தமிழகத்தில் 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு மகத்தான தொடக்கத்தை பிரதமர் வருகையுடன் திருச்சியிலிருந்துதொடங்கி யுள்ளது தமிழக பாஜக.
குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி, தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக 2013-இல் அறிவிக்கப்பட்ட பிறகு தமிழகத்தில் முதலாவது மாநாடு திருச்சியில்தான் நடைபெற்றது. கடந்த 2013-ஆம் ஆண்டு "இளம் தாமரை மாநாடு' என்ற பெயரில் செப்டம்பர் 26-ஆம் தேதி திருச்சி ஜி. கார்னர் மைதானத்தில் செங்கோட்டை வடிவில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட மேடையில் நிகழ்வுகள் நடைபெற்றன.
அன்றைய தினம் நரேந்திர மோடி ஆற்றிய உரை தமிழகத்தில் பாஜகவுக்கு புது ரத்தம் பாய்ச்சியதாக அக்கட்சியினர் கருதினர். இதன் தொடர்ச்சியாக, 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஆட்சியைப் பிடித்து பிரதமரானார் நரேந்திர மோடி. ஐந்தாண்டுகளுக்குப் பிறகு, 2019-ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமராகவே தமிழகம் வந்தார் மோடி. ஆனால் திருச்சிக்கு வரவில்லை.
தற்போது, 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளும் பாஜக, பிரதமரின் திருச்சி வருகையுடன் தேர்தல் பிரசாரத்துக்கு உரமிட்டுள்ளதாகவே பார்க்கப்படுகிறது. குறிப்பாக, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிய பிறகு, தமிழகம் மீது பிரதமர் மோடி தனி கவனம் செலுத்துவதை கவனிக்க முடிகிறது.
சமீபத்திய திருச்சி விழாவில் பிரதமர் பேசியபோது, தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம் தன்னுள் புதிய சக்தியை நிரப்பிக் கொண்டு செல்வதாகப் பெருமிதப்பட்டார். முந்தைய காலங்களில் தமிழகத்துக்கு பிரதமர் வருகை தரும் போதெல்லாம் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் பிரதமருக்கு எதிரான ஹேஷ்டேக்குகளை சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்வர். கருப்புக் கொடி, கருப்பு பலூன்களை பறக்கவிடுவர். ஆனால், இம்முறை பிரதமர் இருந்த மேடையிலேயே முதல்வர் மு.க.ஸ்டாலினும் இருந்தார். விழா அரங்கில் பாஜகவினர் எதிர்ப்பு முழக்கமிட்டபோது, குறைந்த எண்ணிக்கையில் இருந்த திமுகவினர் அமைதி காத்தனர்.
திருச்சி நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி மத்திய அரசு தமிழகத்துக்கு நிறைவேற்றிய திட்டங்கள் பற்றியும், முதல்வர் மு.க.ஸ்டாலின் தமது தலைமையிலான திமுக ஆட்சியின் சாதனைகளையும் குறிப்பிடத் தவறவில்லை. மொத்தத்தில் அரசு விழா மேடையை இருவருமே தங்களுக்கான வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டனர்.
பிரதமரின் திருச்சி வருகை நிகழ்வில், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், ஜி.கே. வாசன் (தமாகா), டி.ஆர். பச்சமுத்து (இந்திய ஜனநாயக கட்சி), ஏ.சி. சண்முகம் (புதிய நீதிக் கட்சி), ஜான் பாண்டியன் (தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்), கே.கே. செல்வகுமார் (தமிழர் தேசம்) உள்ளிட்டோரும் பங்கேற்றது தமிழகத்தில் அதிமுக நீங்கலான பாஜகவின் புதிய கூட்டணிக்கான தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது.
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டியது, தேமுதிகவினரை பாஜக கூட்டணி வசம் ஈர்க்கும் உத்தியாக கருதப்படுகிறது. இதே நாளில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழக பாஜகவின் செயற்குழுக் கூட்டத்தையும் திருச்சியிலேயே நடத்தி மக்களவைத் தேர்தல் உத்திகள் குறித்து விவாதித்தார்.
இந்த நிகழ்வுகள் பாஜகவுக்கு கிடைத்த வாய்ப்பு என அக்கட்சியின் மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார். "கடந்த 2013-இல் ஒரு மாநில முதல்வராக நரேந்திர மோடி தமிழகத்துக்கு வந்தபோது இந்த மக்கள் அவரை உணராதவர்களாக இருந்தனர். இருப்பினும், 2013-இல் நரேந்திர மோடி வருகையின்போதே மாபெரும் எழுச்சியைக் காண முடிந்தது. தற்போது, மக்கள் அனைவரும் பிரதமரை நன்கு உணர்ந்தவர்களாகிவிட்டனர். திருச்சி எங்களுக்கு திருப்புமுனை' என்கிறார் பொன். ராதாகிருஷ்ணன்.
from Dinamani - சிறப்புச் செய்திகள் - https://ift.tt/emlfGig