”உச்சநீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட 10 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான தீர்ப்பை அதிமுக ஏற்றுக் கொள்கிறது” என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை பட்டினம் பக்கத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‘ ஏழு தமிழர் விடுதலைக்காக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியவர் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா தான். அதனைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த எடப்பாடி பழனிச்சாமி ஞாயிற்றுக்கிழமை என்றும் பார்க்காமல் சட்டமன்றத்தை கூட்டி தொடர் நடவடிக்கை எடுத்தவர். ஆனால், தற்போது இந்த எழுவருடைய விடுதலையும் திமுக செய்ததை போல் கூறிக்கொண்டு ஆதாயம் தேடப் பார்க்கிறார் தற்போதைய முதல்வராக உள்ள மு க ஸ்டாலின்.
திமுக தலைவர் கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது நளினிக்கு மட்டும் தான் தண்டனை குறைக்க நடவடிக்கை எடுத்தார். ஆனால் ஏழு பேருடைய விடுதலைக்கு ஒருபோதும் திராவிட முன்னேற்ற கழகம் துரும்பை கூட கிள்ளி போடவில்லை. இந்த ஏழு பேர் விடுதலையும் திமுக அன்றே நினைத்திருந்தால் விடுதலை செய்திருக்க முடியும்’ என்றார் ஜெயக்குமார்.
மேலும் மத்தியில் கூட்டணி இருந்த போது மீத்தேன் ஹைட்ரோ கார்பன் நீட் என அனைத்தையும் கொண்டு வந்து தமிழருக்கு துரோகத்தை எடுத்தது திமுக தான். 10 சதவீத இட ஒதுக்கீடு வருவதற்கு அதிமுக தான் காரணம் என்று ஆர் எஸ் பாரதி கூறுவது முற்றிலும் தவறு. மேலும் இதே 10 சதவீத இட ஒதுக்கீட்டுக்காக விதை போட்டு தண்ணீர் ஊற்றி மரம் வளர்த்தது அன்றைய திமுக அரசு தான் மத்தியில் காங்கிரஸ் மந்திரி சபையில் இருந்தபோது திமுக என்ன செய்தது? என்று கேள்வி எழுப்பினார்.
தேசிய அளவிலான இட ஒதுக்கீட்டிற்கு முதன் முதலில் வழக்கு தொடர்ந்தது அதிமுகவும் அதனைத் தொடர்ந்து பாமகவும் கடைசியாக தான் திமுக 27 சதவீத இட ஒதுக்கீட்டுக்காக வழக்கு தொடர்ந்தது. மேலும் நாளை நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதிமுக சார்பில் யாரும் பங்கேற்பது இல்லை என திட்டவட்டமாக கூறினார் இறுதியாக 10 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை அதிமுக இயக்குகிறது என ஜெயக்குமார் கூறினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News