தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஆன்லைன் ரம்மி தடை உள்ளிட்ட பல்வேறு சட்ட மசோதாக்களை நிறைவேற்றி அதனை, ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஆளுநரோ, இந்த மசோதக்களில் பலவற்றுக்கு ஒப்புதல் ஏதும் அளிக்கவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தது. இந்த நிலையில், தான் புதுக்கோட்டையில், தி.மு.க எம்.பி அப்துல்லா, ``ஆளுநர் கிடப்பில் போட்டுள்ள மசோதாக்கள்'' என்ற தலைப்பில் பேனர் வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
"தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள் பதவிக்காலத்தை 3ஆண்டுகளாக குறைப்பது, மாநில பல்கலைக்கழகங்கள் மற்றும் சென்னை பல்கலைக்கழம், எம்.ஜி.ஆர் பல்கலைக்கழங்களின் துணைவேந்தர்கள் நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்குவது, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் சட்டத்திருத்தம், ஆன்லைன் ரம்மி தடை செய்வது உள்ளிட்ட 22 சட்ட மசோதக்கள் அந்த பேனரில் இடம்பெற்றிருக்கிறது. மேலும், ``இதற்கு மேலும் தமிழ்நாட்டு மக்கள், குறட்டைவிட்டுத் தூங்கமுடியுமா? தூங்கினால் துயரப்பட நேரிடும் எச்சரிக்கை” என்ற வசனத்தையும் எழுதியிருக்கிறார்.
இந்த பேனர், பல்வேறு விமர்சனங்களைக் கிளப்பிய நிலையில், எம்.பிக்கு பதிலளிக்கும் வகையிலும், அவரின் பேனருக்குப் போட்டியாகவும், புதுக்கோட்டை மாவட்ட பா.ஜ.க சார்பிலும், பா.ஜ.க நிர்வாகி சீனிவாசன் நன்றி தெரிவித்து ஒரு பேனரை வைத்திருக்கிறார்.
``உங்களைப்போல இல்லாமல், ஆளுநர் அவர்கள் நிறுத்தி நிதானமாக மக்களுக்குத் தேவையானதை செயல்படுத்துகிறார் என்பதை மக்களுக்கு தாங்கள் உணர்த்தியதற்கு நன்றி!
தாங்கள் தெரிவித்த 22 மசோதாவுக்கு அரசாரணை வெளியிடப்பட்டிருக்கிறதா? என்பதை மக்களுக்கு தெரிவித்தால் நன்றி! உங்களிடம் ஆட்சி இருந்தும், ஆளுமை ஆளுநர் தான் என்று மக்களுக்கு தெரிந்துகொள்ள உதவிய தங்களுக்கு நன்றி..! ஆளுநர் அவர்கள் புதுக்கோட்டை வருவதாக எனக்குத் தெரியவில்லை. இந்த டிஜிட்டல் பேனரை சென்னையில் வைத்தால், மிக்க நன்றி.! அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா அவர்ளுக்கு நன்றி! நன்றி! நன்றி!” என்று வைத்து எம்.பியை அதிர வைத்திருக்கிறார். தி.மு.கவும் - பா.ஜ.கவும் போட்டிக்குப் போட்டியாக பேனர் வைத்திருப்பது, புதுக்கோட்டை அரசியலில் புயலைக் கிளப்பியிருக்கிறது
மேலும், இந்த பேனரில் கடைசியாக, பா.ஜ.க நிர்வாகி, தி.மு.கஎம்.பியை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற எம்.பி என்று கலாய்த்தும் பதிவு செய்திருந்தார். அதனை பேஸ்புக்கில், பதிவிட்டு பதில் கூறிய எம்.பி, ``நாடாளுமன்ற மேலவைக்கும் தேர்தல் உண்டு, அத்தனை எம்.எல்.ஏக்களும் அதற்கு வாக்களிப்பார்கள். தி.மு.க வேட்பாளரான என்னை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தினால், தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் பா.ஜ.க உள்ளிட்ட யாரும் வேட்பாளரை நிறுத்தவில்லை. மேலவை எம்.பி என்றால், ஏதோ தேர்தல் இல்லாத கவர்னர் பதவி போன்று நியமன பதவி என்று நண்பர் சீனிவாசன் நினைத்துவிட்டார் போலும்!! எனக்கு இதுகுறித்து ஆச்சர்யம் இல்லை... காரணம் இவர்களைப் போன்றவர்களுக்கு பொது அறிவு மட்டுமல்ல.. எல்லா அறிவும் கம்மி” என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.
from மாவட்ட செய்திகள்