ஆனால், அதிமுகவில் தான் இழுபறி நீடித்துக் கொண்டே செல்கிறது. கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட தமிழ் மாநில காங்கிரஸ் இடம் பேசி தொகுதியில் போட்டியிடுவதாக முதலில் அறிவித்தது ஈபிஎஸ் அணியினர் தான். ஈபிஎஸ் தரப்பினர் அறிவித்த உடனேயே தாங்களும் போட்டியிடுவதாக ஓபிஎஸ் தரப்பினர் அறிவித்தனர்.
இருவரும் தங்களது கூட்டணி கட்சிகளின் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வருகின்றனர். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை சந்தித்து ஆதரவு கோரினர். இதில் ஓபிஎஸ் தரப்பினர் மட்டும் பாஜக வேட்பாளரை நிறுத்தினால் விட்டுக் கொடுத்த தயார் என்று கூறியுள்ளார். ஆனால், இந்த தேர்தலில் போட்டியிடுவதில் ஈபிஎஸ் தரப்பு உறுதியாக இருக்கின்றது.
இருவரும் ஒன்று சேர்ந்து கையெழுத்திட்டால்தான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும். ஆனால், அதற்கு வாய்ப்பு இல்லாதது போலவே தெரிகிறது. ஏனெனில் ஓபிஎஸ் தரப்புடன் சேரவே வாய்ப்பில்லை என்ற எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கூறிவிட்டனர். இத்தகைய சூழலில்தான் ஓபிஎஸ் இத்தகைய கருத்தினை முன்வைத்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News