லுங்கி திருடன் கைவரிசை! கணக்கு பார்க்க உண்டியலை திறந்த போது அம்பலமான திருட்டு

ஈரோட்டில் அடுத்தடுத்து இரு கோயில்களில் உண்டியலை உடைத்து காணிக்கை‌யை திருடி விட்டு பூட்டு போட்டு விட்டுச் சென்ற லுங்கி கொள்ளையனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஈரோடு மூலப்பாளையம் பேருந்து நிறுத்தம் பின்புறம் மாரியம்மன் மற்றும் முருகன் கோயில்கள் உள்ளன. வழக்கம்போல கோயில் நிர்வாகிகள் கோயில் கணக்குகளை சரிபார்த்து விட்டு, மாரியம்மன் கோயில் உண்டியலை திறந்து பார்த்துள்ளனர். அப்போது உண்டியலில் காணிக்கை இல்லாததால் சந்தேகமடைந்த நிர்வாகிகள் அருகில் உள்ள முருகன் கோயில் உண்டியலிலும் காணிக்கை கொள்ளையடிக்கப்பட்டதை கண்டறிந்தனர். இதையடுத்து தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு மோப்ப நாய், தடயவியல் நிபுணர்களுடன் வந்த டவுன் டிஎஸ்பி ஆனந்தகுமார், கைரேகைகள் உள்ளிட்ட தடயங்களை ஆய்விற்கு எடுத்து சென்றார்.

image

இதையடுத்து சிசிடிவி காட்சிகளை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்தனர். அக்காட்சியில் லுங்கியால் முகத்தை மறைத்து கோயில் சுவற்றில் ஏறிக் குதித்த மர்ம நபர் இரும்பு கம்பியால் உண்டியல் பூட்டை நெம்பி காணிக்கையை கொள்ளையடித்துள்ளான். பிறகு பூட்டை பழைய நிலையிலேயே வைத்து விட்டு சென்றது பதிவாகியுள்ளது. சமீபத்தில் ஆடி வெள்ளி கோலாகலமாக கொண்டாடப்பட்டதால் உண்டியலில் சுமார் 25 ஆயிரம் ரூபாய் முதல் 30 ஆயிரம் வரையிலான காணிக்கை கொள்ளையடிக்கப்பட்டு இருக்கலாம் என கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post