விஜய் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? தமிழ்நாட்டு மக்களிடம் பல ஆண்டுகளாக நீடித்து வந்த கேள்வி இது. இக்கேள்விக்கு முடிவான பதிலளிக்கும் வகையில் கட்சியின் பெயரை அறிவித்து அரசியல் பயணத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளார் விஜய்.
தமிழக வெற்றி கழகம் - இக்கட்சிக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைத்ததும் கட்சியின் கொடி மற்றும் சின்னம் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் தனது அரசியல் பிரவேசத்தை இன்று அறிவித்திருந்தாலும், நீண்ட காலமாக தனது திரைப்படங்கள் மூலம் ரசிகர்களிடையே அரசியலில் நுழைவதற்கான அடித்தளத்தை எழுப்பியுள்ளார்.
திரைப்படங்கள் வாயிலாக சமூக கருத்துகளைப் பேசுவதோடு மட்டுமல்லாமல், பாடல்கள் மூலமும் அரசியல் கருத்துகளைப் பேசியுள்ளார் விஜய். அவை குறித்து காணலாம்.
படிக்க | விஜய் என்ட்ரி! நாடாள முயன்ற நடிகர்கள்!
நடிகர் விஜய் தனது முதல் படமான நாளைய தீர்ப்பு படத்திலிருந்தே சமூக கருத்துகளைப் பேசியுள்ளார். அதில், சமூக அவலங்களை எதிர்க்கும் கல்லூரி மாணவனாகதான் திரையில் நாயகனாக அறிமுகமானார்.
தொடர்ந்து சில அதிரடி படங்களில் நடித்திருந்தாலும், அது கைகொடுக்காததால், குடும்ப ரசிகர்களைக் கவரும் வகையிலான படங்களில் நடித்தார்.
மெல்ல மெல்ல குடும்பக் கதையிலிருந்து சமூக கருத்துள்ள படங்களுக்கு மாறினார். நாயக பிம்பம் வளர வளர சமூக கருத்து நாளடைவில் தனிப்பட்ட அரசியல் கருத்துகள் கொண்ட படங்களாக மாறின.
அது எந்த அளவுக்கு என்றால்.... சைக்கிள் ஓட்டிக்கொண்டு சென்றாலே அதற்கு அரசியல் சாயம் பூசும் அளவுக்கு திரையில் விஜய் பேசும் அரசியல் வளர்ந்து நின்றது. அதற்கு முக்கிய காரணம், விஜய் படங்களில் இடம்பெற்ற பாடல்கள் முக்கிய காரணம் எனலாம்.
திருமலை, கில்லி, திருப்பாச்சி போன்ற மாஸ் ஹிட் படங்களுக்கு பிறகு, விஜய்க்கான அறிமுக பாடல்கள் அனைத்தும் அரசியல் கருத்துகள் தாங்கி நின்றன.
சமூக அரசியல் - தனிப்பட்ட அரசியல்
போக்கிரி படத்தின் அறிமுகப் பாடலில் 'சேரி இல்லா ஊருக்குள்ள பிறக்க வேண்டும் பேரப்புள்ள', 'தீப்பந்தம் எடுத்து தீண்டாமை கொளுத்து, இதுதான் என் கருத்து' ...என்ற வரிகள் தமிழ்நாட்டு அரசியலைப் பேசின.
அதன்பிறகு வெளியான, வில்லு - அறிமுகப் பாடல், 'ஆண்டவன்தான் என்ன பாத்து என்ன வரம் வேண்டும் என்று கேட்டா, அகதியான மக்களுக்கு அமைதியான நாடு கேப்பேன்'... என ஈழத்தமிழர் பிரச்னையை பேசியிருப்பார். அதில் பாரதி, காரல் மார்க்ஸ் போன்றவர்களையும் குறிப்பிட்டிருப்பார். அந்தசமயத்தில் விஜய் அறிவுறுத்தலின்பேரில், ரசிகர் மன்றத்தினர் ஈழத்தமிழர் பிரச்னைக்கு குரல் கொடுத்து உண்ணாவிரதம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
படிக்க | 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டி: நடிகர் விஜய்
புலி படத்திலும் மனிதா மனிதா பாடல் மூலம் ஈழத்தமிழர் பிரச்னைகளைப் பாடியிருப்பார்.
'கூட்டு பறவைகளா இந்த காட்டில் பிறந்தோம்
கைவீசித் திரிந்தோம்
சிந்தும் கைகளால் நவதானியம் விளைந்தது நம்மாலே
திசை எட்டும் தெறிக்கட்டும்
புறப்படு புறப்படு புலி இனமே' என்ற வரிகள் ஈழத்தமிழர்களுக்கான எழுச்சியை பேசுவதாகவே இருந்தது.
