ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கான வளர்ச்சிக்கான திட்டமாக அறிவிக்கப்பட்டது “சென்னையின் 2வது விமான நிலையம் - பரந்தூர் விமான நிலையம்”. ஆனால், அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வசித்து வரும் மக்களால் கடும் எதிர்ப்புகளை சந்திக்க துவங்கியிருக்கிறது. தங்கள் வாழ்வாதாரமான விவசாய நிலங்களை விமான நிலையம் அமைக்க கொடுத்துவிட்டு, தாங்கள் வாழ்க்கைக்கு என்ன செய்வது என்று அம்மக்கள் கடும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். ஆனால், மக்களிடன் கருத்துக்களை அறிவதற்கான கருத்து கேட்பு கூட்டங்கள் திட்டமிட்ட தினங்களில் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில் நேற்று பேசிய பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு கையகப்படுத்தும் நிலத்திற்கான சந்தை விலையை விட 3.5 மடங்கு இழப்பீடு அதிகமாக வழங்கப்படும் என்று அறிவித்தார்.
இன்று அமைச்சர் பற்ற வைத்த அந்த தீ!
இதையடுத்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் எ.வ.வேலு, “8 வழிச்சாலை போடக்கூடாது என திமுக சொல்லவே இல்லை. திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது, சட்டமன்றத்தில் எட்டு வழிச் சாலை குறித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின் "திமுக சாலை போடுவதற்கு எதிரி அல்ல. விவசாயிகளை அழைத்துப்பேசி, அவர்களுக்கு என்ன தேவை என்று புரிந்துகொண்டு பிரச்சினையைத் தீர்த்துவிட்டு சாலையைப் போடுங்கள்; இல்லையெனில் மாற்று வழியை யோசியுங்கள்" என்றுதான் சொன்னார். சட்டமன்றக் குறிப்பை வேண்டுமானால் எடுத்துக் காட்டுகிறேன். எட்டு வழிச்சாலை போடக்கூடாது என்று எந்த காலத்திலும் திமுக சொல்லவே இல்லை” என்று சொல்லிவிட்டு சென்னை விமான நிலையத்தைவிட்டு அமைதியாக கடந்து சென்று விட்டார். அவர் பற்ற வைத்த இந்த எட்டு வழிச்சாலை பற்றிய விவாதம் விடுமுறை தினமான இன்று கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது.
அன்று என்ன சொன்னார் இதே அமைச்சர்?
இந்த வருடம் ஏப்ரல் மாதம் 22 அன்று சட்டப்பேரவையில் நெடுஞ்சாலைகள் துறை மீதான மானியக் கோரிக்கை நடைபெற்றது. அப்போது பேசிய மயிலம் சட்டமன்ற தொகுதி பாமக உறுப்பினர் சிவக்குமார், “சென்னை - சேலம் 8 வழிச் சாலை திட்டத்தில் அரசின் நிலைப்பாடு என்ன?” என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு, “சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டம் என்பது 6 வழி சாலையாக ஏற்கனவே மாறிவிட்டது. இது ஒன்றிய அரசின் திட்டம். இத்திட்டத்தை செயல்படுத்த சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் அனுமதியை பெற வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது.
அதே வேளையில், இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சியாக இருந்தபோது திமுக இருந்த அதே நிலைப்பாட்டில் தான் இப்போதும் நாங்கள் இருக்கிறோம். 8 வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்படவுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டு அதன் அடிப்படையிலேயே, இத்திட்டம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்” என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
அமைச்சர் சொல்வதுபோல முதல்வர் எட்டுவழிச் சாலையை எதிர்க்கவில்லையா?
கடந்த அ.தி.மு.க ஆட்சியின்போது 2018 ஆம் ஆண்டு மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டம். சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் கொண்டுவரப்பட இருந்த இந்த திட்டத்துக்காக, 7 ஆயிரம் விவசாயிகளிடமிருந்து 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் அரசால் கையகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், கொதிப்படைந்த ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் நிலம் கையகப் படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.
அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “நீர் ஆதாரமே தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து கொண்டிருக்கின்ற நிலையில், இந்தத் திட்டத்தால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிணறுகள், நூற்றுக்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள், குட்டைகள் அழித்து நாசமாக்கப்படும் என்று வெளிவரும் செய்திகளை, கடமை உணர்வும் பொறுப்பும் உள்ள, மக்கள்நலனில் அக்கறைகொண்ட ஓர் அரசு புறந்தள்ளி விட்டு, இத்திட்டத்தை நீர் ஆதாரங்களை அழித்து மண்மேடாக்கி நிறைவேற்றத் துடியாகத் துடிப்பது ஏன்?” எனக் கேள்வி எழுப்பினார்.
8 வழிச்சாலைக்கு ஆதரவாக தீர்ப்பளித்த நீதிபதிகளை சாடிய ஸ்டாலின்!
உயர்நீதிமன்றத்தால் எட்டு வழிச்சாலைக்கு எதிரான வழக்கில் விவசாயிகளுக்கு ஆதரவாக தீர்ப்பு வர, அப்போதிருந்த அதிமுக உச்சநீதிமன்றத்தின் கதவுகளை தட்டியது. இதையடுத்து எட்டு வழிச்சாலை திட்டத்தைச் செயல்படுத்தலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க, தீர்ப்பின் நகல் மனுதாரர்களுக்கு வழங்கப்படும் முன்னர் தீர்ப்பை எதிர்த்து எழுத்தப்பட்ட கண்டன அறிக்கை டெல்லியில் இருந்த அரசை நோக்கிப் (தாக்கி) பாய்ந்தது. அந்த கண்டன அறிக்கையை எழுதியவர் அப்போதைய தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தான்!
“விவசாயம், சுற்றுச்சூழல், ஏழை எளியவர்களின் வாழ்வாதாரம் அனைத்தையும் ‘அதிவேகமாக’ நாசமாக்கிவிட வேண்டும் என்று அ.தி.மு.க அரசும் - மத்திய பா.ஜ.க அரசும் கங்கணம் கட்டிக்கொண்டு இறங்கியிருப்பது, அப்பாவித் தமிழக மக்களுக்கு எதிரான மாபாதகச் செயல். மக்களின் நலன்களைக் காவு கொடுத்து, சுற்றுச்சூழலைப் பாழ்படுத்தி, விவசாயிகளின் முதுகெலும்பை முறித்து, சேலம் எட்டுவழிப் பசுமைச் சாலைத் திட்டத்தை நிறைவேற்றுவதை மத்திய, மாநில அரசுகள் உடனடியாகக் கைவிட்டு, அதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்" எனக் கடுமையாக விமர்சித்து அறிக்கை விட்டார் மு.க.ஸ்டாலின்.
திமுக தேர்தல் அறிக்கை திருத்தப்பட்டது எதற்காக? எட்டுவழிச்சாலைக்காக அல்லவா?
இந்தியாவிலேயே தேர்தலில் வென்றால் “மக்களுக்கு இதைச் செய்வோம்” என்று கூறி தேர்தல் அறிக்கை வெளியிட்ட கட்சி அப்போதைய அண்ணா தலைமையிலான திமுகதான். அவ்வளவு நேர்த்தியான தேர்தல் அறிக்கையை வடிவமைத்து ஒட்டுமொத்த மக்களையும் அவர்கள் தேர்தல் அறிக்கைகளைப் பற்றித் தான் பேச வைப்பார்கள். எல்லா தரப்பு மக்களையும், அனைத்து பகுதிகளுக்குமான திட்டங்களையும் முதன்முதலாக முன்வைக்கப்படும் அந்த தேர்தல் அறிக்கை பெரும்பாலான தருணங்களில் திருத்தப்படாது. ஆனால் 2021 ஆம் ஆண்டு 10 ஆண்டு கால எதிர்க்கட்சி காலத்திற்கு பின், திமுக சந்தித்த போது அறிவிக்கப்பட்ட அந்த தேர்தல் அறிக்கை திருத்தி மீண்டும் அறிவிக்கப்பட்டது. எதற்காக தெரியுமா? எட்டுவழிச் சாலை உள்ளிட்ட மக்கள் நலப் பிரச்சினைகளை முன்வைத்துதான்.
