ஆந்திர மாநிலம், நெல்லூரைச் சேர்ந்தவர் பாரத். இவர் நெல்லூரில் நகை வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் விகாஸ் ராவல் (42) என்பவர் டிரைவராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் 20-ம் தேதி இரவு நெல்லூரிலிருந்து கோவைக்கு காரில் கிளம்பினார். இந்த கார் நேற்று அதிகாலை ஈரோடு மாவட்டம், பவானி பைபாஸ் ரோட்டில் வந்து கொண்டிருந்தபோது, விகாஷ் ராவல் ஓட்டி வந்த காரை பின்தொடர்ந்து ஒரு கார் வந்தது.
அந்த கார், விகாஸ் ராவல் ஓட்டிச் சென்ற காரை கடந்து முன்னால் சென்று குறுக்கே நிறுத்தப்பட்டது. அந்த காரிலிருந்து 5 பேர் கொண்ட கும்பல் கீழறங்கி விகாஸ் ராவலை அடித்து கீழே தள்ளிவிட்டு, அவர் ஓட்டி வந்த காரை எடுத்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டது.
இது குறித்து விகாஸ் ராவல் தனது உரிமையாளர் பாரத்துக்கு போன் மூலம் கார் கடத்தப்பட்ட தகவலைத் தெரிவித்தார். அந்த காரில் ரூ.2 கோடி பணம் வைத்திருப்பதாகவும், அதைக் காணவில்லை எனவும் உடனடியாக சித்தோடு காவல் நிலையத்தில் புகார் செய்யுமாறு பாரத் கூறியதாகத் தெரிகிறது.
இதையடுத்து சித்தோடு போலீஸார் விசாரணையை தொடங்கினர். கோவை தேசிய நெடுஞ்சாலையில் கங்காபுரம் டெக்ஸ்வேலி அருகே கடத்தப்பட்ட கார் நின்று கொண்டிருப்பது தெரியவந்தது.
அங்கு சென்று பார்த்ததில் அந்த கார் விகாஸ் ராவல் ஒட்டி வந்த கார்தான் என்பது தெரியவந்தது. மேலும் விகாஸ் ராவலிடம் விசாரணை நடத்தப்பட்டபோது, காரில் ரூ. 2 கோடி பணம் இருந்ததாகவும், அதை கோவையில் உள்ளவருக்கு கொடுப்பதற்காக தனது உரிமையாளர் கொடுத்தனுப்பியதாகவும் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
சித்தோடு இன்ஸ்பெக்டர் முருகையன் தலைமையில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்துக்கு ஈரோடு மாவட்ட எஸ்.பி சசிமோகன் உள்ளிட்ட உயர்காவல் துறை அதிகாரிகளும் நேரில் விசாரணை நடத்தினர். மேலும் போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு அங்கு சோதனை நடத்தப்பட்டது. அந்த நாய் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. விகாஸ் ராவல் யாரிடம் கொடுப்பதற்காக ரூ.2 கோடியை கொண்டு சென்றார்? இது ஹவாலா பணமா? உண்மையில் யாருடைய பணம் என பல்வேறு கோணங்களில் போலீஸார் டிரைவர் விகாஸிடம் ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து இன்ஸ்பெக்டர் முருகையன் நம்மிடம், ``நகை வியாபாரியான பாரத், தன்னிடம் பணம் கொடுத்தனுப்பியதே தனக்கு தெரியாது என்றும், காரில் பணம் வைத்திருந்த விஷயமே தனக்குத் தெரியாது என்றும் டிரைவர் விகாஸ் ராவல் கூறுகிறார். தனது முதலாளி பாரத்திடம், கார் கடத்தப்பட்ட தகவலை கூறும்போதுதான் காரில் பணம் இருந்த விஷயத்தை முதலாளி பாரத் தன்னிடம் கூறியதாக விகாஸ் ராவல் தெரிவித்திருக்கிறார்.
உண்மையில் காரில் பணம் இருந்ததா, அது கணக்கில் வந்த பணமா என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களும் நகை வியாபாரியான பாரத்திடம் விசாரணை நடத்திய பிறகே தெரிய வரும். அவரது தொலைபேசியை பலமுறை தொடர்பு கொண்டும் சுவிட்ச் ஆஃப் என்று வருகிறது. விசாரணையின் முடிவில்தான் உண்மை நிலை தெரியவரும்" என்று தெரிவித்தார்.
தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடைபெறுவதால், தேர்தலுக்கு ஓட்டு போடும் பொதுமக்களுக்கு பணப் பட்டுவாடா செய்வதற்காக கொண்டு செல்லப்பட்ட பணமா? அதை மர்ம நபர்கள் மோப்பம் பிடித்து வந்து வழிப்பறி செய்து பறித்து சென்றனரா? அல்லது டிரைவர் விகாஷ் ராவல் நாடகமாடி பணத்தை கூட்டாளிகளிடம் கொடுத்தனுப்பினாரா? என்ற பல்வேறு கோணங்களிலும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
from Latest News