முன்னாள் முதலமைச்சரும் மறைந்த தி.மு.க. தலைவருமான கருணாநிதி கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7ம் தேதி வயது முதிர்வு காரணமாக காலமானார். அவருக்கு மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடியில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது.உதயசூரியன் வடிவத்தில் அமைக்கப்படும் நினைவிடத்தின் முகப்பில் பேனா வடிவத்தில் பிரம்மாண்ட தூண் ஒன்றும் அமைக்கப்படுகிறது. கருணாநிதியின் வாழ்க்கை, சிந்தனை குறித்த நவீன ஒளிப்படங்களும் அந்த நினைவிடத்தில் அமைய உள்ளது.
இந்தப் பணிகள் நடந்து கொண்டிருக்கக் கூடிய நிலையில், நடுக்கடலில் ரூ.80 கோடி செலவில் பிரம்மாண்ட பேனா வடிவம் ஒன்றை 134 அடி உயரத்திற்கு அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. மெரினா கடற்கரையில் கருணாநிதியின் நினைவிடத்தில் இருந்து 360மீட்டர் தொலைவில் நடுக்கடலில் இந்த பிரம்மாண்ட பேனா வடிவிலான நினைவுச் சின்னத்தை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் பரவியது.
பெரிய கேட் அமைத்து அதன் வழியாக மக்கள் கடல் மேல் நடந்து சென்று இந்த நினைவு சின்னத்தை பார்வையிடும் வகையில் வங்ககடலில் 650 மீட்டர் தூரத்துக்கு இரும்பு பாலம் அமைக்கவும் முடிவு செய்ததாக கூறப்பட்டது. பாலத்தில் நடந்து செல்லும் பகுதி முழுவதும் கண்ணாடி தரையாக அமைக்கப்படும் எனவும் இந்த பாலம் நிலத்தின் மீது 290 மீட்டரும், கடலின் மீது 360 மீட்டர் அமையும் வகையில் கட்டப்படும் எனவும் தகவல் பரவியது.
இந்த பிரம்மாண்ட கட்டுமானத்துக்கு 'முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவு சின்னம்' என்று பெயரிடப்படவும் திட்டமிடப்பட்டுள்ளதோடு, கிட்டத்தட்ட ரூ.80 கோடி மதிப்பில் அமைய உள்ளதாகவும் கூறப்பட்டது. கடலோர முறை ஒழுங்கு ஆணையத்தின் அனும திக்காக விரைவில் இந்த திட்டம் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக கூறப்பட்டது.
வலுத்த எதிர்ப்பு:
கடலுக்குள் கருணாநிதியின் நினைவாக பேனா வடிவில் நினைவுச் சின்னம் அமைக்கும் தமிழக அரசின் முடிவிற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புகளை பதிவு செய்தனர். இதில் இரண்டு விதமான கருத்துகள் பதிவானது. ஒன்று இது தேவையற்ற செலவு என்பது. மற்றொன்று மெரினா கடற்கரைப் பகுதியின் கடலுக்குள் நினைவுச் சின்னம் அமைப்பது சுற்றுச்சூழலுக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியது என்று சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தது. அரசியல் கட்சிகள் சிலவும் எதிர்ப்புகள் தெரிவித்தன.
ஏற்கனவே திட்டமிடப்பட்டதுதான் - அமைச்சர் எ.வ.வேலு:
கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் அமைப்பது ஏற்கனவே திட்டமிடப்பட்டதுதான் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். இது குறித்து பேசிய அவர், “கருணாநிதிக்கு கடலில் பேனா சிலை அமைப்பது ஏற்கனவே திட்டமிடப்பட்டதுதான்! புதிய அறிவிப்பு அல்ல. கருணாநிதி நினைவிடம் அமைக்கும் பணிகள் இரு கட்டங்களாக நடைபெறுகிறது. கடற்கரை ஓரமாக இருப்பதால் சுற்றுச் சூழல் அனுமதி பெற்றே பணிகள் நடைபெறுகிறது.
முதல் பகுதிக்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்றது. ஒரே நேரத்தில்தான் இரண்டு பணிகளுக்கும் அனுமதி கோரி மனு வழங்கியிருந்தோம் என்றாலும் இரண்டாம் கட்ட பணிக்கு தற்போதுதான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட பணிகள் குறித்து மாநில துறையின் அனுமதிக்கு தற்போது பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது.
பேனாவின் வடிவம் எப்படி அமைய உள்ளது என்பது குறித்து துறை சார்ந்து இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை. கருணாநிதிக்கு இதுபோன்ற பணிகளை செய்வதற்கு தமிழகம் நன்றிக்கடன் பட்டுள்ளது, அவருக்கு செய்யும் பணிகளை சிலர் சமூக வலைதளங்களிலும், அமைப்புகள் பெயிரிலும் விமர்சிப்பது கருணாநிதிக்கு செய்யும் துரோகம். கருணாநிதிக்கு செய்ய வேண்டிய கடமையை இந்த அரசு கண்டிப்பாக செய்யும். தமிழக மக்களுக்காக அதிக ஆணைகள் வழங்கியது கருணாநிதிதான். தண்ணீர், நகர்ப்புற மக்களுக்கு வீடு வழங்கியது கருணாநிதிதான்.” என்று தெரிவித்தார்.
இது வெறும் பத்திரிகைச் செய்திதான் - அதிகாரப்பூர்வமில்லை - அமைச்சர் மா.சு:
சுற்றுச்சூழல் சார்ந்த அமைப்புகள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அமைச்சர் மா சுப்பிரமணியன், இது “வெறும்” பத்திரிகை செய்திதான்., அதிகாரப்பூர்வ அறிவிப்பில்லை என்று தெரிவித்தார். இது குறித்து பேசிய அவர், “கடலுக்குள் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவாக பேனா போன்ற கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பாக அரசு இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. மெரினாவில் இருந்து கடலுக்குள் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவாக பேனா போன்ற கட்டமைப்பை அமைப்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசு இன்னும் வெளியிடவில்லை. அது வெறும் பத்திரிகைகளில் வந்த செய்தி மட்டுமே” என்று கூறினார்.
யார் சொல்வது உண்மை?
முக்கியத் துறைகளை கையாளும் மாண்புமிகு அமைச்சர்கள் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவகம் தொடர்பாக முரண்பட்ட தகவல்களை கூறி, குழப்பத்திற்கு வழிவகுக்கின்றனர். உண்மையிலேயே என்ன திட்டம் செயலாக்கம் பெற போகிறது? எவ்வளவு மதிப்பீட்டில் அது செயல்படுத்தப்படும்? என்பதை அறிந்து கொள்வது மக்களின் உரிமை! அதை தெரிவிப்பது அரசின் கடமை! முழு தகவலையும் தெரிவித்து குழப்ப அலையை துவக்கத்திலேயே அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News