விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் மாணிக்கம் தாகூர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``மத்திய அரசுக்கு ஜி.எஸ்.டி வரி வழங்குவதில் தமிழகத்தில், விருதுநகர் மாவட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. அத்தகைய மாவட்டத்துக்கு மத்திய அரசு இதுவரை பட்ஜெட்டில் எந்தவித பயன்தரத்தக்க அறிவிப்புகளையும் வெளியிடவில்லை. எனவே வருகின்ற நிதிநிலை அறிக்கையில் விருதுநகர் மாவட்டம் முன்னேறவிழையும் மாவட்டம் என்பதற்கான பெயரோடு மட்டுமல்லாமல் உண்மையான வளர்ச்சிக்கான அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வலுவான வேட்பாளரை களமிறக்கியிருக்கிறது. எனவே காங்கிரஸின் வெற்றியும் மிகப்பெரிய அளவில் இருக்கும். இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து அ.தி.மு.க., பா.ஜ.க இரண்டு கட்சிகளும் கூட்டணி சேர்ந்து களத்தில் காங்கிரஸை எதிர்கொண்டாலும் சரி, அல்லது தனித்து களம் கண்டாலும் சரி நிச்சயம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சியே வெற்றி பெறும். பா.ஜ.க அண்ணாமலை வாய்சொல் வீரர் மட்டுமே. முடிந்தால் அவர் இந்த இடைத்தேர்தலில் களமிறங்கி ஜெயித்து காண்பிக்கட்டும். புதிதாக கட்டப்படும் நாடாளுமன்ற கட்டடத்துக்கு பா.ஜ.க சாயம் பூசப்படுவதாக தகவல்கள் வருகின்றன. இது கண்டிக்கத்தக்கது. பத்திரிகைகளில் மட்டும் அதன் போட்டோக்களை பகிர்ந்து மெச்சி கொள்ளும் அரசு இதுவரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. அதேப்போல நாடாளுமன்ற அவையில் உறுப்பினர்களின் எண்ணிக்கை இருக்கையும் அதிகரிக்கப்படுவதாக தகவல்கள் வருகின்றன.
ஒருவேளை இந்தியாவில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் எண்ணத்தோடு இந்த முயற்சி மேற்கொள்ளப்படுமாயின், அதை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்க்கும். நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது என்பது ஆபத்தானது. சேது சமுத்திர திட்டத்தில் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் இரட்டை நிலைப்பாடு வெளிப்பட்டிருக்கிறது. அவர்கள் கட்சிக்குள் ஒருவிதமாகவும், நீதிமன்றத்தில் வேறு விதமாகவும் பேசி வருகின்றனர். பிரதமர் மோடி குஜராத்தில் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் நடைபெற்ற படுகொலைக்கு எவ்வாறு துணையாக நின்றார் என்பது பற்றி தனியார் செய்தி நிறுவனம் ஆவணப்படத்தை வெளியிட்டிருக்கிறது. இதனை இந்தியாவுக்குள் யூடியூப், ட்விட்டர் பக்கத்தின் வழியே பார்க்க முடியாத அளவுக்கு மத்திய பா.ஜ.க அரசு தடைசெய்துள்ளது. இதை செய்ததன் மூலம் 'பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருட்டாகிவிடும்' என்று நினைக்கிறார்கள். அது தவறு.
காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்ட நடைப்பயணம் இறுதிகட்டத்தை அடைந்துள்ளது. அவர் கூறியதுபோல 'வெறுப்பின் சந்தையில் நடைப்பயணத்தின் மூலம் அன்பின் கடையை திறந்து வைத்துள்ளார்'. அதற்கு பலதரப்பட்ட மக்கள், பல்வேறு கட்சிகளிடத்தில் பெருத்த ஆதரவு உள்ளது. ராகுல் காந்தியின் நடைப்பயணத்தை முன்ணுதாரணமாக கொண்டு பலரும் நடைப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது பாராட்டுதலுக்குரியது. அதன்படி தமிழகத்தில் பா.ஜ.க., பா.ம.க., உள்ளிட்ட கட்சிகளும் நடைப்பயணத்தை மேற்கொள்வதற்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. தமிழகத்தில் நடைப்பயணம் மேற்கொள்ளும் பா.ஜ.க, அவர்களின் சொந்த பரிவாரங்களை விட்டுவிட்டு, மக்களிடத்தில் போய் பேசவேண்டும். அவ்வாறு நடக்கிறபட்சத்தில் ராகுல் காந்தியின் வழித்தடத்தில் பயணிக்க ஆரம்பித்துள்ளனர் என எடுத்துக் கொள்ளலாம்" என்றார்.
from Latest News