வேட்டைக்காரன் படத்தில் 'உணவு உடை இருப்பிடம் உழவனுக்கு கிடைக்கனும், அவன் அனுபவிச்ச மிச்சம்தான் ஆண்டவனுக்கு படைக்கனும்' என்ற வரிகள் மூலம் விவசாயிகள் பிரச்னைகளுக்கு குரல் கொடுத்திருப்பார். கடன், வறட்சியால் விவசாயிகள் தற்கொலை அதிக எண்ணிக்கையில் இருந்த சமயம் அது.
இதற்கு காரணமானோர் அரசியல்வாதிகள் என்பதை குறிப்பிட்டு சொல்லும் வகையில், 'வரட்டி தட்டும் சுவருல வேட்பாளர் முகமடா, காத்திருந்து ஓட்டு போட்டு காச்சுபோச்சு நகமடா' என்று விமர்சித்திருப்பார் விஜய்.
படங்கள் வெளியாவதில் எழும் பிரச்னைகளுக்கு பதிலளிப்பதுமுதல் தனது அரசியல் நிலைப்பாட்டையும் விஜய் பட பாடல்கள் வலியுறுத்தின. 2009ஆம் ஆண்டு தனது ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்றினார். அதன்மூலம் பல நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
அதுவரை சமூக அரசியலை மட்டுமே பேசியிருந்த நடிகர் விஜய், படங்களுக்கு எழும் பிரச்னைகளைத் தொடர்ந்து தனிப்பட்ட அரசியலையும் பேசத்தொடங்கினார்.
படங்கள் வெளியாவதில் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுடன் பிரச்னை எழுந்தன. அப்போது வந்த படம்தான் வேலாயுதம். அப்படத்தில்...
'ரத்தத்தின் ரத்தமே, என் இனிய உடன்பிறப்பே', என்ற பாடலைப் பாடியிருப்பார். இது தங்கைக்கான பாடலாக அப்படத்தில் இருக்கும். ஆனால், உண்மையில் இது இரு திராவிட கட்சிகளையும் குறிக்கிறது.
படிக்க | அரசியல் கட்சி தொடங்கிய விஜய்: வாழ்த்தி, வரவேற்ற அரசியல் பிரமுகர்
ரத்தத்தின் ரத்தமே என்பது ஜெயலலிதாவின் வாக்கியம். என் இனிய உடன் பிறப்பே என்பது கருணாநிதியின் வாக்கியம். இந்த இரு வாக்கியங்களையும் கொண்டு அப்பாடலை விஜய் தொடங்கியிருப்பார். இந்த படத்தில் 'வரப்பு மிதிச்சி ராப்பகலா உழைக்கிற ஜனங்க நம்ம கட்சி' என்ற வரியும் உண்டு.
கத்தி படத்தில் விவசாயிகள் பிரச்னை, 2ஜி ஊழல், வெளிநாட்டு குளிர்பான உற்பத்தி என பல அரசியல் கருத்துகளைப் பேசியிருப்பார். இதில் விஜய்க்கு எழுந்த பாஜக எதிர்ப்பு, அடுத்து வந்த மெர்சல் படத்தில் மேலும் வலுவடைந்தது.
மெர்சல் படத்தில் ஜிஎஸ்டியை விமர்சித்திருப்பார். இதனால் பாஜக கொந்தளித்தது. விஜய்யின் மதம் சார்ந்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. பேதமற்று பலதரப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்தவரை, ஜோசப் விஜய் என அடையளப்படுத்தி குறிப்பிட்டு விமர்சித்திருந்தது பாஜக.
மெர்சல் படத்தில் ஆளப்போறான் தமிழன் என்ற பாடல் முழுக்க தமிழரின் பெருமைகளைத் தாங்கி நிற்கும். அப்போது தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்றது.
பாஜகவின் விமர்சனத்துக்குப் பிறகு விஜய் தனது பெயரை ஜோசப் விஜய் என்று பகிரங்கமாக பயன்படுத்தி சில அறிக்கைகளையும் விட்டார். அதோடு அதற்கு அடுத்தடுத்து - பிகில் படத்தில் மைக்கேல் ராயப்பனாகவும், மாஸ்டர் படத்தில் ஜேடி என்னும் ஜான் துரைராஜ்-ஆகவும் கிறிஸ்தவ பெயர்களைக் கொண்டே தனது பாத்திரங்களில் நடித்திருப்பார்.
இப்படி, கட்சிகளின் விமர்சனங்களுக்கு அஞ்சி பின்வாங்காமல் படத்தில் செய்த அரசியலை, விஜய் நிஜத்திலும் செய்வாரா?
from Dinamani - சிறப்புச் செய்திகள் - https://ift.tt/ViHz1yn