1. விவசாயிகளுக்கு எதிரான சேலம் – சென்னை 8 வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்பட மாட்டாது. (தேர்தல் வாக்குறுதி எண் 43)
2. அதானியின் காட்டுப்பள்ளி துறைமுகத்துக்கு அனுமதி அளிக்கப்பட மாட்டாது.
3. இந்திய குடியுரிமை திருத்த சட்டம் 2019-ஐ திரும்பப் பெற மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படும்.
4. இந்திய முகாம்களில் தங்கி இருக்கும் இலங்கை தமிழர்களுக்கு, இந்திய குடியுரிமை வழங்கிட வலியுறுத்தப்படும்.
5. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை 2020 நிராகரிக்கப்படும்.
இந்த 5 மக்கள் சார் பிரச்சினைகளை முன்வைத்து திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட முதல் வாக்குறுதிக்கும் அமைச்சரின் தற்போதைய பேச்சும் முரணாக இருக்கிறதே!
மோடியுடனான முதல் சந்திப்பில் முதல்வர் பேசியதும் எட்டுவழிச்சாலை பற்றித்தான்:
2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மைக்கும் அதிகமான தொகுதிகளைக் கைப்பற்றிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மே 7 அன்று தமிழ்நாட்டு அரசின் முதலமைச்சராக பதவியேற்றார். கொரோனா 2வது அலையில் சிக்கிய தமிழகத்தை மெல்ல மெல்ல மீட்டுக் கொண்டிருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியை ஜூன் 17 அன்று சந்தித்தார். முதல்வராக பதவியேற்றபின் நடக்கும் அந்த முதல் சந்திப்பில் தமிழ்நாடு சம்பந்தப்பட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமர் மோடியிடம் வழங்கினார் முதல்வர் ஸ்டாலின். அந்த பல கோரிக்கைகளில் முக்கிய கோரிக்கையாக சென்னை – சேலம் பசுமைவழிச் சாலைத் திட்டத்தை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையும் இடம்பெற்றிருந்தது.
மக்கள் பிரச்னைகளை கையாளும்போது கவனம்தேவை!
இரு சாதி இடையிலான கலவரங்களை செய்தியாக்கும்போது அதைச் செய்வதற்கான வழிமுறைகளை நீதிமன்றம் வகுத்திருக்கிறது. இது ஊடகங்களின் சுதந்திரத்தின் கைவைப்பது போல் அல்ல., அந்த செய்தியைப் பார்த்து இன்னும் சில கலவரங்கள் நிகழக்கூடாது என்ற புள்ளியில் நின்று நீதிமன்றம் அந்த விதிகளை வகுத்து வெளியிட்டு இருக்கிறது. இந்த காரணம் ஒருவகையில் மக்கள் பிரச்னைகளுக்கும் அதை கையாளும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் பொருந்தும். சில விநாடிகளில் உதிர்க்கப்படும் வார்த்தைகள், ஏற்கனவே தனது வாழ்வாதாரம் அபாயத்தில் இருப்பதாக அச்சத்தில் இருக்கும் மக்களுக்குள் அதிருப்தியை ஏற்படுத்தி எதிர்ப்பு மனநிலைக்கு வழிவகுத்து இருக்கும்.
விமான நிலையம் உருவாக்குதல் உள்ளிட்ட மக்கள் நல திட்டங்களை பொறுத்தவரை அவை தொலைநோக்கு பார்வையுடன் அணுக வேண்டியவை. நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்கு நிலங்களை கொடுத்த மக்களிடம் இன்றளவும் அதிருப்தி நிலவி வருகிறது. அதனால், மக்களிடம் அதிருப்தியை உருவாக்காத வகையில் திட்டங்களை செயல்படுத்துவதே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசிற்கு உகுந்ததாகும். திமுகவிற்கு இத்தகைய விவகாரங்களில் ஏற்கனவே போதிய முன் அனுபவம் உள்ளது. அதனையெல்லாம் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாகவும் உள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News